Saturday 10 June 2017

யார் தீவிரவாதி? ஸாக்கிரா, வைகோவா?


நமது அரசாங்கத்தின் வெளியுறவு கொள்கையை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை! 



ஸாகிர் நாயக் ஓர் இஸ்லாமிய அறிஞர். அதில் நாம் கருத்துச் சொல்ல ஒன்றுமில்லை. அறிஞர் என்றால் அறிஞர் தான்.  மலேசிய இஸ்லாமிய அறிஞர்கள் அவரை அறிஞராக ஏற்றுக் கொண்டார்கள்.

வைகோ தமிழ் நாட்டில் ஒரு பிரபல அரசியல்வாதி. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். எதிர்கட்சித் தலைவர். இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடும் ஒரு போராளி.  தமிழக அரசால் இதன் தொடர்பில் ஒருசில முறைகள் கைது செய்யப்பட்டவர்.

ஸாகிர் நாயக் ஓர் இந்தியர். இன்றைய நிலையில் அவர் இந்திய அரசாங்கத்தால் "தேடப்படும்" ஒரு நபர். காரணம் அவர் இஸ்லாமியத் தீவிரவாதத்தைப் போதித்தவர். அவரது பேச்சின் மூலம் தீவிரவாதிகளை உருவாக்கியவர். பயங்கரவாத அணுகுமுறையுடைவர். மேலும் நிதி மோசடியிலும் ஈடுபட்டவர் என்பதாக அவர் மீது உள்ள குற்றச்சாட்டு. அதே சமயத்தில் வங்காள தேசமும் ஸாகிர் நாயக்கை இப்போது தேடிக் கொண்டிருக்கிறது.  டாக்காவில் உணவகமொன்றில் நடந்த பயங்கரவாத தாக்குதலில்  ஈடுபட்ட தீவிரவாதி கொடுத்த வாக்குமூலத்தின் படி ஸாகிர் நாயக் வங்காள தேசத்தினாலும்  தேடப்படுகிறார். இந்த இரு நாடுகளினாலும் தேடப்படும் ஒரு பயங்கரவாதி ஸாகிர் நாயக்.  ஆனால் மலேசியாவில் அவர் மிகுந்த மரியாதையுடன் வரவேற்கப்படும் ஓர் இஸ்லாமிய அறிஞராக நாட்டை வலம் வருகிறார். முடிந்த வரை மற்ற சமயங்களை இழிவுப்படுத்துவது அவரது தொழில். அதனைச் செம்மையாக அவர் செய்து வருகிறார்.

ஆனால் வைகோ, அவரும் ஒரு இந்திய நாட்டவர்,ஆனால் எந்தப் பயங்கரவாதப் பட்டியலிலும்  இல்லாதவர்.  அவர் செய்து வருவதெல்லாம் இலங்கைத் தமிழர்களுக்காக உலகளவில் குரல் கொடுப்பது தான். அவர்களின் உரிமைகளுக்காகப் போராடுபவர். தமிழின அழிப்பைத் தட்டிக்கேட்கும் ஒரு போராளி.  தமிழ் மக்களுக்காகப் போராட்டம் நடத்துபவர். மற்றபடி அவர் ஒரு பயங்கரவாதி அல்ல. அவரால் எந்தப் பயங்கரவாத நிகழ்வுகளும் நடந்தது இல்லை. மலேசியாவுக்கு அவர் ஒரு மிரட்டலும் அல்ல.  மலேசிய அரசாங்கம் அவரை ஒரு பயங்கரவாதியைப் போல நடத்தியிருப்பது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.  அவர் மலேசியா வந்ததோ ஒரு திருமண நிகழ்வுக்காக. குறைந்தபட்சம் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவரை அவரது நாட்டுக்கு அனுப்பி வைத்திருக்கலாம். இவ்வளவு கெடுபிடிகள் தேவையற்றது.

இதனை நாம் வேறு ஒரு கோணத்திலும்  பார்க்க வேண்டியுள்ளது. "நீங்கள் ஸாக்கிருக்கு என்ன செய்தீர்களோ அதனையே இப்போது நாங்கள் வைகோவுக்குச் செய்கிறோம்" என்று இந்தியாவைக் கேட்பது போல் உள்ளது!

No comments:

Post a Comment