நம்மிடையே தொட்டாசிணுங்கிகளைப் பார்த்திருக்கிறோம். தங்களைப்பற்றி யாரோ ஒருவர் ஏதோ சொல்லிவிட்டார், அது போதும் அவர்கள் சுருங்கிப் போவார்கள்! இது போன்ற குணாதிசயம் உள்ளவர்கள் வாழ்க்கையை எதிர்நோக்குவது சிரமம்.
ஆனால் நமது சிங்கக்குட்டி மாணவன் ருகேஷ் பிள்ளை மிகவும் பாராட்டுக்குரியவன். "நீ தமிழன் தானே உன்னால் என்ன முடியும்?" என்று சொன்ன தனது வகுப்பைச் சேர்ந்த சீன மாணவியிடம் "என்னால் இதுவும் முடியும், எதுவும் முடியும்" என்பதைச் செயலில் பதிலளித்திருக்கிறார் ருகேஷ்!
அவரை நம்மால் பாராட்டாமல் இருக்க முடியாது. அவர் எஸ்.பி.எம். தேர்வில் 11ஏ எடுத்திருக்கிறார் என்பதற்காக மட்டும் அல்ல. தன்னைக் கறுப்பன் (சீனர்கள், தமிழன் என்றால் அது தானே பொருள்!) என்று ஏளனமாகப் பேசிய பெண்ணுக்குச் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்!
இன்று தமிழர்கள் எதிர்நோக்குகின்ற எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம் இந்தத் தொட்டாசிணுங்கித் தனம் தான்! ஒருவன் நம்மைச் சீண்டினால் அவனுக்கு வன்முறை இல்லாமல், நமது செயல்பாடுகளின் மூலம், தக்க பாடம் புகட்ட வேண்டும். அது தான் தம்பி ருகேஷிடம் உள்ள சிறப்பான குணம்! அது தான் தமிழர்களிடம் உள்ள குணமாக இருக்க வேண்டும் என்று நான் சொல்ல வருவது.
எத்தனை வழிகளில் நாம் அசிங்கப்படுத்தப் படுகிறோம், ஏளனப்படுத்தப் படுகிறோம் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. காரணம் எதற்கெடுத்தாலும் ஆர்ப்பாட்டம், எதிர்ப்பு- இவைகளே நமக்கு அவசியத் தேவைகளாகி விட்டன! குடியுரிமை, கல்விக்காக, அரசு வேலைகளுக்காக இப்படி அனைத்துக்கும். அந்த அளவுக்கு அதிகாரம் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது! காரணம் என்ன? சின்னதொரு காரியமாக இருந்தாலும், முதல் முயற்சிலேயே தளர்ந்து போகிறோம். தோல்வியே கூடாது என்கிற எண்ணம் நமக்கு ஏற்பட்டுவிட்டது! அது தான் நம்மைப் பின் தங்க வைத்திருக்கிறது.
நமது குணத்தை,நமது இயல்பை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். மனத்துணிவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தொட்டாச் சிணுங்கி அல்ல நாம் என்பதை நமது எதிரிகளுக்குக் காண்பிக்க வேண்டும். அதற்காகவே நமது இளவல் ருகேஷ் பிள்ளையைப் பாராட்ட வேண்டும். இந்த குணம் ஒட்டுமொத்த தமிழினத்திற்கு வரவேண்டும் என்பது தான் நமது ஆசை.
விட்டுக்கொடுத்து விட்டுக்கொடுத்து விவஸ்தையே இல்லாத சமுதாயமாக இருப்பதைவிட வீரிய மிக்க சமுதாயமாக, தலைவணங்கா சமுதாயமாக வாழ நாம் உறுதி எடுத்துக்கொள்வோம்!
தம்பி ருகேஷ் பிள்ளை சிறுவனாக இருந்தாலும் அவனது சவால்தனம் நம் அனைவருக்குமானது! வாழ்த்துகள் ருகேஷ்!
No comments:
Post a Comment