Sunday 18 June 2017

வாதாடத்தான் வேண்டுமா?


பெற்றோர்களே, கொஞ்சம் யோசியுங்கள். அவர்கள் உங்கள்  வீட்டுப் பிள்ளைகள் தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அதற்கும் ஒரு எல்லையுண்டு. உங்கள் வீட்டுப் பிள்ளைகள் உங்களுக்குச் செல்லப் பிள்ளைகள் தான். அப்படியே மற்றவர்களுக்கும் செல்லப் பிள்ளைகளாக அவர்கள்  இருந்தால் இந்த உலகம் உங்களைப் பாராட்டும்; போற்றும். ஆனால் வீட்டிற்குள் செல்லம் வீட்டிற்கு  வெளியே குழி தோண்டும் குண்டர் கும்பல் என்றால் யார் என்ன தான் செய்ய முடியும்?

ஒரு மாணவனை ஈவு இரக்கமின்றி, கொடூரமாகக் கொலை செய்திருக்கிறார்கள். அந்த மாணவன், தி.நவீன், அந்த நிமிடம் - அந்த கணம்- அந்த ஐந்து மாணவர்களால் எந்த அளவுக்குத் துன்பத்தை அனுபவித்திருப்பான் என்று கற்பனை செய்ய முடிகிறதா? அவன் மூளை சாவு அடையும் அளவுக்கு அவனை வெறித்தனமாகத் தாக்கி இருக்கிறார்கள்.  அவன் என்ன தவறு செய்திருப்பான்? அவனுக்கு மூளை இருந்தது;  அதனால் அவன் இசை படிக்க ஆவல் கொண்டிருந்தான். அவ்வளவு தானே. அதில் இவர்களுக்கு என்ன பிரச்சனை? இவர்களுக்கு மூளை இல்லை. அதனால் மூலை, முச்சந்திகளில் நின்று கொண்டு போவோர் வருவோர் மீது தாக்குதல் நடத்துவது - இவர்களது வேலையாக இவர்கள் தேர்ந்து எடுத்துக் கொண்டார்கள். 

ஆனால் உங்கள் பிள்ளைகளைப் பற்றி ஒன்றுமே தெரியாத அப்பாவிகளாகவா இது நாள் வரை நீங்கள் இருந்தீர்கள்? அவர்கள் ஒழுங்காகப் படிக்கவில்லை என்பதைத் தெரியாமலா சோறு போட்டு வளர்த்தீர்கள்?  குழந்தைகள் ஏன் தாய் ஊட்டிய உணவை மறக்க முடிவதில்லை? அதில் அன்பும், பண்பும், பாசமும் கலந்திருப்பதால் தானே.  இவர்களும் இப்படித் தானே வளர்ந்திருக்க வேண்டும். ஆனால் இல்லையே, தாயே!

உங்கள் பிள்ளைகள் காவல் துறையால் கைது செய்யப்பட்டார்கள் என்று தெரிந்ததும்  ஓடோடி வழக்கறிஞர்களைப் பார்க்கீறீர்களே அப்படி என்ன பாசம் இப்போது பொங்கி வழிகிறது? இது நாள் வரை இந்தப் பாசமும், பரிவும் எங்கே போயிற்று? அவர்கள் வெளியே வந்தாலும் மற்றவர்களுக்குப் பாதுகாப்பு இல்லையே! அவர்கள் வெளியே வரத்தான் வேண்டுமா? அவர்களுக்காக வாதாடி என்னவாகப் போகிறது? கொலைக் குற்றவாளி என்பதாகத்தான் உலகம் பார்க்கும்? 

எல்லாருமே பதின்ம வயதினர். நமக்கும் மனம் பதறத்தான் செய்கிறது.  அறியாமல் செய்த தவறு தான். ஆனால் ஒரு பயங்கரவாதச் செயல் போல் அல்லவா இருக்கிறது! 

சட்டம் தனது கடமையைச் செய்யட்டும்! செய்ய விடுங்கள்! நடப்பது நடக்கட்டும்! வேறு என்ன சொல்ல?


No comments:

Post a Comment