Wednesday 7 June 2017

"ஆலோங்" கை ஓங்குகிறதா?


தமிழ் நாட்டில் கந்து வட்டிக்காரர்களை எப்படி அழைப்பார்கள் என்று எனக்குத்  தெரியவில்லை. நமது நாட்டில் "ஆலோங்" என்று சொன்னாலே நமக்கு யார் என்று புரிந்துவிடும்.  அந்த அளவுக்கு அவர்களைப் பற்றிய செய்திகளை நாம் படித்து வருகிறோம்.

கடைசியாக இந்த வட்டி முதலைகளிடம் அகப்பட்ட ஒரு தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டது மிகவும் அதிர்ச்சியான ஒரு தகவல். இது நடந்தது புக்கிட் மெர்தாஜம்,  பாயு முத்தியாரா அடுக்குமாடி குடியிருப்பில்.

விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருந்த இந்தக் காதலர்கள் ஒன்றாகவே கடந்த சில வருடங்களாக வாழ்ந்து வந்திருக்கின்றனர். வட்டி முதலைகளிடம் வாங்கிய பணத்தைக் கட்ட  முடியாத ஒரு சூழலில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. தங்களது படுக்கை அறையில் கரிமூட்டி அந்தப் புகையில் மூச்சுத்திணறி இவர்கள் தங்களின் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கின்றனர்.

மிகவும் வேதனையான ஒரு செய்தி.  இந்தக் கந்து வட்டிக்காரர்களால் நமது நாட்டில் ஏகப்பட்ட  பிரச்சனைகள் என்பது நமக்குப் புரிகிறது. காவல் துறையினரின் நடவடிக்கை போதவில்லையோ என்று நாம் ஐயுற்றாலும் காவல் துறை நடவடிக்கை எடுத்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் வழக்கம் போல இவர்கள் காவல் துறைக்கே கடன் கொடுப்பவர்களாக இருக்கின்றனர். என்ன செய்வது?

ஆனால் இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று உண்டு. இதில் வட்டி முதலைகள் என்றால் பெரும்பாலும் சீனர்கள். ஏதோ ஒன்றிரண்டு இந்தியர்கள் இருக்கலாம். ஆனால் இந்த வட்டி முதலைகள் மிகவும் பாதுகாப்பாக இருக்கின்ற்னர். இதில் பாதிக்கப்படுகின்றவர்கள் பெரும்பாலும் இந்திய இளைஞர்களாக இருக்கின்றனர்!  ஏன்?  இந்த இந்திய இளைஞர்கள் மூலம் தான் பணம்  கை மாறுகிறது.  குறித்த காலத்தில் பணம் வட்டியோடு திரும்ப வரவில்லை என்றால் இந்த இளைஞர்கள் வன்முறைக்குத் தயாராகி விடுகின்றனர். இவர்கள் தங்களது கார்களில் கத்திகள், கட்டைகள் என்று தயார் நிலையில் இருக்கின்றனர்.

வட்டி முதலைகள் யார் என்று கடைசி வரை தெரிவதில்லை! கத்தி, கட்டைகளைத் தூக்கி வன்முறையில் ஈடுபடும் இந்த இந்திய இளைஞர்கள் தான் சட்டத்திற்கு முன் தலை குனிந்து  நிற்கின்றனர். பின்னர் இவர்களே குண்டர்களாக வகைப்படுத்த படுகின்றனர். இந்திய இளைஞர்களை எப்படியெல்லாம் தீய சக்திகள் பயன் படுத்துகின்றனர் என்பதை நினைக்கும் போது மனம் வேதனை அடையத்தான் செய்கிறது.

இந்தக் கந்து வட்டிக்காரர்கள் விரைவில் ஒடுக்கப்படுவார்கள் என நம்புவோம். அது வரை பொறுமை காப்போம்!

No comments:

Post a Comment