நம்முடைய தேவை எல்லாம் மித்ரா செயல்பட வேண்டும். மாண்புமிகு பிரபாகரன் தனது பணியைத் தொடங்கி விட்டாரா என்பது தெரியவில்லை. இப்போதைக்கு அவர் பெயர் தான் முன்னணியில் இருக்கிறது. பிரதமரின் நியமனம் என்பதால் வேறு யாரும் போட்டிக்கு இல்லை.
வெளியே என்ன நடந்தாலும் அதனைப் பற்றியெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் தனக்குக் கொடுக்கப்பட்ட கடமையை அவர் செய்ய வேண்டும் என்பது தான் இந்த சமுதாயத்தின் ஆசை. எங்களின் குரலுக்குத் தான் அவர் செவிசாய்க்க வேண்டும்.
இதற்கிடையே ஒரு சில கருத்துகளைக் கூறுவதும் நமது கடமை. மாமிகு பிரபாகரனுக்கு முதல் எதிரி என்றால் அது ம.இ.கா.வினர் தான். சமீபத்தில் அல்லது இன்னும் இழுபறியாக பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் அந்த கோயில் பிரச்சனையை மறந்துவிட வேண்டாம். தாங்கள் செய்ய வேண்டிய ஒரு பிரச்சனையை இழுத்தடித்து கடைசியில் கோயில் இடிபட்டதற்கு பிரபாகரன் தான் காரணம் என்கிற சூழலை ஏற்படுத்திவிட்டார்கள்!
ம.இ.கா.வினர் தங்களது குழி பறிக்கும் வேலையைத் தொடரத்தான் செய்வார்கள்! பிரபாகரன் நல்ல பெயரோடு இருப்பதை ம.இ.கா.வினர் விரும்பமாட்டார்கள். பெயரைக் கெடுக்க வேண்டும் அல்லது அவர் செயல்படாமல் இருக்க வேண்டும் - அது தான் அவர்களின் மாபெரும் இலட்சியம்! அதனை அவர்கள் தொடர்ந்து செய்யத்தான் செய்வார்கள். அவரை ஏதாவது சிக்கலில் மாட்டிவிட வேண்டும் என்பதிலே குறியாய் இருக்கிறார்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
அரசியலில் அயோக்கியத்தனம் என்பது ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. எங்களுக்கு அது பற்றி கவலையில்லை. ஆனால் எதற்காக அவர் மித்ராவின் தலைவராக நியமிக்கப்பட்டாரோ அதன் வேலைகள் நடக்க வேண்டும். இருக்கும் காலத்தில் ஒரு பத்தாயிரம் வியாபாரிகளை உருவாக்கினேன் என்று பெருமிதம் பட வேண்டும். மித்ராவில் இருக்கும் போது ஏதாவது சாதனைகள் செய்ய வேண்டும்.
மாமிகு பிரபாகரன் வெற்றிகரமாக பல சாதனைகள் செய்வார் என எதிர்பார்க்கிறேன்! வாழ்த்துகள்!
No comments:
Post a Comment