Tuesday 21 March 2017

தமிழக ஊடகங்களே பொறுப்பு!


இன்றைய நிலையில் தமிழகத்தில் நடைபெறுகின்ற பல அநியாயங்களையும், அக்கப்போர்களையும் பார்க்கின்ற போது நமது குற்றச்சாட்டுகள் எல்லாம் தமிழக ஊடகங்கள் மீது தான் சொல்ல வேண்டி வரும்!

வெட்கக்கேடான விஷயம் தான்! என்ன செய்வது? நிச்சயமாக அவர்கள் தான் குற்றவாளிகள்!

தமிழக பத்திரிக்கைகளையோ மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையோ தமிழகத்தோடு சம்பந்தமில்லாத ஒருவர் பார்த்தால் அங்கு நடப்பதெல்லாம் உலகிலேயே மிகவும் எடுத்துக்காட்டான ஒர் அற்புத ஆட்சி நடப்பதாகவே நினைக்க வேண்டி வரும்! அந்த அளவுக்கு ஒன்றுமே தெரியாத அப்பாவிகள் போல் இந்த ஊடகங்கள்  நடந்து கொள்ளுகின்றன!

தமிழகத்தில் எத்தனை பிரச்சனைகள்? ஆனாலும் ஒன்றுமே நடவாது மாதிரி ஊடகங்கள் நடந்து கொள்ளுகின்றன!  எல்லாம் அரசியல்வாதிகளின் அடிமைகளாகவே செயல்படுகின்றன! ஏதோ  எங்களுக்கும் மக்களின் பிரச்சனைகளுக்கும் சம்பந்தமே இல்லாதது போல மக்களுக்குத் துரோகங்கள் இழைக்கின்றன!

ஏழை மீனவர்களின்  பிரச்சனை, ஏழை விவசாயிகளின் பிரச்சனை, நெடுவாசலில் நீளுகின்ற போராட்டம், காவேரி பிரச்சனை, முல்லையாறு பிரச்சனை, ஆந்திராவில் தமிழர்களுக்கு எதிரான அரசாங்கத்தின் வன்முறை - இப்படி ஒவ்வொரு நாளும் தமிழர்கள் பிரச்சனையை எதிர் நோக்குகின்றனர்.

ஆனால் நமது ஊடகங்களுக்கு இதெல்லாம் பிரச்சனையாகவே தோன்றவில்லை! அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் அமெரிக்கா பக்கம் ஓடிப்போனால் போதும் என்னும் மன நிலையிலேயே செயல்படுவதாகவே தோன்றுகிறது!

பிள்ளைகள்  ஓடிப் போகலாம் ஆனால் பெற்றோர்கள் இங்கு தானே இருக்க வேண்டி வரும். அவர்கள் குடிப்பதற்கு தண்ணீராவது வேண்டும் அல்லவா! சாப்பாடு போடுவதற்கு விவசாயம் வேண்டும் அல்லவா! தமிழன் தமிழ் நாட்டிலேயே உதை வாங்காமல் இருக்க வேண்டும் அல்லவா! அதற்கு நாட்டை ஆள- தமிழ் மாநிலத்தை ஆள - நல்ல அரசியல் தேவை அல்லவா! 

நமது ஊடகங்கள் இதையெல்லாம் மறந்துவிட்டார்களோ என்று தான் நாம் நினைக்கத் தோன்றுகிறது. ஒரு பிரச்சனையுமே இல்லாதது போல ஆட்டம்  பாட்டம் என்னும் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்!

ஒரு சினிமா படத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவம் சாகிற விவசாயிற்குக் கொடுப்பதில்லை. தமிழக மீனவன் எத்தனை பேர் சாகிறான் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.தமிழகத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதாகத்தான் "ஷோ" காட்டுகிறார்களே தவிர உண்மைகளை வெளிக்கொணர எந்த முயற்சியும் எடுப்பதில்லை!

மீனவர் சுட்டுக்கொலைச் செய்யப்படுகின்றார்கள் என்றால் - ஒரு மாதத்திற்காவது அந்தப் பிரச்சனையை - முக்கிய செய்தியாக ஊடகங்கள் பெரிது படுத்தினால் மத்திய அரசு சும்மா வாயைப் பொத்திக் கொண்டா இருப்பார்கள்? கேரளா தான் செய்ய முடியும் தமிழ் நாடு செய்ய முடியாதா?

எந்தப் பிரச்சனையும் இல்லாத ஒரு மாநிலமாக நமது ஊடகங்கள் தமிழ் நாட்டை வெளி உலகிற்குக் காண்பித்துக் கொண்டிருக்கின்றன. இது  துரோகம் மட்டும் அல்ல. ஒரு மாநிலத்தைச் சாகடிக்கின்ற முயற்சி! இதற்குப் படித்தவர்கள் துணை போகிறார்கள். இதை விடக் கேவலமாக எப்படி ஒரு மனிதன் வாழ முடியும்?

தமிழ் நாட்டின் இன்றைய நிலைக்கு நமது ஊடகங்களே பொறுப்பு ஏற்க வேண்டும்! ஊடகங்களே பொறுப்பு!

No comments:

Post a Comment