Monday 17 April 2017

வீர விருது பெற்றார் ஜாகிர் நாயக்!


 சர்ச்சைக்குரிய இஸ்லாமிய சமயப் போதகர்,  இந்தியாவின் ஜாகிர் நாயக் இன்று (16.4.2017) நமது மலேசிய நாட்டில்  - அரசாங்கத்தால் கௌரவிக்கப்பட வேண்டிய ஒருவர்  - அதற்குப் பதிலாக வலதுசாரி  இயக்கமான,  பெர்காசா தலவர், இப்ராகிம் அலியின் மூலம்  ஒரு  வீர  விருதினைக் கொடுத்து  கௌரவிக்கப்பட்டார்!

வாழ்த்துகிறோம்!  இதற்கு முன் இதே விருதினை டாக்டர் மகாதிரும் இன்னொருவர் முன்னாள் நிதி அமைச்சர் துன் ஜைனுடினும் கொடுத்து கௌரவிக்கப் பட்டிருக்கின்றனர்.இவர்கள் இருவரும் இந்நாட்டிற்கு செய்த சேவைக்காக, நாட்டின் வளர்ச்சியில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களுக்காக அவர்கள் கௌரவிக்கப் பட்டனர்.

ஒரு வெளிநாட்டவர் என்கிற போது ஜாகிர் நாயக்கே முதல் வெளிநாட்டவர்  இந்த வீர விருதினைப் பெறுகிறவர்.

ஒர் இயக்கம் இது போன்ற விருதுகளை ஒரு நபருக்குக் கொடுக்கிறது என்றால் அதற்குச் சரியான காரணங்கள் இருக்க வேண்டும்.

ஜாகிர் நாயக்கைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் இருக்கலாம். அவர் ஏற்கனவே பல முறை மலேசியாவுக்கு வருகை தந்திருக்கிறார். அவர் இங்கு வருகை தந்த ஒவ்வொரு முறையும் அவர் பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்களுக்கு ஆளாகியிருக்கிறார்!

அவர் இங்கு வரும் போதெல்லாம் மற்ற மதங்களைத் தாக்குவதே அவருக்கு நோக்கமாக இருந்தது. அதுவும் குறிப்பாக இந்து மதத்தைத் தாக்குவது என்பது அவர் மிகவும் விரும்பி செய்யும்  ஒரு கலையாகவே அதனைச் செய்து கொண்டு வந்தார்! பொதுவாக மலேசியாவில் இஸ்லாம் மதத்தைத் தவிர மற்ற மதங்களை விமிர்சிப்பது, தாக்கிப் பேசுவது ஒரு தவறாக  அரசாங்கம் எடுத்துக் கொள்ளுவதில்லை!  அதனை விரும்பவும் செய்தது! காரணம் உள்ளுரில் உள்ளவர்கள் பேசினால் அது அரசியலாகிவிடும்! அதனால் அது ஒரு ஊக்குவிப்பாகவே ஜாகிருக்கு அமைந்தது! அதுவே அவருக்குக் கூடுதல் பாதுகாப்புக் கொடுத்தது!  தான் பிறந்த ஊரான இந்தியாவில் செய்ய முடியாததை அவர் இங்கு செய்து வந்தார்!

இப்போது இந்திய அரசாங்கம் ஜாகிரை கைது செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. இருந்தாலும் அதற்கெல்லாம் அவர் அசறுவார் என்று நினைப்பதற்கில்லை!  தனது நீண்ட நெடிய இஸ்லாமியப் பயணத்தின் போது பல இடையூறுகளைச் சந்தித்தவர்.

இப்போது அவர் இந்தியக் குடிமகனா என்பதே ஐயத்திற்குறியது என்பதையும்  நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்நேரம் அவர் மலேசியக் குடிமகனாகக் கூட ஆகியிருக்கலாம்!  ஒரு மலேசிய குடிமகனாக ஆன பிறகு அவர் மலேசியாவில் எங்கும் இருக்கலாம்! அரசாங்கத்திற்கு அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரிந்திருக்க வேண்டும் என்பதும் அவசியமில்லை!

இந்த வீர விருது என்பது ஜாகிர் இஸ்லாம் மதத்திற்கு ஆற்றிய பங்களிப்புக்காகத் தான் என நாம் நினைப்பதில் பிழையில்லை. அவர் ஓர் இஸ்லாமிய அறிஞர் என்பதில் நமக்கு எந்தவித ஐயமுமில்லை. ஆனால் மற்ற மதங்களை அவர் விமர்சிக்கும்போது அந்த அந்த மதங்களைப் பற்றிய தெளிவை, ஆழ்ந்த அறிவை அவர் பெற்றிருக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம்.

மதங்களிடையே, இனங்களிடையே நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்துவதே அவருடைய தலையாய நோக்கமாக இருக்க வேண்டும். அவர் பெற்ற அந்த வீர விருது உயர்ந்த நோக்கத்திற்காக கொடுக்கப்பட்டிருக்கிறது  என்பதை அறிந்து, புரிந்து அவருடைய வருங்கால சேவை அமைய வேண்டும் என நாம் ஒரு வேண்டுகோளை மிகத் தாழ்மையுடன் விடுக்கிறோம்.

வாழ்த்துகள்!







No comments:

Post a Comment