Monday 26 June 2017

முடியும், முடியாது!


ஆமாம்! உங்களால் முடியுமா, முடியாதா? முடியும் என்றாலும் சரிதான். முடியாது என்றாலும் சரிதான். காரணம் அது நீங்கள் எடுக்கின்ற முடிவு. நீங்கள்  முடியாது என்று நினைத்தால் அது முடியாது. நீங்கள் முடியும் என்று நினைத்தால் அது முடியும்.  அவ்வளவு தான்! இதில் ஒன்றும் தலைபோகிற மாதிரி ஒன்றுமில்லை!

ஆனால் ஒன்று.  எல்லாச் செயல்களிலும், எதனைச் செய்தாலும், என்னால் முடியாது என்று நீங்கள் நினைத்தால் உங்களால் எதனையுமே செய்ய முடியாது. நீங்கள் ஒரு பயங்கர தோல்வியாளர். எல்லாக் காரியங்களிலும்  நீங்கள் மற்றவர்களை நம்பியே இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். அது மட்டும் அல்ல இப்படி மற்றவர்களை நம்பி இருப்பதிலேயே ஒரு சுகம் காண்கிறீர்கள்!  ஏதாவது ஒரு தோல்வி ஏற்பட்டால் உடனே உங்கள் சுட்டு விரலை மற்றவர்களைப் பார்த்து  சுட்டுகிறீர்கள்!  உங்கள் கடமைகளை மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அதில் தோல்வி ஏற்படும் போது மற்றவர்களைக் குற்றம் சொல்லுவது  உங்களுக்கு எளிதாகப் போய்விடுகிறது! அதனால் எந்தப் பொறுப்பையும் நீங்கள் எடுத்துக் கொள்ள தயாராக இல்லை. உங்கள் காரியங்களைச் செய்ய யார் அகப்படுவார் என்று ஒவ்வொரு நிமிடமும் மற்றவர்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இதென்ன வாழ்க்கை?  அப்படி ஒரு முடிவு எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டால் குறைந்தபட்சம் நீங்கள் வழிபடும் இறைவனையாவது நம்புங்கள். இறைவனுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு "வெற்றியோ தோல்வியோ அது நீர் காட்டிய  வழிகாட்டல் அதனை நான் ஏற்றுக் கொள்ளுகிறேன்" என்று இறைவன் காட்டிய வழியில் செயல்படுங்கள்.

முடியும் என்று நினைப்பவர்கள் அப்படியென்ன எல்லாக் காரியங்களிலும் வெற்றி பெற்று விடுகிறார்களா, அப்படி ஒன்றுமில்லை. குறைந்த பட்சம் முடியும் என்கின்ற மனநிலையோடு செயல்படும் போது அவர்கள் செய்கின்ற பல காரியங்களில் அவர்களுக்கு வெற்றி கிடைத்து விடுகின்றது. அது தான் முடியும் என்பதற்கான வலிமை. முடியும் என்று செயல்படும் போது பிறர் நம்மிடம் வந்து நாம் வெற்றி பெற நம்மோடு ஒத்துழைக்கிறார்கள்.  வெற்றி பெறுவோம், நம்மால் முடியும் என்னும் மனநிலை மற்றவர்களை நம்மிடம் இழுத்து வந்து விடுகிறது; அப்படி ஒரு சூழலை உருவாக்கி விடுகிறது. முடியும் என்னும் ஒரு வலிமையான எண்ணம் மற்ற வலிமையான மற்றவர்களின் எண்ணம் நம்மோடு சேர்ந்து வெற்றியை நோக்கி பயணிக்கிறது.

எல்லாமே நமது கையில் தான். முடியும் என்னும் நமது வலிமையான எண்ணம் நமது காரியங்களை முடித்துக் கொடுக்கிறது. முடியாது என்னும் நமது பலவீனமான எண்ணம் மற்ற பலவீனர்களோடு சேர்ந்து  முடியாமல் செய்து விடுகிறது.

முடியும் என்று செயல்படுங்கள்.  முடியாது என்னும் எண்ணத்தை தூக்கி எறியுங்கள்! அதனால் முடியும்! முடியும்! முடியும்!

No comments:

Post a Comment