Thursday 22 June 2017

நாடற்றவர் 3,00,000 லட்சமா?


நாடற்றவர்கள் என்று சொல்லப்படவில்லையே தவிர அதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளவர்களாக 3,00,000 இந்தியர்கள் இருப்பதாக எதிர்கட்சியினர் கூறுகின்றனர்.  இல்லை! இல்லை! அது தவறு. சுமார் 2,000 பேருக்கு மேல் இருக்கலாம் என்பதாக நாட்டின் ஆளுங்கட்சியின் ஓர் அங்கமான ம.இ.கா.  கூறுகிறது!

இவர்கள் அனைவரும் இங்கு, இந்நாட்டில் பிறந்தவர்கள் தான். அதில் எந்த குறைபாடும் இல்லை. ஆனால் பிறப்புப் பத்திரம் இல்லை. அதனால் அடையாளக்கார்டும் இல்லை. இந்தப் பிரச்சனைகளினால் வேலை கிடைப்பதில்லை. குழந்தைகள் பள்ளி செல்ல முடிவதில்லை. பிழைப்புக்கான வழி இல்லை.

முதலில் இந்தப் பிரச்சனைகளுக்கானக் காரணங்கள் என்ன என்பதை கண்டறிய வேண்டும். ஆரம்ப காலங்களில் பிறப்புப் பத்திரம் எடுப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. குழந்தை பிறந்ததும் மருத்துவமனையிலேயே பிறப்புப் பத்திரங்களை எடுத்து விட முடியும். இந்த நடைமுறையை சம்பந்தப்பட்ட  பதிவிலாகா மாற்றி  அமைத்தது. இந்த மாற்றத்தினால் பல குளறுபடிகள். ஏறக்குறைய இந்தியர்களுக்கு எதிரான நடைமுறை இது என்றே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியர்கள் அதிகமான பேர் தோட்டப்புறங்களில் வேலை செய்கிறவர்கள்.  இந்த நடைமுறையினால் ஒரு  நாளில் முடிக்க வேண்டிய பிரச்சனையை குறைந்தபட்சம் பத்து நாள்களுக்கு இழுத்துக் கொண்டுப் போகும் பிரச்சனையாக மாற்றி விட்டார்கள். தோட்டங்களில் ஒரு நாள் விடுமுறை எடுக்கலாம். ஆனால் நீண்ட நாள் விடுமுறை என்றால் அவர்களுக்கு அங்கு பிரச்சனைகள் ஏற்படும். இப்படிப் பல தொல்லைகள் இந்தியர்களுக்குச் சுமையாக மாறி விட்டன. விபரம் தெரிந்தவர்கள் விடாப்பிடியாக பிறப்புப்பத்திரங்களை எடுத்துக் கொண்டனர். இன்னும் சிலர் ஒருவித சலிப்பினால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்னும் மன நிலைக்குத் தள்ளப்பட்டனர்.  இப்போது நம் முன் உள்ள பிரச்சனைகள் எல்லாம் "பிறகு பார்த்துக் கொள்ளலாம்"  என்னும் மன நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் பிரச்சனைகள் தான்!

இன்றைய ம.இ.கா. அப்போதும் இருந்தது. இன்றைக்கு உள்ளது போல அன்றைக்கும் பதவி! பதவி! பதவி! அதைத் தவிர அவர்களுக்கு வேறொன்றுமில்லை!  கொஞ்சம் புத்தியைப் பயன்படுத்திருந்தால் இந்தப் பிரச்சனைகளுக்கு அன்றே ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். இந்தியர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ம.இ.கா. எந்தக் காலத்திலும் காது கொடுத்துக் கேட்பதில்லை! அறிந்து கொள்ள முயற்சிப்பதும் இல்லை!

இப்போது கூட தேர்தல் கூடிய  சீக்கிரம் வரலாம் என்னும் நோக்குடன் தான் ம.இ.கா. இந்த "மெகா மைடாஃப்தார்"  பிரச்சனையைக் கையில் எடுத்திருக்கிறது! இவர்கள் சொல்லுவதையே சொல்லிக் கொண்டிருப்பார்கள். அரசாங்கம் செய்வதையே செய்து கொண்டிருக்கும்! அதாவது முடிந்தவரை அவர்கள் சாகப்போகும் காலத்தில் ஒரு எழுபது வயதுக்கு மேல் அடையாளக்கார்டு கொடுப்பார்கள்! இது தான் நடந்து கொண்டிருக்கிறது. ஆயிரம் பேர் மனு  செய்தால் ஒருவருக்குத்தான் அடையாளக்கார்டு கிடைக்கும். அதற்கும் ஒரு பத்து, இருபது வருடங்கள் காத்துக் கிடக்க வேண்டும்.

எந்தப் பக்கமும் ஒரு நியாயம் இல்லை; உண்மையும் இல்லை. ம.இ.கா. சீறி எழுந்தால் தவிர இதற்கு எந்த முடிவும் கிடைக்கப் போவதில்லை! அப்படியெல்லாம் நடக்கும் என்பதற்கான அறிகுறியும் இல்லை!




No comments:

Post a Comment