மனதுக்குக் கொஞ்சம் கஷ்டமான செய்தி தான். எதிர்பார்க்கவில்லை. ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.
ஆனால் என்ன செய்வது? காவல்துறைத் தலைவரே சொல்லிவிட்டார். நாம் சொல்லுவதற்கு ஒன்றுமில்லை.
இவர் வந்த பிறகு தான் ஊழல்களில் சிக்கிய பல போலிஸ்காரர்களைக் கம்பி எண்ண வைத்திருக்கிறார். தலைமை எப்படியோ அப்படித்தானே குடிகளும்? தலைமை சுறுசுறுப்பாக இயங்குகிறது. கைது செய்கிறது. நடவடிக்கை எடுக்கிறது.
முக்கியமானது மலேசிய நாட்டில் ஒவ்வொரு வாரமும் சுமார் ஐந்து கொலைகள் நடப்பதாகக் கூறியிருப்பது தான் மிகவும் சங்கடமான செய்தி. இந்த கைதுகளுக்கும் கொலைகளுக்கும் தொடர்புகள் இருக்குமோ? வேண்டாம்! தேவையற்ற சந்தேகங்கள்!
மற்ற நாடுகளின் புள்ளி விபரங்கள் தெரியவில்லை. இது என்ன நல்ல விஷயமா? சில தினங்களுக்கு முன்னர் தான் கிள்ளான் நகரை "கொலம்பியா" வோடு ஒப்பிட்டிருந்தார் காவல்துறைத் தலைவர். அதுவும் நமக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தி தான். இதில் என்ன சஙகடங்கள் என்றால் இத்தனை ஆண்டுகள் தலைமை பதவியில் இருந்தவர்கள் இதனை எல்லாம் வெளிக் கொணரவில்லை. வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் இவரோ அனைத்தையும் போட்டு உடைக்கிறார்! ஊழல்களை உடைக்கிறார்! காவல்துறையின் பலவீனங்களை உடைக்கிறார். நல்லது தான். நல்லது நடக்க வேண்டுமானால் ஒளிவுமறைவு இருக்கத் தேவையில்லை!
கிள்ளான் நகரில் ஏன் இந்த அளவுக்குக் குற்றச் சம்பவங்கள்? குற்றம் சொல்ல நம்மிடம் ஆதாரம் ஏதுமில்லை. ஆனாலும் செவிவழி அங்கு நடக்கும் பயங்கரத்தைக் கேள்விப்பட்டது உண்டு. காவல்துறை ஏன் அதனைச் சரி செய்ய முடியவில்லை என்பது நமக்குத் தெரியாது. நாம் கேள்விப்பட்டது என்பது உண்மை தான் என்று தெரிகிறது.
ஒன்று மட்டும் நமக்குத் தெரிகிறது. கிள்ளான் 'கொலம்பியா' ஆனதற்குக் காரணம் இலஞ்சம் ஊழல் தான். பணத்தை வாங்கிக் கொண்டு குற்றச்செயல்களை அதிகரிக்கச் செய்வதாக இருக்கலாம். காவல்துறைக்கு முடியாது என்று ஒன்று உண்டோ? ஒரு குற்றவாளியைப் பிடிக்கவில்லை என்றால் அவனை 'முடித்து' விட அவர்களுக்கு எவ்வளவு காலம் பிடிக்கும்?
எப்படியோ நம்மால் ஜீரணிக்க முடியாத ஒரு செய்தியைக் காவல்துறைத் தலைவர் வெளியே கொண்டு வந்திருக்கிறார். அது தான் கொலம்பியா! காவல்துறை இதற்கு ஒரு முடிவைக் காணும் என்று நமபலாம். வெளியே கொண்டு வந்துவிட்டார் என்று சொல்லும் போது அதற்கு ஒரு முடிவு காணமலா விடுவார்?
கிள்ளான் சீக்கிரம் சமாதான நகராக மாறலாம்!
No comments:
Post a Comment