"மித்ரா" வைப் பற்றி நமக்கு எப்போதுமே நல்லெண்ணம் இருந்ததில்லை! ஒரே காரணம் தான். ஆரம்பம் முதல் அதன் பொறுப்பாளராக இருந்தவர்கள் பொறுப்பற்றவர்களாக நடந்து கொண்டதால் "செடிக்" "மித்ரா" பெயரையே கெடுத்துவிட்டார்கள்! இந்திய சமுதாயம் அதன் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை!
எப்படியோ, டத்தோ ரமணன் காலத்தில் சில நல்ல காரியங்கள் செய்தார். சில தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டாலும் மாணவர்கள் பலர் பயன்பெற்றனர். ஆனால் இதுவரை எத்தனை வர்த்தகர்கள் பயன்பெற்றனர் என்பது வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும் ஏதோ ஓரளவாவது, யாராவது பயன்பெற்றிருப்பர் என நம்பலாம்.
இப்போது சமீபத்தில் மித்ரா, 28 பேருக்கு "இலக்கவியல் ஊடகத்திறன் பயிற்சி" யைக் கொடுத்திருக்கிறது. இது தேவையான பயிற்சி தான். இன்றைய நடைமுறைக்கு ஏற்ற பயிற்சி. மித்ரா இதற்கான பயிற்சியை முன்னெடுக்காவிட்டால், பயிற்சியில் கலந்து கொண்ட பலருக்கு, இப்படி ஒரு பயிற்சி இருப்பது தெரியாமலே போயிருக்கும்.
நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இன்றை உலகம் மாணவர்களிடமிருந்து பல திறன்களை எதிர்பார்க்கிறது. வெறும் கல்வி கற்று, பட்டம் பெறுவது மட்டும் போதாது. வேறு பயிற்சிகளையும் பெற்றிருப்பது மாணவர்களுக்குத் தேவையானது. ஒன்றுமே தெரியாமல், எந்த ஒரு பயிற்சியும் இல்லாமல் போனால், வெறும் பட்டயக்கல்வி பயன்படாமல் போய்விடும்! பொது அறிவு, ஏதாவது ஒரு துறையில் பயிற்சி இவைகளெல்லாம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும். அனுபவக்கல்விக்கு இணையாக வேறு எதுவும் ஈடு இணயில்லை.
இது போன்று வேறு பல பயிற்சிகளையும் மித்ரா நமது இளைஞர்களுக்கு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். மித்ராவின் நோக்கம் என்னவோ இந்தியர்களுக்கு வர்த்தக வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்பது தான் அதன் பட்டியலில் வருகின்ற முதல் கடமை. அதனையும் விட்டுவிடாது, வெறும் பயிற்சிகளை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல், வர்த்தக மேம்பாட்டுக்கும் உதவ வேண்டும். பல திறன்களையும் அவர்களுக்கு அளிக்க வேண்டும்.
மித்ராவின் மேல் நமக்கு நம்பிக்கை உண்டு. அதன் கடமையிலிருந்து அது தவறாது என நம்பலாம்.
No comments:
Post a Comment