சிலாங்கூர் மாநிலத்திலுள்ள சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் வருகின்ற பள்ளி ஆண்டில் கணினி வகுப்பு நிறுத்தப்படும் என்கிற செய்தி தீயாய் பரவி வருகிறது.
அது மட்டும் அல்ல சிலாங்கூரில் உள்ள அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளிலும் அத்தோடு மலேசிய ரீதியிலும் தமிழ்ப்பள்ளிகளில் கணினி கற்பிக்கப்படாது என்கிற செய்தியும் பரவி வருகிறது.
நிச்சயமாக இது ஒரு நம்ப முடியாத செய்தி என்பதில் ஐயமில்லை.
கல்வி அமைச்சுக்கு அப்படி ஒரு நிதிச்சுமை ஏற்படுகிறதென்றால் அது தமிழ்ப்பள்ளிகளுக்கு மட்டும் அல்ல சீனப் பள்ளிகள் தேசியப்பள்ளிகள் என்று அனைத்துப் பள்ளிகளுக்கும் தான் கணினி கல்வி நிறுத்தப்படும் என்கிற நிலை ஏற்படும்.
தமிழ்ப்பள்ளிகளுக்கு மட்டும் என்றால்? அது எப்படி? கல்வி அமைச்சுக்கு அப்படி ஒரு அதிகாரத்தை யார் கொடுத்தார்கள்? எல்லாப் பள்ளிகளுமே கல்வி அமைச்சின் கீழ் தான் செயல்படுகின்றன. "இங்கே உண்டு! அங்கே இல்லை!" என்று தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கல்வி அமைச்சு செயல்பட முடியுமா? அப்படி என்றால் அப்புறம் கல்வி அமைச்சர்,துணை அமைச்சர், கல்வி இயக்குனர் - இவர்களெல்லாம் யார்? அறிவு கெட்டவர்களா?
இந்த செய்தியைப் படிக்கும் போதே நமக்கு ஒன்று தெரிகிறது. ஏதோ சில முட்டாள்கள் சேர்ந்து கும்மியடிக்கிறார்கள்! அவ்வளவு தான். ஒரு சிலர் சேர்ந்து எதையும் செய்ய முடியும் என்றால் தேசியப் பள்ளிகளின் நிலை என்னாவது? சீனப்பள்ளிகள் நாளுக்கு நாள் தேசியப் பள்ளிகளுக்கு மிரட்டலாக விளங்குகிறது என்பது நமக்குப் புரிகிறது. அவர்களை அசைக்க முடியவில்லையே! தமிழ்ப்பள்ளிகளுக்கு மட்டும் ஏன் இதுபோன்ற மிரட்டல்கள்? பொருளாதார பலம் இல்லென்றால் இதுபோன்ற செய்திகள் எல்லாம் கசிந்து கொண்டு தான் இருக்கும்.
இதன் நோக்கம் தான் என்ன? கல்வி அமைச்சருக்குக் காவடி எடுக்க வேண்டும்! பிரதமருக்குப் பால் காவடி எடுக்க வேண்டும்! அப்புறம் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தூது அனுப்ப வேண்டும்! அவரைப் பார்க்க வேண்டும்! இவரைப் பார்க்க வேண்டும்! இப்படி ஒரு நெருக்கடியைக் கொடுப்பதற்கு என்றே சுற்றிக் கொண்டிருக்கிறது! ஒரு கூட்டம்.
சீனப்பள்ளிகளுக்கு இல்லாத ஒரு நெருக்கடி, தேசிய பள்ளிகளுக்கு இல்லாத ஒரு நெருக்கடி ஏன் தமிழ்ப்பள்ளிகளுக்கு மட்டும் அடிக்கடி ஏற்படுகிறது? இனத்துரோகிகள் நம்மிடையே அதிகம் என்றே தோன்றுகிறது. அவர்கள் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற செயல்கள் உங்களுக்குச் சாபமாக வரும். நான்கு தலைமுறைக்கான சாபத்தை இப்போது உங்கள் பிள்ளைகளின் தலையில் சுமத்திவிட்டுப் போகிறீர்கள். சமுதாயத்தை ஏமாற்றியவனின் குடும்பம் நிம்மதி இல்லாமல் அலைந்து திரியும்! அதுவும் அவன் படித்தவனாக இருந்தால்...?
No comments:
Post a Comment