Friday 21 October 2016

பிச்சை எடுத்தாவது....!


குழந்தைப் பிறந்ததும் ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி! அதைவிட வேறு மகிழ்ச்சி எதனோடும் ஒப்பிட முடியாது! குடும்பத்திற்குக் குதூகலத்தைக் கொண்டு வருவது குழந்தைகள்!

குழந்தைப் பிறந்ததும் நமது மகிழ்ச்சியை எப்படி வெளிபடுத்துகிறோம் என்பதை நாம் பெரும்பாலும் கவனிப்பதில்லை. அது தான் முக்கியம். 

ஒரு குழந்தையின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் நீங்கள் உதிர்க்கும் உங்கள் சொற்களில் அடங்கியிருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.

தமிழகத்தின் தமிழ் அறிஞர், தமிழ் கடல் நெல்லை கண்ணன் அவர்கள் தனது சொற்பொழிவின் போது உதிர்த்த ஒரு கருத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன். தன்னை உயர்ந்தவனாகக் காட்டிக் கொள்ளுபவனும் தன்னைத் தாழ்ந்தவனாகக் காட்டிக் கொள்ளுபவனும் எப்படிப் பட்ட சிந்தனை ஓட்டத்தைக் கொண்டிருக்கிறான் என்பதற்காக இதனைச் சொல்லுகிறேன்

குடும்பத்தில் ஒரு ஆண் குழந்தைப் பிறந்ததும் ஒரு பிராமணன் - அவன் சமையல் வேலை செய்யும் ஏழைப் பிராமணனாக இருந்தாலும் சரி - அவன் வாயிலிருந்து வரும் முதல் வார்த்தை "நம்ம வீட்டுலே ஒரு கலக்டர் பிறந்துட்டான்'டி!" என்று மனைவியைப் பார்த்து சொல்லுவனாம்! அதுவே பெண் பிள்ளையாக இருந்தால் "நம்ம வீட்டுலே ஒரு டாக்டர் பிறந்துட்டா" என்று மகிழ்ச்சியடைவானாம்! அதுவே சராசரி தாழ்ந்த சிந்தனை உடையவன்: 'ஆம்பளப்புள்ள! பயப்படாத! பிச்சை எடுத்தாவது உனக்குக் கஞ்சி ஊத்துவான்!"

நாம் இங்கு பயன் படுத்தும் வார்த்தைகளைச்  சாதரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. நம்மை அறியாமல் நமது அறியாமையால் உதிர்க்கப்படும் வார்த்தைகள் தான்.ஒருவன் தாழ்வதற்கும் உயர்வதற்கும் நமது வார்த்தைகள் தான் காரணம். மனதில் உள்ளது அப்படியே வெளியாகிறது!

நாம் எவ்வளவு தான் தாழ்ந்த நிலையில் இருந்தாலும், நாம் எவ்வளவு தான் ஏழையாய் இருந்தாலும், , சாப்பட்டுக்கே வழியில்லாமல் இருந்தாலும் நமது சிந்தனை மட்டும் தாழ்ந்த நிலையில் இருக்கக் கூடாது என்பது மிக மிக முக்கியம். எல்லாக் காலத்திலும் நமது எண்ணங்கள் உயர்வாகவே இருக்க வேண்டும்.

பாரதி என்ன பணத்திலே மிதந்தவனா? ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழியில்லை! . ஆனாலும் "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!" என்று பாடியவன். அப்படி எண்ணங்கள் உயர்வாக இருக்க வேண்டும்.

குழந்தைகள் தானே நாம் சொல்லுவது விளங்கவாப் போகிறது என்று நினைப்பது தவறு. குழந்தைகளுக்கு நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் என்பது தெரியும்; புரியும்! பேசத்தான் தெரியாது! வயிற்றிலிருக்கும் குழந்தைக்கே நாம் வெளியே பேசிக் கொள்ளுவது தெரியும் போது, வெளியே இருக்கும் குழந்தைக்குப் புரியாதா, என்ன?

மேலும் இது போன்ற வார்த்தைதைகளை நாம் ஏன் பேச வேண்டும்? நமது சிந்தனைகளில் கூட இது போன்ற எதிர்மறை வார்த்தைகளை நமது சிந்தனைக்கு வருவதை நாம் தடை செய்ய வேண்டும்!

பிச்சை எடுத்தாவது என்று ஏன் சொல்ல வேண்டும்? நாம் என்ன பரம்பரைப் பிச்சைக்காரர்களா? பிச்சை எடுப்பவர்கள் கூட அப்படிச் சொல்ல மாட்டார்கள். ஆனால் சராசரி தமிழன் அதனைத் தாராளமாகப் பயன்படுத்துகிறான்!

நமது தமிழ்ப்படங்கள் சராசரி தமிழனை மிகவும் காயப்படுத்துகின்றன.  சினிமா தயாரிப்பாளன் தான் வேற்று மொழிக்காரன். வசனம் எழுதுபவன் தமிழ் அறிந்தவன் தானே? அறிவுள்ளவன் தானே? நேர்மறையான வார்த்தைதைகளைப் பயன்படுத்தக் கூடாது என்பதைக் கூட அறியாதவனா அவன்?

நாம் மனது அளவிலும் அந்தப் பிச்சைக்காரத்தனத்தை வளர்த்துக் கொள்ளக் கூடாது. அதே சமயத்தில் குழந்தைகளுக்கு அதனை அடிக்கடி ஞபாகப்படுத்த்க் கூடாது.

குழந்தைகளுக்கு  நல்ல செய்திகளைக் கொடுங்கள்.  நல்லதை மட்டும் பேசுங்கள். டாக்டராக வரவேண்டும், வழக்கறிஞராக வரவேண்டும்,  பிரதமராக வரவேண்டும், முதலைமைச்சரகா வரவேண்டும், அரச அதிகாரியாக வரவேண்டும் என்று சிறு குழந்தையிலிருந்தே  சொல்லிச் சொல்லி ஊக்கமூட்டுங்கள். அப்படி ஒன்றுமே தெரியவில்லை என்றால் பெரிய உத்தியோகம் பார்க்க வேண்டும் என்று சொல்லி வளருங்கள்!  எதைச் சொன்னாலும் அது உயரிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.

அது சரி! இப்படியெல்லாம் சொல்லி வளர்த்தால் அவன் அப்படியே ஆகிவிடுவானாக்கும் என்று கேட்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். ஆமாம், அந்தப் பிராமணர் அப்படி சொல்லுகிறாரே அதற்காக பிரமாணர்கள் எல்லாம் கலக்டர் ஆகிவிட்டார்களா, இல்லை!  அப்படி ஒரு எண்ணத்தை உருவாக்கக் காரணம் அவனது எண்ணங்கள்  கீழ் நோக்கிப் போகக் கூடாது என்பது தான் அதன் நோக்கம். இது இல்லையென்றால் வேறொன்று, அதன் மூலம் உயர்வது.

ஆனால் "பிச்சை எடுத்தாவது!" என்னும் எண்ணத்தை வளர்த்தால் என்ன ஆகும்? அவனைச் சுற்றி கீழ்த்தட்டு மக்களாகவே இருப்பர். கீழே போகப்போக மக்கள் இன்னும் கீழ்நிநிலையை நோக்கியே பயணம் செய்வர்! அவன் தேர்ந்தெடுக்கும்  வேலையும் கீழான வேலையாகவே இருக்கும். அவனைச் சுற்றி குடிகாரக் கூட்டமாகவே இருக்கும். அவன் எல்லக் காலங்களிலும் வறுமைக் கோட்டிலேயே நடந்து கொண்டிருப்பான்.

பாருங்கள்! ஒரு சொல் எப்படி ஒரு குழந்தையை மாற்றிவிடுகிறது! கபாலி படத்தை இயக்கிய பா. ரஞ்சித் அவர்களின் தாயாரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில்: என் பையன் பெரிய ஆளாக வருவான் என்று எனக்கு அப்பவே தெரியும்!  ஆமாம்! அவர்கள் பிள்ளைகள் எல்லாம் நன்கு படித்து நல்ல நிலையில் இருக்கிறார்கள். அவர் ஒரு ஏழைத் தாய். ஆனாலும் அது எப்படி அவரால் முடிந்தது?  அவர் குழந்தைகளுக்குக் கொடுத்த ஒரே செய்தி: நல்லா படித்து நல்லா வா!  அது தான் அவர் கொடுத்த செய்தி.

அது போதுமே!   அப்படிச் சொன்னாலே போதும்! வேறு ஒன்றும் வேண்டாம்! தொடர்ந்து மந்திரம் போல் பிள்ளைகளின் காதில் ஓதிக் கொண்டே இருங்கள்! நன்கு படித்து, நல்லா வா!

உங்கள் குழந்தைகள் உன்னத நிலையை அடைய வாழ்த்துகள்!









No comments:

Post a Comment