மித்ரா அமைப்பை வைத்துக் கொண்டு, விஷயம் தெரிந்த சிலர் பந்தாட்டம் ஆடுகிறார்கள் என்றே தோன்றுகிறது!
பிரதமர் தான் மித்ராவை ஒற்றுமை அமைச்சிலிருந்து பிரதமர் துறைக்கு மாற்றினார். எல்லாரும் வரவேற்றோம். அவரே இப்போது ஒற்றுமைத் துறைக்கு மீண்டும் மாற்றியிருக்கிறார். காரணம் தெரியவில்லை. அது அவரது உரிமை. காரணம் தெரிந்தாலும் ஆகப்போவது ஒன்றுமில்லை!
எங்கிருந்தாலும் மித்ரா தனது பணியினைத் தொடர்ந்து செய்யத்தான் செய்யும். அது அவர்களது கடமை.
இப்போது ஏதோ கையெழுத்து வேட்டை நடைபெறுகிறதாம். மித்ராவை மீண்டும் பிரதமர் துறைக்கே மாற்ற வேண்டும் என்பதாக. சில ஆண்டுகளுக்கு முன்னர் மித்ரா பிரதமர் துறையின் கீழ் இருந்த போது பெரும்பாலும் ம.இ.கா. வினர் பயன்பெற்றதாக அப்போது செய்திகள் வெளியாயின. இப்போது மீண்டும் பிரதமர் துறைக்கே மாற்ற வேண்டும் என்னும் போது இதற்கும் ம.இ.கா. விற்கும் சம்பந்தம் இருக்குமோ என்று தோன்றுகிறது. அன்று பயன்பெற்றவர்கள் மீண்டும் பயன்பெற வேண்டும் என்று நினைக்கலாம் அல்லவா? அதனை யாரும் எதிர்க்கவில்லையே!
ஆனால் நம்மைப் போன்ற சராசரி மனிதர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. எந்த அமைச்சில் இருந்தாலும் மித்ரா தனது பணியைச் செய்து தான் ஆக வேண்டும். அதற்காகத்தானே அது உருவாக்கப்பட்டது?
இப்பொழுது என்ன தான் பிரச்சனை? ஏற்கனவே ஒற்றுமைத்துறையின் அமைச்சராக இருந்தவர் மித்ராவைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அதாவது பூட்டுப்போட்டு பூட்டி வைத்திருந்தார். அதை வைத்து அவர் என்ன 'அரசியல்' செய்தாரோ நாம் அறியோம் பராபரமே! அது மீண்டும் நடக்கக் கூடாது என்பது கூட இவர்களின் கோரிக்கையாக இருக்கலாம். அதனாலேயே பிரதமர் துறைக்கு மாற்றுங்கள் என்பதாகக் இவர்கள் சொல்லலாம்!
ஆனால் ஒன்றை நினவிற் கொள்ளுங்கள் நண்பர்களே. பிரதமர் அன்வார், தான் ஊழலுக்கு எதிரானவர் என்று தொடர்ந்து மெய்ப்பித்து வருகிறார். இப்போது தான் முதலைகள் வலையில் விழ ஆரம்பித்திருக்கின்றன. ம.இ.கா. முதலைகள் மட்டும் எத்தனை நாளுக்கு வேளியே? பார்க்கத்தானே போகிறோம்!
அதனால் நான் சொல்ல வருவதெல்லாம் இன்றைய காலகட்டத்தில் மித்ரா எந்தவொரு அமைச்சுக்கு மாற்றப்பட்டாலும் அதன் பணியை செவ்வனே செய்யும் என்று நம்பலாம். திருட்டுப் பட்டம் பெற யாரும் விரும்ப மாட்டார்கள். கடந்து ஓர் ஆண்டாக மாண்புமிகு ரமணன் தலைவராக இருந்தார். அவர் தேவையற்ற பலருக்கு வாரி வாரி வழங்கினார் என்பதாகப் பொதுவாகப் பேசப்படுகிறது. அதனால் அவர் கழட்டப்பட்டு இப்போது மாண்புமிகு பிராபகரன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
பிரபாகரன் இத்தனை நாள் வெளியே வராமல் இருந்தார். கோயில் விஷயத்தில் ம.இ.கா. காரன் பெயரைக் கெடுத்தான். இப்போதும் அவர் பெயரைக் கெடுக்க தயாராகி விட்டான்! எத்தனை நாள் தாக்குப் பிடிப்பாரோ!
இன்றைய நிலையில் ம.இ.கா. திருந்தவில்லை! மக்கள் அவர்களை நம்பவில்லை! அதனால் மக்களைக் குழப்பும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்!
No comments:
Post a Comment