Friday 21 April 2017

"YOU ARE PERFECTLY ALRIGHT, SIR!"


அந்த இளம் மருத்துவர்,  கடைசியாக அவர் அறையை விட்டு நான் வெளியேறும் போது சொன்ன வார்த்தை:   You are perfectly alright!

அடாடா!  பரவாயில்லையே! இப்படி சில நல்ல வார்த்தைகளை நமது மருத்துவ சமூகம் தெரிந்து வைத்திருக்கிறதே என்று வியந்து போனேன்! அதுவும்இளைய தலைமுறை!

மருந்துகளை விட நம்பிக்கை தரும் வார்த்தைகள்  தான் நோயாளிகளுக்கு மிகவும் தேவை. பெரும்பாலான  நோயாளிகள் கற்பனையான நோய்களுக்கு ஆட்பட்டிருக்கின்றனர் என்பதாகச் சொல்லப்படுகின்றது.அது உண்மையே!

தோட்டப்புறங்களில் நான் பார்த்திருக்கிறேன். மருத்துவ உதவியாளர்களிடம் நோய் என்று வருபவர்கள்  என்ன தான் மருந்து கொடுத்தாலும் அவ்வளவாக திருப்தி அடைவதில்லை. ஊசி போட வேண்டும் என்பதில் தான் குறியாக இருப்பார்கள். அல்லது ஒரு குறிப்பிட்ட ஒரு மாத்திரையைத் தான் கேட்பார்கள். ஒரு ஊசியோ அல்லது அந்த குறிப்பிட்ட மாத்திரையோ கொடுத்து விட்டால் அவர்கள் நோய் தீர்ந்து விடும்!  ஆனாலும் அந்த மருத்துவ உதவியாளர் ஊசி போடுகிறார் என்றால் வெறும் தண்ணீரைத்தான் உடலில் செலுத்துகிறார் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை!  மருத்துவ உதவியாளர் யாருக்கு மருந்து தேவை, யாருக்கு தண்ணீர் தேவை என்பதை தனது அனுபவத்தில் அறிந்தவர். பிரச்சனைகளைத் தவிர்க்க அவர் ஓர் ஊசியைப்  போட்டு அனுப்பிவிடுவார். ஒர் ஊசியும் ஒரு மாத்திரையும் அவர்களுக்கு மனதில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி விடுகிறது!

ஆனால்  நம்பிக்கை தரும் ஒரு வார்த்தை, நோயாளிகளிடம் அன்பாக நாலு வர்த்தைகள் - இவைகள் இன்னும் வலுவானவை.  நம்மில் பெரும்பாலோருக்குக் கற்பனை நோய்களே அதிகம். அப்படியே நோய் இருப்பது உண்மை என்றாலும் சில நேர்மறை வார்த்தைகளை உச்சரிப்பதன் மூலம் நோயின் தனமையைக் குறைத்துவிட முடியும் அல்லது குணப்படுத்தி விட முடியும். இவைகளெல்லாம் மெய்ப்பிக்கப்பட்ட உண்மைகள்.

நமது கற்பனை நோய்களுக்கு முக்கியமான காரணம் நம்மைச் சுற்றி இருப்பவர்களே! யாருக்கோ ஏதோ ஒரு வியாதி.  அவருக்கு உள்ள ஒரு வியாதியை நம்மிடம் கொண்டு வந்து வலிய திணித்து  விடுவார்கள் ஒரு சிலர்.

உங்களுக்கு ஒரு வியாதியும் இல்லை என்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள். மருத்துவர் ஏதோ ஒரு வியாதியின் பெயரைச் சொல்லுகிறார். அதானால் என்ன?  அவர் சொல்லுவது போல  உணவு முறைகளை மாற்றிக் கொள்ளுங்கள். மற்றபடி வியாதியை மறந்து விட்டு எப்போது போல் மகிழ்ச்சியாய் இருங்கள். நாம் வியாதியைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளுவதாலேயே நமக்கு இன்னும் பிரச்சனை அதிகமாகிறது. இன்னும் சிலர் உங்களுக்கு இந்த வியாதி என்று சொன்னதுமே அவர்களைச் சமாதானப் படுத்துவதே  பெரிய வேலையாகி விடும்! இவர்கள் இப்படிக் கலவரப்படுவதால்  இன்னும் இல்லாத நோய்கள் எல்லாம் வந்துவிட்டதாக இன்னும் அதிகம் கற்பனைச் செய்வார்கள்!  மருத்துவர் தனது கடமையைச் செய்கிறார். அவர் மருத்துவர் தான். கடவுள் அல்ல என்பதையும் நினைவில் வைத்திருங்கள்.

மருத்துவர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் எப்போதுமே நேர்மறையாகவே உங்கள் எண்ணங்களை வைத்திருங்கள்.  முக்கிக்  கொண்டும் முணகிக் கொண்டும் இருப்பவர்கள் தான்  வகை வகையானக் கற்பனைகளுக்கு உள்ளாகிறர்கள்!  எனக்கு அந்த வியாதி, எனக்கு இந்த வியாதி என்று அதீத கற்பனைகள் செய்கிறார்கள்! அப்படியே இருந்தாலும் நம்மால் என்ன செய்ய முடியும்? தேவையான சிகிச்சைகளைப் பெற்றுக் கொண்டு நமது வேலைகளைக் கவனிக்க வேண்டியது தான்.    

மருத்துவர் தேவையான சிகிச்சைகளைக் கொடுத்த பிறகு நம்மிடம் என்ன சொல்லுகிறார்? "எல்லாம் சரியாகிவிடும்!" என்று தானே சொல்லுகிறார். அப்புறம் என்ன? எல்லாம் சரியாகிவிடும் என்று நிமிடத்திற்கு நிமிடம் சொல்லிக் கொண்டிருப்போம்! மனதில் ஏற்றிக் கொண்டிருப்போம்!   அதை விட நேர்மறை வார்த்தை என்ன இருக்கிறது?

அனைத்துக்கும் நமது எண்ணங்கள் தான் அடிப்படை. நமது எண்ணங்கள் வலிமையாக இருந்தால் அனைத்திலும் வெற்றியே!

கடைசியாக, மருத்துவர் சொல்லுகிறாரோ, சொல்லவில்லையோ  - அதானாலென்ன, நமக்கு நாமே சொல்லிக் கொள்ளுவோம்:

YOU ARE PERFECTLY ALRIGHT, SIR!                                                                                                                                                                                                                                                                                                    







No comments:

Post a Comment