Wednesday 12 October 2016

ஜெயவாவுக்காக குழந்தைகள் சித்திரவதை!


 தமிழக முதலமைச்சர் உடன் நலன் குன்றிருப்பது ஒன்றும் புதிய செய்தி அல்ல. அவர்  நல்ல உடல் நலம் பெற்று மீண்டும் தனது பணிகளைத் தொடர வேண்டும் என்பது நமது விருப்பமும் கூட.

ஆனால் அவரின் தொண்டர்கள் செய்கின்ற சில அடாவடித்தனங்கள் நம்மை முகம் சுளிக்க வைக்கின்றன.

ஏழைக்  குழந்தைகளைப் பிடித்து இழுத்து வந்து அவர்களுக்கு அலகுக் குத்தி அம்மாவுக்காக வேண்டுதல் செய்வது நியாயமாகப் படவில்லை! பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு ஏதோ கொஞ்சம் பணம் கொடுத்து இது போன்ற கொடுரச் செயல்களைச் செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. இப்படி செய்வதன் மூலம் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. எப்படிப் பார்த்தாலும் ஒருவர் நலம் பெற இது போன்ற கொடூரச் செயல்கள் உதவப் போவதில்லை!

இப்படி ஏழைக் குழந்தைகளை அழவைப்பதன் மூலம் - அலகுக் குத்துவது மூலம் - ஒருவர் உடல் நலம் பெற முடியுமென்றால் வேறுவினையே வேண்டாம்! பணம் உள்ளவன் - பதவியில் உள்ளவன் - ஒவ்வொருவனும் இப்படி ஏழைக் குழைந்தைகளைப் பிடித்து வந்து குழந்தைகளை அழ வைத்து வேண்டுதல் செய்ய ஆரம்பித்து விடுவான்!

ஒரு வேளை சம்பந்தப்பட்டவர்களின் குழந்தைகள் இது போன்ற வேண்டுதல் செய்தால் அதனால் பயன் கிடைக்கலாம். கொஞ்சமும் சம்பந்தம் இல்லாதவர்கள் என்றால் அதனால் எந்தப் பயனும் இல்லை!

கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால்  ஒன்று மட்டும் புரிகிறது. அவருடைய முக்கிய ஆதரவாளர்கள் பலர் - குறிப்பாக அவர்கள் வீட்டுப்பிள்ளைகள் -  எங்கோ போய் ஒளிந்து கொண்டார்கள் என்று நிச்சயம் சொல்லலாம்!

ஆதரவாளர்கள் என்றால் சராசரியான  ஆதரவாளர்கள் அல்ல. வெறித்தனமான ஆதரவாளர்கள்! எப்படி?  அவருடைய புனித பாதங்களைத் தொட்டுக் கும்பிடுவது! அவருடைய செருப்பை தொட்டுக் கும்பிடுவது! அவருடைய கார் சக்கரங்களைத் தொட்டுக் கும்பிடுவது! அவர் மிதித்து நடந்த மண்ணை புனித மண் என்று  தொட்டுக் கும்பிடுவது! அம்மா ஒரு கோயில் அவர் முன் நான் செரூப்புபு அணிய மாட்டேன் என்று சொல்லுவது! அவருடைய ஹெலிகாப்டர் மேலே பறந்தால் கீழே அதன நிழலைத் தொட்டுக் கும்பிடுவது!

இவர்களெல்லாம் வேறித்தனமான ஆதரவாளர்கள் என்று சொல்லுவதில் தவறில்லையே! இப்போது இவர்களெல்லாம் எங்கே போனார்கள்? அப்போல்லோ மருத்துவமனையின் வாசற்படியைத் தொட்டுக் கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்களோ! அவர்கள் வீட்டுப் பிள்ளைகளை வெளிநாடுகளுக்குச் சுற்றுப் பயணத்திற்கு அனுப்பி விட்டார்களோ!

இவர்களைப் போன்ற தீவிர ஆதரவாளர்கள் தான்  இந்த நேரத்தில்  அம்மாவுக்குப் பக்க பலமாக இருக்க வேண்டும். அம்மாவிடமிருந்து பல வகைகளில் பயன் பெற்றவர்கள் இவர்கள். இவர்களும் இவர்கள் வீட்டுப் பிள்ளைகளும் தான் அம்மாவின் நலனுக்காக எதையும் செய்ய தயாராக இருக்க வேண்டும். இதில் ஏழை வீட்டுக் குழந்தைகள், பணக்கார வீட்டுக் குழந்தைகள் என்றெல்லாம் பாகுபாடு காட்டக்கூடாது.

ஏழை வீட்டுக் குழந்தைகளுக்கு ஏதோ அப்போதைக்கு அவர்களின் பெற்றோர்களுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டு அவர்கள் வீட்டுப் பிள்ளைகளை அலகுக் குத்தி அழ வைப்பது மனிதாபிமானமற்றச் செயல். இது குழந்தைகளைக் கொடூரப்படுத்துகின்ற ஒரு செயல். கொடுமைப்படுத்தி அவர்களைக் கதற வைப்பது அறிவற்ற ஒரு செயல். எந்த வகையிலும் சம்பந்தமில்லாத ஒரு நபருக்காக இந்தக் குழந்தைகளைச் சித்திரவதை செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது.

அவர்கள் ஏழைகள். அவர்கள் ஏழைக் குழந்தைகள்.இந்தக் குழந்தைகள் பெற்றோர்களுக்குப் பயந்து அலகுக்குத்த சரி என்று தலையை ஆட்டுகின்றனர்.இப்படிக் குழந்தைகளைச் சித்திரவதை செய்வதே ஒரு பாவமான செயல். ஒரு பாவச் செயல் எப்படி ஒரு நோயாளிக்கு நல்லதைக் கொண்டு வரும்? இது போன்ற செயல்கள் நோயாளிக்கு இன்னும் துன்பத்தைத் தான் விளைவிக்கும்!

எப்படிப் பார்த்தாலும் குழந்தைகளைச் சித்திரவதை செய்து ஒரு நொயாளியைக் குணப்படுத்த நினைப்பது ஏற்புடைய  செயல் அல்ல.

அம்மாவின் தீவிர ஆதரவாளர்களே செய்ய வேண்டிய ஒரு செயலை - அதனை அவர்கள் ஏழைக்குழந்தைகளின் மீது  திருப்பிவிட்டு - தாங்கள் தப்பித்துக் கொள்ளுவதை எந்த வகையிலும் நாம் ஆதரிக்க முடியாது. நியாயப்படுத்தவும் முடியாது!

இது குழந்தை சித்திரவதையே!

முதல்வர் நலம் பெற்று மீண்டும் தனது பணிகளைத் தொடர இறைவனை இறைஞ்சுகிறோம்!










No comments:

Post a Comment