இந்தியர் என்று பொதுவாகச் சொன்னாலும் பிரச்சனை என்பது என்னவோ தமிழர்களுக்கு மட்டும் தான். மற்ற சமூகங்கள் யாரையும் நம்பி இல்லை. எந்தத் தலைவனையும் நம்பி இல்லை. ஆனால் தமிழனுக்கு மட்டும் ஒரு தலைவன் எப்போதும் தேவைப்படுகிறான்! தமிழனின் மாபெரும் தலைவன் என்று நாம் நினைத்தவனும் நம்மை ஏமாற்றிவிட்டுத்தான் போனான்! எப்படியோ எங்கோ ஒருவனை நம்பித்தான் வாழ வேண்டும் என்கிற சூழல் ஏற்பட்டுவிட்டது!
இப்போது நமது நிலை என்ன? முன்பு பாடிய அதே பல்லவி தான். நமக்குச் சரியான தலைவன் இல்லை! என்று சொல்லுவதையே தொழிலாகக் கொண்டு விட்டோமோ என்று தோன்றுகிறது!
"யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா! போங்க!" என்று கண்ணதாசன் பாடல் ஒன்று உண்டு. ஒருவரை நம்பியும் இல்லை! அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். நமக்கு ஒரு தலைவன் தேவை என்று எண்ணுவதே பிழை. நம் வீட்டுக்கு நாம் தான் தலைவன். அதனை நாம் எப்போதும் சரியாகத் தான் செய்து வருகிறோம். அதனால் வேறு ஒரு தலைவன் நமக்குத் தேவை இல்லை.
நாம் சரியான குடும்பத் தலைவனாக இருந்தால் நமது குடும்பங்களிலிருந்து மருத்துவர், வழக்கறிஞர், பொறியிலாளர், ஆசிரியர்கள், அலுவலகர்கள், தொழிலதிபர்கள் என்று பலவேறு திறன் பெற்றவர்களை நாம் உருவாக்குகிறோம். அது தான் எப்போதும் நடந்து கொண்டிருக்கிறது. அது தான் நமது தலைமைத்துவம். அது போதுமே! அப்புறம் ஏன் இன்னொரு தலைவர் நமக்குத் தேவை?
யாரை நம்புவது? நம்மை நாம் நம்பினால் போதும். வேறு யாரையும் நம்ப வேண்டாம். ஒன்று கடவுள். கடவுள் நம்மைக் காப்பாற்றுவார் என்று நம்புங்கள். அடுத்து உங்களையே நீங்கள் நம்புங்கள். ஏன் மற்றவர்களை நம்ப வேண்டும்?
நம்மை நம்பினால் போதும். நம்மை நம்பினாலே போதும். நம்மால் ஒரு படித்த தலைமுறையையே உருவாக்கிவிட முடியும். இதற்கெல்லாம் எந்த ஒரு தலைவனும் தேவை இல்லை. நமது குடும்பத்துக்கு நம்முடைய தலைமைத்துவத்தை சரியாக அமைத்துக் கொடுத்தாலே போதும்!
யாரை நம்புவது என்று ஒரு கேள்வி எழுந்தால், தைரியமாகச் சொல்லுங்கள்: என்னை நம்புங்கள் என்று! என் குடும்பம் என்னை நம்பினால் போதும்!
No comments:
Post a Comment