Sunday 26 March 2017

கோபி சார்! நீயா? நானா?


கோபி சாரின் கடந்த வாரம் (19.3.17)  ஒளிபரப்பேறிய "நீயா நீனா" நிகழ்ச்சியைப் பற்றிய விவாதங்கள் தொடர்ந்து நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

பங்குப் பெற்ற பெண்களைப் பற்றிய விவாதங்கள் நின்ற பாடில்லை! சராமாரியான கேள்விக்கணைகள்! சும்மா விளாசு, விளாசு என்று விளாசிக் கொண்டிருக்கின்றனர். இணையத்தளத்தினருக்கு வாய்ப்புக் கிடைத்தால் என்ன செய்வார்கள் என்பதை இப்போது அந்தப் பெண்கள் உணர்ந்திருப்பார்கள்!

ஆனால் இவர்கள் கருத்தில் நான் வித்தியாசப்படுகிறேன்.

முதலில் இந்தப் பெண்கள் முன்னால் அவர்களின் தாயார்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். பங்கேற்றப் பெண்கள் பலர் தங்களின் தாயார்களைச் சீண்டிப் பார்க்க வேண்டும் என்னும்  கருத்துடையவர்களாகவே இருந்தவர்கள். ஏதோ ஒரு வகையில் அவர்களின் தாயார்கள் மேல் அவர்களுக்குக் கோபம் உண்டு. அந்தக் கோபத்தைக் காட்ட இந்தத் தளத்தைப் பயன் படுத்திக் கொண்டார்கள் என்பதாகவே தோன்றுகிறது.!

இவர்கள் தான் பாரதி கண்ட புதுமைப் பெண்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இவர்கள் மிகவும் வித்தியாசமாக சிந்திக்கும் பெண்களாக இருக்கிறார்கள்.

அதற்காகவே அவர்களைப் பாராட்ட வேண்டும். முதலில் மாட்டுவண்டியில் திருமண ஊர்வலம். இப்போது காரில் திருமண ஊர்வலம். ஒரு பெண் வித்தியாசமாகச் சிந்திக்கிறார். அது ஏன் விமான ஊர்வலமாக இருக்கக் கூடாது? நடக்க முடியாத காரியம் அல்ல. அது நடக்கக் கூடிய காரியம் தான். இதற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு? அவருடைய ஆசையைச் சொன்னார்.  அவ்வளவு தான்!

இப்போது பெண்கள் படித்தவர்களாக இருக்கிறார்கள். கை நிறைய சம்பாதிக்கிறார்கள். அவருடைய பணத்திலேயே அந்தப் பெண் இதனைச் சாதிக்கலாம். அவர் திருமணம் செய்யப்போகும் அந்த மணமகனும் ஒத்தக் கருத்துடையவராக இருந்தால் இருவரும் சேர்ந்து விமான ஊர்வலம் வரலாம்! எல்லாம் சாத்தியமே!

ஒரு பெண் தனது ஆசையைச் சொல்ல முடியாத ஒரு சமுதாயத்திலா நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? தங்களுடைய ஆசைகளை வெளியே சொல்ல - தங்களது தாயார்களை வைத்துக் கொண்டு - அவர்களால் முடியாது என்று தெரிந்தும் - அவர்கள் தங்களது கனவுகளை அங்கே ஒப்புவிக்கிறார்கள்! அவர்களுக்கு அது ஒரு வாய்ப்பு. அப்படித்தான் நாம் அதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவர்களுடைய ஆசைகள் அவர்களின் பெற்றோர்களால் தீர்த்து வைக்க முடியாத ஆசைகளாக இருக்கலாம். ஆனால் நிச்சயமாக ஒரு நாள் அவர்களுடைய ஆசைகள் அவர்களது சொந்தப்  பணத்திலேயே  நிறைவேறும் என்பது மட்டும் உறுதி.

கனவு காணுங்கள்! பெரும் கனவு காணுங்கள்! கனவுகள் நிறை வேற உழையுங்கள்! உங்கள் கனவுகள் நிறைவேற வாழ்த்துகள்!

No comments:

Post a Comment