Saturday 8 April 2017

கேமரன்மலை யாருக்கு?



ஆமாம், கேமரன்மலை யாருக்கு? ஏற்கனவே  அங்கே காடுகளை, மலைகளை அழித்து வங்காள தேசிகள் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதாக ஜனநாயக செயல் கட்சியின் பகாங் மாநில செயலாளர் திரு சிம்மாதிரி  ஒரு முறை எழுதியிருந்ததாக  நினைவு!

இப்போது அவர்கள் நாட்டுக் குடிமக்களாகி வாக்குகள் போடுகிற அளவுக்கு வளர்ந்திருப்பார்கள் என நிச்சயமாக  நாம் நம்பலாம்!. அரசாங்கம் மனது வைத்தால் நடக்க முடியாதது கூட நடக்கும்!

ஆனால் இப்போது விவாதத்திற்கு இலக்காகி இருப்பது கேமரன்மலைத் தொகுதி யாருக்குச் சொந்தம் என்பது தான்.

வருகின்ற பொதுத் தேர்தல் எப்போது என்று தெரியாத நிலையில் இப்போதே கேமரன்மலையில் போட்டியிடப் போகிறவர் யார் என்னும் விவாதம்  களைகட்டத் தொடங்கி விட்டது!.

இப்போது கேமரன்மலை நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் டத்தோஸ்ரீ பழனிவேலு.   ம.இ.கா.வை அவர் பிரதிநிதிக்கிறார்..

ம.இ.கா. வில் ஏற்பட்ட  பங்காளிச் சண்டையால்  பதவியை இழந்தார் பழனிவேலு! அடுத்த தேர்தல் வரை அவர் ம.இ.கா.வின் பிரதிநிதியாகவே இருந்திருக்கலாம். ஆனால் ஏனோ தெரியவில்லை ம.இ.கா. அவரைப் புறக்கணித்து அதனைச் சுயேச்சைத் தொகுதியாக அறிவித்துவிட்டது! தவளையைப் போல  தமிழனும் தனது வாயால் தான்  கெடுவான்!

இந்த நேரத்தில் தான் உள்ளே புகுந்தார் மக்கள் முற்போக்குக் கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ்! மற்ற ம.சீ.ச., அம்னோ கட்சிகளிடம் வம்புக்குப் போவதைவிட ம.இ.க. விடம் வம்புக்குப் போவது ஒரு பிரச்சனையாக இருக்காது என்பது அவரது அனுபவம்!

இரண்டு ஆண்டுகளாக அந்தத் தொகுதியில்,  தான் வேலை செய்து வருவதாக சொல்லுகிறார் கேவியஸ்!  அதனால் தான் அவரைப் பற்றிய செய்திகள் எதுவும் நாம் பார்க்க முடிவதில்லை!  காரணம் இப்போது புரிகிறது! வேலைப்பளு என்பதே சரியாக இருக்கும்!

டான்ஸ்ரீ கேவியஸ் அவர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுக்கிறோம். உங்கள் தொகுதியிலேயே அமிழ்ந்து விடாதீர்கள். கொஞ்சம் வெளியேயும் பாருங்கள். வெளியே தமிழன் இருக்கிறான். தமிழ் மொழி இருக்கிறது. தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன.. உங்களுடைய பங்களிப்பையும் இந்த சமுதாயத்திற்குத் தாருங்கள். தமிழர்கள் வாக்கு எப்படி உங்களுக்குத் தேவை என்று நினைக்கிறீர்களோ அதே போல தமிழர்களின் தேவைகளையும் கொஞ்சம் கவனியுங்கள்.

ம.இ.கா. விற்கு என்ன சொல்ல முடியும்? ஒரு தொகுதியைச் சுயேட்சை என்று அறிவித்து கைகழுவி விட்டீர்கள்!  இனி சொல்லுவதற்கு என்ன இருக்கிறது? கைகழுவி உங்கள் பிரச்சனையை முடித்துக் கொண்டீர்கள்.  முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும்! ஆகப்போவது ஒன்றுமில்லை!

அப்படி என்றால் கேமரன்மலை யாருக்கு?




No comments:

Post a Comment