Tuesday 25 October 2016

ம.மு.க. தமிழைப் புறக்கணிக்கிறதா?


People's Progressive Party (PPP) என்றும் தமிழிலே மக்கள் முற்போக்குக் கட்சி என்று அழைக்கப்படும்  ம.மு.க.தமிழைப் புறக்கணிக்கின்ற வேலையைச் செய்கின்றதா என்று நாம் யோசிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

சமீபத்தில் நடைப்பெற்ற ஒரு நிகழ்வைப் பார்க்கின்ற  போது அப்படித்தான்  ஒரு முடிவுக்கு நாம் வரவேண்டியுள்ளது.

ஜாலான் பெட்டாலிங் (Jalan Petaling) அறிவிப்புப் பலகையில் தமிழைப் புறக்கணித்துவிட்டு அங்கு வங்காள மொழியைப் பயன்படுத்திருப்பதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

இது ஒரு தவறான ஆரம்பம். தமிழைப்புறந்தள்ளிவிட்டு, வங்காள மொழியை கொள்ளைப்புற வழியாகக் கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன என்பது நமக்குப் புரிகிறது. ஒரு முறை ATM - ல் வங்காளா மொழியை நான் பார்க்க நேர்ந்தது.  அதன் பின்னர் எதனையும் காணோம். ஆனால் ஏதோ வேலைகள் நடக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. அதற்கும் சரியான பதிலை அரசாங்கம் வைத்திருக்கும். காரணம் கேட்டால் ATM - மைப் பயன்படுத்துதுபவர்களில் வங்காள தேசிகள் முதன்மையாக இருக்கிறார்கள் என்பதாகப் பதில் வரும்!

இன்னொன்றையும் நாம் மறத்தலாகாது, வங்காள தேசிகளின் பிள்ளைகள் இப்போது, பூமிபுத்ரா என்னும் அந்தஸ்தோடு, பல பதவிகளை அலங்கரிக்கிறார்கள்! அவர்களுடைய ஆதிக்கம் பலம் பெற்று வருகிறது. மொழி விஷயங்களில் அவர்களடைய ஊடுருவல் நமக்குப் பாதகமாக அமையலாம்! நமது அரசாங்கமும் தமிழின் மீதான பிரச்சனைகளில் நமக்கு எதிராகவே இருக்கிறது.

நமது பிரதமர் நமக்கு அள்ளிக் கொடுப்பார். ஆனால் ஒரு அரசாங்கக் கடைநிலை ஊழியன் அதனை நமக்குக்  கிள்ளிக் கொடுப்பான்! இதனை நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். நம்மைப்  பிரதிநிதிக்கிறவர்கள்   எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறார்கள்!


இந்த நிலையில் தான் கூட்டரசு பிரதேச துணையமச்சர் டத்தோ லோகபாலமோகன் நம் கண்முன் வருகிறார். அவருடைய அதிகாரத்திற்கு  உட்பட்ட  ஒரு இடத்தில் தான் இது நடந்திருக்கிறது. நாட்டின் அங்கீகரிக்கபட்ட மொழியினை ஒதுக்கிவிட்டு வேற்று மொழியைக் கொண்டு வரவேண்டுமென்றால் அதனை "ஏதோ தவறு நடந்திருக்கிறது" என்று ஒதுக்கிவிட முடியாது. தெரியாமல் இது நடக்கவில்லை. தெரிந்துதான் இது நடந்திருக்கிறது. அதுவும் துணை அமைச்சருக்குத் தெரியாமல் நடந்திருக்க வழியில்லை.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள  வரவேற்பு வளையத்தில் வங்காள மொழி பயன்படுத்தப் பட்டிருக்கிறது.என்றால் அது எப்படி நமது நாட்டில் அங்கீகரிக்கப்படாத ஒரு மொழியை பயன்படுத்த முடியும்? துணை அமைச்சருக்கும் வங்காள மொழிக்கும் என்ன சம்பந்தம்?

ஏற்கனவே ம.மு.க. தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் தமிழ்ப்பள்ளிகள் தேவை இல்லை என்று சொல்லிக் கொண்டிருப்பவர். அவர் வழி வந்த டத்தோ லோகபாலமோகன் என்ன சொல்ல வருகிறார்?  தலைவர் தமிழ்ப்பள்ளிகள் வேண்டாம் என்கிறார். இவர் தமிழே வேண்டாம் என்று சொல்ல வருகிறாரோ!

அவர் தமிழ் மொழிக்கு எதிரி என்றால் அது அவருடைய தனிப்பட்ட பிரச்சனை. அவர் அதனைத் தனிப்பட்ட - சொந்த வாழ்க்கையில் - அதனைத் தவிர்க்கலாம்.. ஆனால் அவர் ஒரு துணையமச்சர். இந்தியர்கள் சார்பில் அவர் அங்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்குப் பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ அவர் தமிழ் மொழியை ஆதரித்துத் தான் ஆக வேண்டும்என்று நாங்கள் எதிர்பார்ப்பது யாரும் தவறு என்று சொல்ல முடியாது. அது அவரது கடமை. ஓர் இனத்தை பிரதிநிதிக்கும் ஒர் அமைச்சர், அந்த இனத்தின் தாய் மொழியைப் புறக்கணிப்பது,  மிகவும் கண்டிக்கத்தக்கது.

அமைச்சர் பதவியில் இருப்பவர்கள் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். முதுகில் குத்துபவர்களாக இருக்கக் கூடாது! பதவியில் இருந்து கொண்டு சொந்த இனத்திற்கே துரோகம் செய்வது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ஏதோ ஒரு ம.இ.க. தலைவர் .இந்த சமுதாயத்திற்குத் துரோகம் செய்தார் என்பதற்காக அவரையே ஒரு வழிகாட்டியாக எடுத்துகொண்டு அரசியலுக்கு வரும் ஒவ்வொருவரும் அவரையே பின்பற்றினால் அப்புறம் உங்கள் இனத்தைக் காப்பது யார்? அந்தப் பொறுப்புணர்ச்சி என்பது உங்களுக்கு எங்கே போயிற்று?

ம.மு.க. தமிழுக்கு ஆதரவாக இல்லை என்பதற்கு அவர்களுடைய ஆங்கில விக்கிப்பெடியா வைப பார்த்தாலே போதும்.. அவர்கள் தங்கள் கட்சியின் பெயரை ஆங்கிலம், மலாய், சீனம் ஆகிய மொழிகளில் எழுதியிருக்கிறார்களே தவிர தமிழில் எழுதவில்லை. அதனை நாம் கேட்டால் நாங்கள் பல்லினக் கட்சி, இந்தியர் கட்சி அல்ல என்பார்கள்! பல்லினக் கட்சி என்றால் தமிழ் தேவை இல்லை என்பது தான் அவர்கள் கொள்கையோ என்பதும் நமக்குப் புரியவில்லை!

எப்படியோ பல அமைப்புக்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்த பின்னர் அந்த வரவேற்பு வளையத்தில் வங்காள மொழி அகற்றப்பட்டு தமிழ் மொழி புகுத்தப்பட்டு இருக்கிறது.

இதில் நாம் மகிழ்ச்சி அடைய ஒன்றும் இல்லை. வங்காள தேசிகளை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. அவர்கள் தங்கள் மொழிக்காக எதனையும் செய்வார்கள். அரசாங்கமும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறது. கொடுக்க வேண்டியதைக் கொடுத்து அவர்கள் காரியம் சாதிப்பவர்கள்.

நாம் விழிப்போடு இல்லையென்றால் இது போன்ற புறக்கணிப்புக்கள் தொடரும் என்பது நிச்சயம்.  ந்மது அரசியல் தலைவர்களுக்கு எப்படிப் பாடம் புகட்டுவது என்பதை யோசிக்க வேண்டும்.

விழித்திருப்போம்! செயல்படுவோம்!







No comments:

Post a Comment