Thursday 6 April 2017

நஜிப் உண்மையைச் சொல்லுகிறாரா?


நமது பிரதமர் நஜிப் இந்திய வருகையின் போது மலேசிய இந்தியர்களைப் பற்றி கொஞ்சம் அதிகமாகவே புகழ்ந்து தள்ளியிருக்கிறார்!

இந்த நாட்டின் மேம்பாட்டிற்கு இந்தியர்களின் பங்கு அதிகம் தான். மறுப்பதற்கு ஒன்றுமில்லை.

ஆனால் இந்தப் புகழ்ச்சிகளுக்கெல்லாம் நாம் ஒரேடியாக மகிழப் போவதில்லை. சீன நாட்டிற்குப் போனால் சீனர்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுவார். இந்தியாவுக்குப் போனால் இந்தியர்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுவார். இது அரசியல். அரசியல்வாதிகள் அப்படித்தான் பேசுவார்கள்!

பிரதமர் அங்கு தான் இப்படிப் பேசுவாரே தவிர நமது நாட்டில் இப்படிப் பேச அவரால் முடியாது! ஏன்? அம்னோ கூட்டத்தில் அவரால் இப்படி பேச முடியுமா?  மலாய்க்காரர்களுக்கே தெரியும் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு இந்தியர்களின் பங்கு என்ன என்பது. ஆனால் இதனையே அவர் ஒர் அம்னோ கூட்டத்தில் பேசினால் இதுவே ஒரு விதண்டாவாதமாக மாறிவிடும்.

ஒப்புக்கு சப்பாணி என்பார்களே அந்தக் கதை தான்! 

இந்த நாட்டின் வளர்ச்சிக்கு நாம் ஆற்றிய பங்கும் ஆனால் இப்போது நடப்பதற்கும் கொஞ்சம் நினைத்துப் பார்த்தால் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? வயிறு தான் எரியும்! அந்த அளவுக்கு நம் இனத்திற்கு துரோகங்கள் இழைக்கப் படுகின்றன! ஒரு வாங்காளத் தேசிக்கு இந்த நாட்டில் கிடைக்கின்ற வரவேற்பு  இங்குப் பிறந்து வளர்ந்த ஒரு தமிழனுக்குக் கிடைக்கிறதா?  

எந்த அளவுக்கு நமது வளர்ச்சிகள் தடுக்கப் படுகின்றன. நாம் எந்த அளவுக்கு  ஒடுக்கப்படுகின்றோம். எல்லாத் துறைகளிலும் நாம் நசுக்கப் படுகின்றோம். ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல!

உண்மையைச் சொன்னால் நாம் வேண்டாத விருந்தாளியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! நம்முடைய உழைப்பு, நாம் சிந்திய வேர்வை அனைத்தும் மறக்கப்பட்டு விட்டன! இப்போது நம்முடைய குழந்தைகளுக்குப் பிறப்பு சான்றிதழ் எடுப்பது கூட சாதாரண விஷயமாக இல்லை. சட்டம் அனைவருக்கும் ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் தமிழனின் நிலை வேறு. தோட்டப்புறங்களிலிருந்து போகின்ற தமிழனை ' இன்று வா, நாளை வா' என்று இழுக்கடித்தால் அவன் ஒவ்வொரு நாளும் விடுமுறை எடுத்துக் கொண்டு போக முடியாது. இந்த இழுத்தடிப்பு  செய்கின்ற காரணத்தினாலேயே பலர் பிறப்பு சான்றித்ழ்களை எடுக்க முடியாமல் போகிறது. முறைமைகளை எளிதாக்க வேண்டுமே தவிர போகப் போக இன்னும் கடுமையாக ஆக்குவது இன்னும் கூடுதலான பிரச்சனைகளைத் தான் அது ஏறபடுத்துகிறது.

இந்த நாட்டு இந்தியர்களின் உழைப்பை அரசாங்கம் கருத்தில் கொள்ளவில்லை என்பது தான் உண்மை.  அரசாங்கத்தில் வேலை வாய்ப்புக்கள் இல்லை. கல்விகூடங்களில் வாய்ப்புக்கள் இல்லை. எங்கள் மொழி அழிக்கப்படுகின்றது. எங்களது உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

ஆனால் இவ்வளவு இக்கட்டுகளிலிருந்தும் தான் தமிழன் தன்னைத்தானே உயர்த்திக் கொள்ளுகிறான்! அவ்வளவு சீக்கிரத்தில் அவனை எடை போட்டுவிட முடியாது! நிச்சய அவன் வெல்லுவான்! வாழ்க தமிழினம்!

No comments:

Post a Comment