தோல்வி அடையாதவர்கள் யார்? சரி, அப்படி இருந்தால் நமது பாராட்டுகள். ஆனால் அப்படி யாரும் இல்லை. ஏதோ எங்கோ எப்போதோ ஒரு முறை தோல்வி அடைந்திருப்போம். அது வெளியே தெரிவதில்லை. அவ்வளவு தான்.
கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்கள் அனைவரும் பல தோல்விகளுக்குப் பின்னர்தான் கோடிகளைப் பார்த்தவர்கள். பல விஞ்ஞானத் தோல்விகளுக்குப் பின்னர் தான் இன்றைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள்! தோல்விகள் தான் அனைத்துக்கும் ஆதாரம்!
ஒவ்வொருவர் வாழ்விலும் தோல்விகள் உண்டு. தோல்விகளைச் சந்திக்காதவர்கள் யாருமில்லை. தோல்வி இல்லாமல் வாழ்க்கை ஏது? தோல்விகள் தான் நமக்குப் பாடங்களைப் போதிக்கின்றன.
பள்ளிக் காலத்தில் பள்ளியில் தோல்வி. வேலை செய்கின்ற காலத்தில் வேலையில் தோல்வி. எந்த முன்னேற்றமும் இல்லை. திருமண வாழ்க்கையில் திருமணத்தில் தோல்வி. ஆண்டுகணக்காகக் காதலித்தவர்கள் கூட கல்யாணத்தில் தோல்வி.
தோல்விகள் வரத்தான் செய்யும். தோல்விகளே இல்லையென்றால் அது என்ன வாழ்க்கை? வெற்றி, தோல்வி இல்லாமல் வாழ்க்கை இல்லை. தோல்வியே இல்லாமல் ஒருவன் வெற்றியை மட்டுமே அடைபவனாக இருந்தால் அவன் வாழ்க்கை எப்படி இருக்கும்? தோல்வியே இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்? ஏட்டிக்குப் போட்டி தேவை தானே! அப்படி இருந்தால் தானே வாழ்க்கை சுவைக்கும்!
பரிட்சைகளில் தோல்வியும் அப்படித்தான். தோல்வி என்றால் அடுத்து மீண்டும் முயற்சி செய்து வெற்றி பெறுவது தான் ஒரே வழி. பள்ளிகளில் பரிட்சை என்பது எப்போது வந்ததோ அப்போது தோல்வியும் கூடவே வந்துவிட்டது. தோல்வி அடைந்தவர்கள் எல்லாம் அத்தோடு தோல்வியை ஏற்றுக் கொண்டு அப்படியே ஒரு மூலையில் போய் உட்கார்ந்து விடவில்லை. தங்களை முடக்கிக் கொள்ளவும் இல்லை. மீண்டும் மீண்டும் பரிட்சை எழுதி வெற்றிகளைப் பெற்றார்கள். முதன் முறையே வெற்றி! வெற்றி! என்று மார்தட்டுவது குறைவுதான். உயர்கல்விக்குப் போகும் போது பல முயற்சிகளுக்குப் பிறகு தான் மருத்தவர், வழக்கறிஞர் என்று வெற்றிபெற முடியும். எங்கோ ஒரு சறுக்கல் இருக்கத்தான் செய்யும். உண்மை வெளியே தெரிவதில்லை, அவ்வளவு தான்!
எப்படியோ பரிட்சைகளில் தோல்வி என்பது ஆரம்பத்தில் கொஞ்சம் மனக்கஷ்டத்தை ஏற்படத்தத்தான் செய்யும். சில தினங்களில் அவைகளெல்லாம் மறந்து போகும். அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்வது தான் புத்திசாலித்தனம். அப்படித்தான் நமது வாழ்க்கைமுறை அமைந்திருக்கிறது.
வெற்றியே நமது இலட்சியம்!
No comments:
Post a Comment