நம்மில் பலர் இன்று வெற்றியைப் பற்றி நினைத்தால் நாளையே வெற்றி பெற்றுவிட வேண்டும் என்கிற எண்ணத்தைக் கொண்டிருக்கிறோம்!
அப்படியெல்லாம் வெற்றி வந்து விடாது. வெற்றியடைய வேண்டும் என்கிற போதே தோல்வி அடைந்துவிட்டால் .......? என்னும் பயம் ஒருபக்கம் வலுவாக இருந்தால் நீங்கள் வெற்றிக்குத் தயாராகவில்லை என்பது தான் அதன் பொருள்!
வெற்றி என்றால் வெற்றி தான். வேறு சிந்தனைகள் தேவை இல்லை. போகிற போக்கில் மேடு பள்ளம் இருக்கத்தான் செய்யும். அது தோல்வி அல்ல. வெற்றியை நோக்கிய பயணம் என்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு சிறிய தோல்வி கூட மனதளவில் நமக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். 'அப்படித்தான் நான்' என்று நீங்கள் நினைத்தால் வெற்றியைப் பற்றி நீங்கள் கனவில் கூட நினைக்கக் கூடாது. வெற்றி பெற வேண்டும் என்று வந்துவிட்டால் வேறு வகையான தாழ்வான எண்ணங்களைத் துடைத்து ஒழிக்க வேண்டும். வெற்றி பெற வந்த பிறகு அப்புறம் ஏன் தோல்வியைப் பற்றிய பயம்? ஏன் தோல்வியைப் பற்றிய சிந்தனை?
வெற்றி பெற வேண்டும் என்கிற உங்களது எண்ணம் வலுவானதாக இருந்தால் உங்களின் வெற்றியை யாராலும் தடுத்துவிட முடியாது. நதி கடலை நோக்கித்தான் ஓட வேண்டும் என்றால் யார் அதனைத் தடுக்க முடியும்? அது தானே அதன் இலக்கு. உங்கள் இலக்கும் அப்படித்தானே இருக்க வேண்டும். போகிற பாதையில் சிறிய சிறிய தடங்கல்கள் இருக்கத்தான் செய்யும். தடைக்கற்கல் இருக்கத்தான் செய்யும். அதனை அப்புறப்படுத்திவிட்டுத்தான் வெற்றியை நோக்கி நாம் நகர வேண்டும். தடைகளை நிரந்தரம் என்று நினைக்கும் போக்கை நாம் கைவிடவேண்டும்.
வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணம் வலுவாக இருந்தால் அதுவே போதும். வலுவற்ற எண்ணங்கள் நம்மை வலுவிழக்கச் செய்துவிடும். வெற்றியை நாம் அனைவரும் விரும்புகிறோம். அந்த விருப்பம் கடைசிவரை நம்மோடு இருக்க வேண்டும். எந்தக் குழப்பமும் நமக்கு வேண்டாம்.
வெற்றி பெற நீங்கள் தயார் என்றால் வெற்றி உங்களைத் தேடி வரும். வெற்றி பெற நினைப்பவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!
No comments:
Post a Comment