குப்பைகளை எங்கு வேண்டுமானாலும் கொட்டலாம் என்பது நமது நாட்டு சட்டமாக இருக்க வேண்டும்!
அதனால் தான் எந்தவொரு சட்டத்தையும் நாம் மதிப்பதில்லை. இப்போது ஒவ்வொரு வீடுகளிலும் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதனைப் பயன்படுத்தும் பழக்கம் இப்போது அதிகரித்திருக்கிறது. வாழ்த்தலாம்!
ஒருவகையில் அவர்களை மன்னித்துவிடலாம். ஆனால் மன்னிக்க முடியாதவர்கள் என்று ஒரு குழுவினர் இருக்கின்றனர். அவர்கள் மன்னிக்க முடியாதவர்கள் என்று நாம் சொன்னாலும் அரசாங்க ஊழியர்கள் அவர்களை மன்னித்து விடுவார்கள். தேவை எல்லாம் சில ஆயிரங்கள் கைமாறினால் போதும்!
தொழிற்சாலைகளில் ஏற்படுகின்ற கழிவுகளை ஆற்றில் கொண்டு போய் ஊற்றுகிறர்களே இவர்களை என்ன செய்ய வேண்டும் என்பது நமக்குத் தெரிகிறது. தொழிற்சாலைகளுக்குத் தெரியாதா? அரசாங்க ஊழியர்களுக்குத் தெரியாதா? அந்த ஆறுகளை எவ்வளவு பேர் பயன்படுத்துகிறார்கள் என்பது யாருக்குமே தெரியாதா? எல்லாருக்கும் தெரியும். ஆனால் அவ்வளவும் அலட்சியம். யரோ பயன்படுத்துகிறார்கள் நமக்கு என்ன என்கிற அலட்சியம்.
தொழிற்சாலைகளுக்குச் செலவு குறைகிறது. அரசாங்க ஊழியர்களுக்கு இலஞ்சம் கிடைக்கிறது. எவனோ சாகிறான்! நமக்கென்ன? என்பது ஆபத்தான மனநிலை.
என்னமோ இத்தனை ஆண்டுகள் நமது அரசாங்க ஊழியர்களின் நிலை அப்படித்தான். இப்போது தான் கொஞ்சம் வெளிச்சம் தெரிகிறது. பிரதமர் அன்வார் வருகைக்குப் பின்னர் தான் நடவடிக்கைகள் ஆரம்பமாகிருக்கின்றன. இலஞ்சம் எல்லாத் துறைகளிலும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. இப்போது தான் ஒவ்வொன்றாக முடிச்சுகள் அவிழ்க்கப்படுகின்றன! நமக்கு அதிலே மகிழ்ச்சி தான்.
நாடு சுத்தமான நாடாக இருக்க வேண்டும். எத்தனை நாளைக்குத்தான் சிங்கப்பூரையே உதாரணம் காட்டிக் கொண்டிருப்பது? ஏன் நம்மால் முடியவில்லை? பள்ளிகளில் பக்திக்குத்தான் முதலிடம் கொடுக்கிறோம். பக்தியாக மாணவர்களை வளர்க்கிறோம். பக்திக்கும் சுத்தத்திற்கும் சம்பந்தம் இல்லையோ! இங்கு பக்தியாக வளர்க்கப்படும் மாணவர்கள் தான் நாளை அதிகாரிகளாக பதவிகளுக்கு வருகிறார்கள். அவர்கள் இலஞ்சம் வாங்குகிறார்கள் என்றால் பக்தியோடு இலஞ்சமும் கற்றுக் கொடுக்கப்படுகிறதோ!
இப்போது நாடு மாறி வருகிறது என்பதிலே நமக்கு மகிழ்ச்சியே. மக்கள் மனதிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதிகாரிகளும் மாறிக்கொண்டிருக்கிறார்கள்.
நம் நாடு சுத்தமான நாடு, மக்கள் பொறுப்பான மக்கள் - இது போதும் நாம் பெருமை கொள்ளலாம்!
No comments:
Post a Comment