Thursday 23 March 2017

"நான் தோல்வி அடைந்து விட்டேனோ?"


"நான் தோல்வி அடைந்து விட்டேனோ?"  என்கிற எண்ணம் உங்கள் மனத்தில் தோன்றுகிறதா?

வேண்டாம்! அப்படி ஒரு எண்ணத்தை மனத்தில் வளர்த்துக் கொள்ளாதீர்கள்!

"இனி மேல் செய்வதற்கு என்னிடன் என்ன இருக்கிறது? அனைத்தும் முடிந்து விட்டது!  என்னிடம் இருந்தவை  அனைத்தும் என்னைவிட்டுப் போய்விட்டன! இப்போது அனைத்தையும் இழந்த மனிதனாக நிற்கிறேன்! இனி மேலும் வெற்றிபெற என்ன வாய்ப்பு இருக்கிறது?" என்னும் முணுமுணுப்பு எனக்கும் கேட்கத்தான் செய்கிறது.

எது நடந்தாலும் சரி.  நாம் வெற்றியைத்தான் நமது மனதில் நிரப்பி இருக்க வேண்டும்.  இனிமேல் என்ன இருக்கிறது என்று கேட்பதை விட இனியும் என்னிடம் நிறைய இருக்கிறது; சீக்கிரம் எனது பலத்தை நான் காட்டுவேன் என்னும் எண்ணம் தான் நாம் மீண்டும் எழுந்து நிற்க உதவும்.

ஒன்றுமே இல்லை என்னும் எண்ணமே நம்மை நலிந்து போகச் செய்யும். ஒன்றுமே இல்லை என்றாலும், என்னிடம் நிறையவே இருக்கிறது என்னும் எண்ணமே நம்மை நிமிரச் செய்யும்.

ஒன்று மட்டும் நிச்சயம். நேர்மறை எண்ணங்கள் நம்மை உருவாக்குபவை. எதிர்மறை எண்ணங்கள் நம்மை அழிக்கக் காத்திருப்பவை!

எதுவுமே இல்லை ஆனாலும் எல்லாமே உண்டு என்னும் உங்களின் நேர்மறை எண்ணம் உங்களுக்கு என்ன தேவையோ உங்களை அங்குக் கொண்டு போய்ச் சேர்க்கும். அல்லது உங்களை அது தேடி வரும். இது தான் நமது எண்ணங்களின் சக்தி.

சில ஆண்டுகளுக்கு முன் வட இந்திய மாநிலத்தில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம். ஒரு விவசாயி தான் விவசாயம் செய்யும்  டிராக்டரை தனது வீட்ட்டின் அருகே கொண்டு வர முடியாமல்  வீட்டில் முன்னால் உள்ள ஒரு  மலை இடையூறாக இருந்தது. அவர் பலரிடம் முறையிட்டும் யாரும் அவரைக் கண்டு கொள்ளவில்லை.

கடைசியாக தன் கையே தனக்கு உதவி என்னும் ஆயுதத்தை கையில் எடுத்தார். தனது வீட்டுப் பகுதியிலிருந்து  மலையடிவாரத்தின்  அடிப்பகுதியைலிருந்து  நோண்ட ஆரம்பித்தார்.  அது ஒரு நீண்ட தூரம்.  பார்த்தவர்கள் சிரித்தார்கள். அதைப்பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை. கருமமே கண்ணானார். பல ஆண்டுகள் பிடித்தன. அவருடைய பிடிவாதத்தையும், போர்க்குணத்தையும் பார்த்து மற்றவர்களும் உதவிக்கு வந்தனர். எல்லாம் ஒருவகையாக முடிவுக்கு வந்தன. இப்போது அவர் வீட்டின் அருகிலேயே அவருடைய டிராக்டர் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது!

பல ஆண்டுகள் என்னும் போது அது ஒரு நீண்ட காலப் போராட்டம். அது பற்றி கவலை இல்லை. வெற்றி பெற வேண்டும். அது தான் அவரது நோக்கம். அந்தப் பிடிவாதம், அந்த வெறி மற்றவர்களையும் அவர் பால் ஈர்த்தது.

நம்மிடையே அசைக்க முடியாத மன உறுதி இருந்தால் அனைத்தும் நம் வசமாகும். தோல்வி என்பதற்கே இடமில்லை!

No comments:

Post a Comment