Wednesday 21 June 2017

நடிகர் வடிவேலு தேறுவாரா..?


என்ன தான் சொல்லுங்கள் நடிகர் வடிவேலுவின் நகைச்சுவையை அடித்துக் கொள்ள இன்னும் யாரும், எந்த நடிகரும், வரவில்லை என்பது உண்மையிலும் உண்மை! அவரின் எடத்தை நிரப்புவதற்கு இன்னும் எந்த நடிகரும் தயாராக இல்லை.

அவருக்குப் பின்னர் பலர் வந்திருக்கின்றனர். குறிப்பாக சந்தானம் இன்னும் பலர். ஆனால் இவர்கள் பாணி நகைச்சுவை என்பது வேறு. வடிவேலுவின் நகைச்சுவை என்பது வேறு. மதுரைத் தமிழ் மட்டும் அல்ல; கிராமத்துத் தமிழ் என்பதும் வடிவேலுக்கு கொஞ்சம் கூடுதல் பலம்! அவர் ஒல்லியாக இருந்த போது அவருடைய உடல் அசைவுகள் மிக அபாரம்.  அவர் கொஞ்சம் கூடுதல் எடைப் போட்டிருந்தாலும் இன்னும் அவரின் நகைச்சுவைக்கு ஈடு இணையில்லை!

ஆனாலும் என்ன தான் அவருக்குத் திறமை இருந்தாலும்,  ஜெயலலிதாவின் அரசியல் வன்மம், திரைத்துறையில் அவருக்கு   நீண்ட ஈடைவெளியை ஏற்படுத்திவிட்டது.

இப்போது அவரின் திரையுலக மறுபிரவேசம் என்பது எளிதாக இல்லை என்பது தான் உண்மை. சமீப காலமாக அவர் நடித்து வெளி வந்த படங்கள் பெரிய அளவில் வரவேற்புப் பெறவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் இளைய தளபதி விஜய், வடிவேலுவின் நகைச்சுவைப் பற்றி நல்லதொரு கருத்தினை வெளியிட்டிருக்கிறார். ஒரு வேளை தனது நடிப்பில் இனி வரும் படங்களில் விஜய் அவருக்கு வாய்ப்புக் கொடுக்கலாம். பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களில் அவர் நடித்தால் ஒரு வேளை அவர் படங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கலாம்.

இதுவும் கூட பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம் தான். எத்தனை தயாரிப்பாளர்கள் அவரை வரவேற்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதும் யோசிக்க வேண்டி உள்ளது. அவர் "நல்லா" இருந்த காலத்தில் இயக்குனர்களிடமும் தயாரிப்பாளர்களிடமும்  எப்படி நடந்து கொண்டார் என்பதும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. "கழுத்து வரை காசு இருந்தால்" கழுதை கூட முறைத்துப் பார்க்கும் உலகமிது! அவரை எதிரியாக நினைப்பவர்கள் எவரும் அவர் பக்கம் நெருங்கமாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம்!

வடிவேலு நல்ல நகைச்சுவை நடிப்பைக் கொடுப்பவர். அதில் எந்தச் சந்தேகமுமில்லை. இன்னும் சில படங்கள் வெளியானால் தான் அவர் தேறுவாரா, தேறமாட்டாரா என்று சொல்ல முடியும்.
தேறவில்லை என்றால் அவருடைய பழைய படங்களைப் பார்த்துச் சிரித்து மகிழ வேண்டியது தான்!


No comments:

Post a Comment