Thursday 20 April 2017

பணத்தை இறுக்கிப் பிடியுங்கள்!


நடிகர் ரஜினி, கமலைப் பற்றி சமீபத்தில் ஒரு கருத்தைச் சொல்லியிருந்தார். கமலில் அண்ணன் சாருஹாசன் இறந்த பிறகு கமல் எப்படி தனது நிதி நிர்வாகத்தைக் கவனிக்கப் போகிறார் என்பதாக தனது கவலையைத் தெரிவித்திருந்தார். அதாவது சாருஹாசன் தான் அவரது தம்பியின் பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்த்து வைப்பவர்.

உலக நாயகன் கமலின் நடிப்பைப் பற்றி நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. உலக அளவில் பேசுப்படுகின்ற ஒரு நடிகர்.  தமிழ்ச் சினிமாவை உலக அளவில் கொண்டு செல்ல வேண்டுமென்னும் வேட்கை உடையவர். வெவ்வேறு கோணங்களில் படம் எடுத்தவர். பல்வேறு முயற்சிகள். அதில் தோல்விகளும் உண்டு வெற்றிகளும் உண்டு.  கோடிக்கணக்கில் பணம் புரளும் ஒரு தொழிலில் உள்ளவர்.  இன்று வரும் பணம் நாளை போய் விடும்!

ஆனால் சொந்த வாழ்க்கை என்று வரும் போது தனது பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளிக்க அவருக்கு அவரது அண்ணனின் உதவி தேவையாக இருந்தது.

நம்மில் பெரும்பாலோர் பணச் சிக்கல்கள் வரும் போது பெரிய போராட்டமே நடத்திக் கொண்டு வருகிறோம்.  காரணம் நமக்கு நாமே தான் அண்ணனாகவோ, தம்பியாகவோ இருக்க வேண்டி உள்ளது! வழி காட்டுவார் யாருமில்லை!

நமக்கு அண்ணன் என்றால் அது நமது வங்கிகள் மட்டும் தான். நமக்குப் பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ வங்கிகள் தான் நமக்கு அடைக்கலம்! மனிதர்கள் ஏமற்றலாம்! வங்கிகள் தான் நம்பிக்கையானவை!

வாழ்க்கையில் நமக்கு சறுக்கல்கள் வரலாம்.  ஏராளமாகவே வரும். அதனைச் சமாளிக்க நமக்கு வங்கிகள் தேவை. நமது பணத்தைப் போட்டு வைக்க வங்கிகள் தேவை. நமது சேமிப்புக்களைப் போட்டு வைக்க ஒரு இடம் வேண்டுமென்றால் அது வங்கிகள் மட்டும் தான்.

அதைவிட முக்கியம் நீங்கள் எவ்வளவு சேமிக்கிறீர்கள் என்பது! நம் நாட்டில் ஒவ்வொருவரும் ஏதோ  ஒரு வகையில் வங்கியுடன் தொடர்புடையவர்களாக இருக்கிறோம். கார்களை வாங்கிவிட்டு ஒன்பது ஆண்டுகள் மாதாமாதம் வங்கிகளில் தவணைப் பணத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறோம். வீடுகளை வாங்கிவிட்டு முப்பது ஆண்டுகளுக்கு மாதாமாதம் வங்கிகளுக்கு தவணைப்பணம் கட்டுகிறோம். அதனால் வங்கிகள் நமக்குப் புதிதல்ல!

ஆனால் மிகப்பெரிய கேள்வி. உங்கள் சேமிப்பாக மாதாமாதம் வங்கியில் எவ்வளவு கட்டி வருகிறீர்கள்? வங்கிகளில் நீங்கள் மாதாமாதம் கட்டும் கடன்களில் உங்கள் முதல் கடன்  சேமிப்பாக இருக்க வேண்டும். முதலில் சேமிப்பு அதற்குப் பின்னரே வீடு, கார் தவணைகள்.  மற்ற செலவுகள் அனைத்தும் இந்தச் செலவுகளுக்குப் பின்னர் தான்.

பணம் மிக வேகமாக நம்மை விட்டு ஓடக்கூடியது!  கையிலிருந்தால் பணம் வேகமாகச் செலவழிந்து விடும்!  அதனால் தான் நமது முதல் செலவாக நமது சேமிப்பு இருக்க வேண்டும் என்பது. சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுங்கள். நேரம் வரும் போது உங்களை உயர்ந்த நிலைக்குக் கொண்டு போவது உங்களின் சேமிப்பு மட்டும் தான்.

அதனால் பணத்தை இறுக்கிப் பிடியுங்கள்! கொஞ்சம் அசந்தால் அது கையை விட்டு நழுவிப் போய்விடும்! நம்மைச் சுற்றி உள்ளவர்களைப் பார்க்கத்தான் செய்கிறோம். பணத்தை வாரி வாரி இறைத்து பிறகு குப்பைத் தொட்டியாய் போனவர்களை!

பணம்! அது நமது பிடியில் இறுக்கமாக இருக்கட்டும்!




No comments:

Post a Comment