Tuesday 25 April 2017

"வெட்டிப் பேச்சல்ல..! இது நிஜம்..!" தமிழில் பிரதமர்!


கடந்த காலங்களில் இந்தியர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த, அரசாங்கத் தரப்பிலிருந்து,  எத்தனையோ உறுதிமொழிகள், எத்தனையோ வாக்குறுதிகள் - ஆனால் எதுவும் நடக்கவில்லை! அது சாமிவேலு காலத்திலிருந்து தொடர்கிறது; இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது! நாமும் நம்பிக் கொண்டிருக்கிறோம்; இன்னும் நம்புவோம்! காரணம் அரசாங்கத்தை நம்பியே ஆக வேண்டும் என்னும் ஒரு காட்டாயச் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம்!

அரசாங்கம் இந்தியர் நலனுக்காக எத்தனையோ கோடிகள், தமிழ்ப்பள்ளிகளுக்காக எத்தனையோ கோடிகள்  - எல்லாம் கொடுக்கப்பட்டன - என்பது உண்மை தான். ஆனால் இந்தப் பணம் எதுவும் இந்தியர் நலனுக்காகவோ, தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காகவோ பயன்பட வில்லை என்பதே அரசாங்கத்தின் மீது உள்ள குற்றச்சாட்டு! யாரிடம் இந்தப் பணம் கொடுக்கப்பட்டது? இது ஒன்றும் சிதம்பர ரகசியம் அல்ல. ம.இ.கா. வில் உள்ளவர்கள் மட்டும் சம்பந்தப்பட்டிருந்தால் இந்தப் பிரச்சனை இந்நேரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும். ஆனால் அம்னோவும் சம்பந்தப்பட்டிருப்பதால் ஏதோ ஒன்றுமே நடவாதது போல அனைத்தும் அடங்கிப் போய்விட்டது!

அதை விடுவோம்! இப்போது இந்த நிகழ்வுக்கு வருவோம். புத்ரா வாணிப மையத்தில், ம.இ.கா. வினரின் கூட்டமொன்றில், பிரதமர் நஜிப் இந்தியர்களின் வாழ்வாதரத்தை உயர்த்த 50 கோடி வெள்ளி பெருந்திட்டத்தை அறிவித்திருக்கிறார். அதுவும் தமிழில்: இது வெட்டிப் பேச்சல்ல! இது நிஜம்! என்று அழுத்தம் திருத்தமாக அறிவித்திருக்கிறார்!

ம.இ.கா. வினர் கை தட்டி வரவேற்றிருக்கின்றனர்! ஆச்சிரியப்பட ஒன்றுமில்லை! அடுத்த தேர்தலில் யார் யாருக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பில்லையோ அவர்களுக்கு இந்தப் பணம் ஏதோ ஒரு வகையில் உதவியாக இருக்கலாம்!

இருந்தாலும் நான் அவநம்பிக்கையை விதைக்க விரும்பவில்லை. நாமும் நம்புவோம். பிரதமர் அறிவித்திருக்கிறார். அவரைக் கொஞ்சமாவது நம்புவோம்.

இந்தப் பெருந்திட்டம் எந்த வகையில் இந்தியர்களுக்கு உதவும்? மலேசிய இந்தியர்களைப் பொருளாதார ரீதியில் உயர்த்துவது, உயர்கல்வி பெற உதவி,  தொழில்முனைவர்கள் கடன்பெற ஒரு சுழல் நிதி,  நாட்டில் உள்ள  அனைத்து கல்விக்கழகங்களிலும்  இந்திய மாணவர்களை ஏழு விழுக்காடாக உயர்த்துதல் - இன்னும் பல வழிகளில் இந்தியர்களின் மேம்பாட்டுக்காக இந்த மாபெரும் பெருந்திட்டத்தில் அடங்கியுள்ளது.

வரவேற்கிறோம்! ஏற்கனவே இந்தத் திட்டங்களையெல்லாம் நாம் கேட்டவைகள் தான்! ஆனால் இந்த முறை வேறு கோணத்தில் நாம் பார்ப்போம். இந்த முறை இது வெட்டிப் பேச்சல்ல! நிஜம்! என்பதாகத் தமிழில் சொல்லியிருக்கிறார்! நிச்சயம்  நடக்கும் என எதிர்பார்ப்போம்!

இது தேர்தல் வாக்குறுதி அல்ல என அவரே  சொல்லியிருப்பதையும் கவனித்தில் கொள்ளுவோம்!

ஆனால் கடைசியாக ஒன்று. ம.இ.கா.வினருக்கு ஓர் ஆலோசனை. "அடுத்த ஐந்து ஆண்டுகளில்",  "அடுத்த தேர்தல் வரை", என்பதை மறந்து விடுங்கள்! அடுத்த ஐம்பது நாள்களில், அடுத்த ஐந்து மாதத்தில், மேற் குறிப்பிட்டுள்ள வற்றில் எதனைச் சாதித்துள்ளீர்கள்  என்பதை ஐந்து மாதங்களுக்குப் பின்னர்  நீங்கள் சொல்ல வேண்டும். நூறு விழுக்காடு என்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை! குறைந்தபட்சம் பத்து விழுக்காடு...?

பிரதமர் சொன்னவைகள் எந்த அளவுக்கு நடமுறைக்கு வந்திருக்கின்றது என்பது மக்களுக்கும் தெரிய வேண்டும் அல்லவா! அடுத்த ஐந்து மாதங்களில் ஒன்றுமே  ஆகவில்லை என்றால் இந்தப் பெருந்திட்டத்தை நாங்களே குப்பைக் கூடையில் போட்டு விடுவோம்! உங்களுக்கு எந்தக் கஷ்டமும் வேண்டாம்!

பிரதமர் சொன்னது போல நாங்களும் உங்களுக்குச் சொல்லுகிறோம், அதே தமிழில்: இது வெட்டிப் பேச்சல்ல! இது நிஜம்! வருகின்ற தேர்தலில் உங்களுக்குப் பூஜ்யம் என்பதை உறுதிப்படுத்துவோம்!

இந்த வெட்டியான் வேலை எல்லாம் உங்களுக்கு எதற்கு? அரசாங்கம் கொடுக்கும் போது நீங்கள் ஏன் தடையாயிருக்கிறீர்கள்? இந்தியர்களின் முன்னேற்றத்திற்கு ம.இ.கா. தான் தடை என்பதை  அனைவரும் அறிந்திருக்கிறோம்.

நல்லது செய்ய கற்றுக்கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்!


No comments:

Post a Comment