Monday 26 June 2017

தயவு செய்து இழுத்தடிக்க வேண்டாம்!


ம.இ.கா. வுக்கு ஒரு வேண்டுகோள்  அதிலும் குறிப்பாக ம.இ.க. இளைஞர் பகுதிக்கு இந்த வேண்டுகோள் போய்ச் சேர வேண்டும் என்பது  எனது விருப்பம்.

ம.இ.கா.  இளைஞர் பகுதியினர்  அவர்களது முதியோர் பகுதியினரைப் போலவே  பிரச்சனைகளை இழுத்தடிப்பவர்களாகவே இருக்கின்றனர். பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டுவருபவர்களாக இல்லை என்பது நமக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. ஒரு பெரும் திட்டத்தைப் போட்டு இன்னும் பத்து ஆண்டுகள் காத்திருங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்கள். அப்படியென்றால் என்ன அர்த்தம்?  இப்போதைக்கு ஒன்றுமில்லை என்பது தானே பொருள்!

இந்த இளைஞர்களோ இன்னும் ஒரு படி மேல்.  ஜனயாகச் செயல்  கட்சியிடம் போய்  பிறப்புப் பத்திரம் இல்லாத, குடியுரிமை இல்லாத - அந்த 300,000 பேரின் முகவரியைக் காட்டுங்கள்; நாம் இருவரும் சேர்ந்து ஒரு முடிவைக் காண்போம் என்கிறார்கள்!  இது பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டு வரும் செயல்பாடு அல்ல.

ஏற்கனவே ம.இ.கா. இளைஞர்களிடம் குடியுரிமைக்கு மனு செய்தவர்கள் 3,000 பேர் இருக்க, அவர்களுக்கு இவர்கள் இதுவரை எந்த முடிவையும் காணாத நிலையில் இந்த 300,000 பேரின் முகவரிவை வைத்துக் கொண்டு என்னப் செய்யப் போகிறார்கள்?  3,000 பேருக்கே ஒரு முடிவைக் காண முடியாதவர்கள் 300,000 பேருக்கா முடிவைக் கண்டு விட முடியும்.

இப்போது இந்த இளைஞர் பகுதி செய்வதெல்லாம் சும்மா விதண்டாவாதம் தானே தவிர யாருக்கும் எவருக்கும் பயன் இல்லாத வேலை. சும்மா தேர்தல் வரும் வரை இழுத்தடிக்கும் வேலை என்று தான் நாம் நினைக்க வேண்டியுள்ளது. நேற்று வந்த வங்காளதேசிகளெல்லாம், பாக்கிஸ்தானியர் எல்லாம் சகல உரிமைகளோடு தலை நிமிர்ந்து நடக்கிறார்கள். இங்கு பிறந்த இந்தியர்கள் குடியுரிமை இல்லாமல், அடையாளக்கார்டு இல்லாமல் அல்லல் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு 3,000 பேருக்கு - அதுவும் அரசாங்கம் ஏற்றுக்கொண்ட பிறகும் - அவர்களுக்கு ஏதோ ஒரு அலுவலகத்தில் வேலை செய்யும் சாதாராண  ஊழியன் அவர்களின் குடியுரிமையைக் கொடுக்க  மறுக்கிறான் என்றால் அப்புறம் என்ன இளஞர் பகுதி என்றும் கிழவன் பகுதி என்றும் சொல்லிக் கொண்டு பதவியில் இருக்கிறீர்கள்?

உங்களால் முடியாது என்றால் கௌரவமாக விலகிக் கொள்ளுங்கள். அமைச்சர் பதவிக்காகவும், செனட்டர் பதவிக்காகவும் பதவியில் இருப்பது இந்தச் சமுதாயத்தை ஏமாற்றுவதாகும்.

No comments:

Post a Comment