பரிட்சையில் தோல்வி. பரிட்சையில் பாதி தோல்வி பாதி வெற்றி, பரிட்சையில் 1ஏ, 5ஏ, 5பி அல்லது எல்லாவற்றிலும் முழு தோல்வி அல்லது முழு வெற்றி என்று இப்படித் தான் பரிட்சை முடிவுகள் இருக்கும்! வெற்றி பெற்றிருந்தால் வாழ்த்துகள்! வெற்றி பெறாவிட்டால் உலகம் உருண்டு ஓடிவிடும் என்றில்லை!
எல்லாவற்றுக்கும் தீர்வுகள் உண்டு. பரிட்சையில் தோல்வி அடைந்தால் அதற்கும் தீர்வுகள் உண்டு. மீண்டும் பரிட்சை எழுதுவது ஒரு வழி. அது தேவை இல்லை என்று நினைத்தால் பல்வேறு வழிகள் உள்ளன. அனைத்தும் கல்வி அமைச்சு உங்களுக்காக வழி அமைத்துக் கொடுத்திருக்கின்றது.. எல்லா வழிகளும் சரியான பாதையை நோக்கித்தான் செல்கின்றன. அதன் வழி நீங்கள் பட்டதாரி ஆகலாம். அதனைத் தவிர்த்து டிப்ளோமா கல்வி அல்லது சான்றிதழ் கல்வி என்று உங்கள் தகுதியை உயர்த்திக் கொள்ளலாம்.
மேற்குறிப்பிட்ட கல்வி அனைத்தும் உங்களது பெற்றோர்களுக்குச் செலவு வைக்காத கல்வி என்று நினவிற் கொள்ளுங்கள். கல்வியாளர்கள் பலர் நல்ல பல வழிகளைக் காட்டுகின்றனர். உங்களிடம் உள்ள கைபேசிகளிலேயே அனைத்து தகவல்களையும் திரட்டிவிடலாம். எந்த ஒரு செலவும் இல்லாமல் உங்கள் கல்வியைத் தொடரலாம். ஒரு சிலர் உங்களுக்குத் தவறான வழிகளைக் காட்டத்தான் செய்வர். ஒன்று பணம் கட்ட சொல்வர் அல்லது அரசாங்கக் கடன் கிடைக்க ஏற்பாடுகள் செய்யலாம் என்பர். ஒன்றுமே வேண்டாம். எல்லாம் இலவசமாகக் கிடைக்கும் போது கடன் எதுவும் வேண்டாம்.
தோல்விகளைப் பற்றி கவலையே வேண்டாம். உங்களுக்கும் சிறந்த எதிர்காலம் உண்டு. மூலையில் முடங்கிப் போக வேண்டாம். இப்போது உள்ள இளைஞர்கள் பலருக்குக் கணினி அறிவு உண்டு. நீங்கள் தான் கொஞ்சம் முயற்சிகள் எடுத்து உங்களுக்குத் தேவையான தகவல்களைத் திரட்டிகொள்ள வேண்டும். கல்வி அமைச்சு நல்ல பல திட்டங்களை இளைஞர்களுக்காக அமைத்துக் கொடுத்திருக்கிறது. அவைகளைப் பயன்படுத்திக் கொள்வது நமது இளைஞர்களின் கடமை. இந்த நேரத்தில் நீங்கள் ஏமாறாமல் இருப்பதும் உங்கள் கடமை. பணத்தைக் கொடுத்து ஏமாறாதீர்கள். ஒரு தடவைக்கு ஆயிரம் தடவை விசாரியுங்கள். சரியான தகவல்களைப் பெற்று உங்களது எதிர்காலத்தை அமையுங்கள்.
தோல்விக்கு அடுத்து வெற்றி தான் என்பதை மறவாதீர்கள்!
No comments:
Post a Comment