Sunday 23 April 2017

ஸாகிர் நாயக்கிற்கு நல்லதொரு அறிவுரை!






ஸாகிர் நாயக் இந்த அறிவுரையை ஏற்றுக் கொள்ளுவரா என்று தெரியவில்லையே!

ஆம், ஜொகூர் சுல்தானா ராஜா ஷாரித் சோஃபியா சொன்ன அந்த அறிவுரை ஸாகிர் நாயக் ஏற்றுக்  கொள்ளலாம். அது அவருக்கும் நல்லது. அவர் சார்ந்த நாட்டுக்கும் நல்லது. ஏன்? மலேசியாவுக்கும் நல்லது.

நாம் பொதுவாக சொல்லுவதுண்டு. மரியாதைக் கொடுத்து மரியாதை வாங்க வேண்டும் என்று. அது ஏதோ போகின்ற  போக்கில் சொல்லப்படுகின்ற வார்த்தையாக நாம்  எடுத்துக் கொண்டு விட்டோம்!

சுல்தானா அதைத்தான் சொல்லுகிறார். முஸ்லிம்கள், மற்ற சமயத்தினர்   தங்களுக்குக் கொடுக்கப்படுகின்ற மரியாதையை எப்படி ஏற்றுக் கொள்ளுகிறார்களோ அதே போல முஸ்லிம்களும் மற்ற சமயத்தினருக்கு அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைத் தயங்காமல் கொடுக்க வேண்டுமென்கிறார்.

சுல்தானா அவர்களை நாம் பாராட்டுகிறோம். ஜொகூர் மாநிலத்தின் உயர்ந்த நிலையில் இருக்கின்ற, அரசக் குடும்பத்தை சேர்ந்த,  அவரைப் போன்றவர்கள் தான் இப்படிப் பேச முடியும்.

நாட்டு மக்களை வழி நடத்தும் அரசியல்வாதிகள் இப்படி ஒரு வார்த்தைச் சொல்லவே தயங்குகின்றனர். மற்றவர்களை இகழ்வது, மற்ற மதத்தினரை இகழ்வது என்பதெல்லாம் நமது பண்பாடல்ல! நமது கலாச்சாரத்திற்கு உகந்தது அல்ல! இதனைக் கல்வறிவற்ற கபோதிகள் பேசினால் 'அவன் ஒரு முட்டாள்' என ஒதுக்கி விடலாம்! கல்வியறிவு உள்ளவர்கள் பேசினால் அவர்களை அறிஞர் என்று சொல்லுகின்ற அளவுக்கு நாம் கீழ் நோக்கிப்  போய் விட்டோம்!

எது எப்படி இருப்பினும் சுல்தானா அவர்கள் தேவையான நேரத்தில் தேவை உள்ள நேரத்தில் அவர் இப்படிப் பேசியிருக்கிறார்.

நாட்டில் இனங்களிடையே, பல சமயத்தினரிடையே பிரிவினகளை ஏற்படுத்தும் யாராக இருந்தாலும் அவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

சமீபகாலங்களில்  நம் நாட்டில் அதிக  அளவில் பேசப்படுகின்ற ஒரு நபர்  என்றால் வெளி நாட்டிலிருந்து இங்கு தஞ்சம் புகுந்திருக்கும் ஸாகிர் நாயக் தான்.இவரின் பின்னணி எதுவும் சரியாக இல்லை! இவர் பெரும்பாலான நாடுகளிலிருந்து ஒதுக்கப்பட்டவர் என்று தாராளமாகச் சொல்லலாம்! ஆனால் மலேசியாவுக்கு இவர் எப்படி நல்லவர் ஆனார் என்பது புரியாத புதிர்! பிற சமயத்தினரைத் தாக்கிப் பேசினால் உடனே மலேசியாவில் நிரந்தரத் தங்குமிடம் கிடைக்கும் என்றால் அதே போலப் பேசுவதற்குப்  பலர் கிளம்பி விடுவர்!

ஜொகூர் சுல்தானா அவர்கள் ஸாகிர் நாயக் போன்றவர்களைப் பார்த்துத் தான் இப்படி ஒரு கருத்தினைக் கூறியிருக்கிறார் என்று தாராளமாகச் சொல்லலாம்! சமீபகாலமாக ஸாகிரின் பேச்சுக்கு நிறைய எதிர்ப்புக்கள் கிளம்பியிருக்கின்றன!  இந்த எதிர்ப்பினை வைத்தே ஸாகிர், இஸ்லாம் தவிர்த்து, மற்ற மதங்களைப் பற்றி அறியாதவர்  என்பதை  இன்னேரம்  அரசாங்கம் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

அரசாங்கம் புரிந்து கொள்ளவில்லை! அதனால் தான் நேரடியாகவே ஜொகூர் சுல்தானா ராஜா ஷாரித் சோஃபியா களத்தில் இறங்கியிருக்கிறார் என நம்பலாம்!






No comments:

Post a Comment