Wednesday 1 November 2017

தீக்குளிப்பது சரியா...?


சமீபத்தில் இந்திய பாரதீய ஜனதா கட்சியின் தேசியச்  செயலாளர் எச்,ராஜா நிருபர்களிடம் பேசும் போது  தீக்குளிப்புச் சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் திராவிடக்கட்சிகள் தான் என்று குற்றம் சாட்டியிருந்தார். அது சரியா, தவறா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அக்குற்றச்சாட்டு பொய் என்று அப்படியே ஒதுக்கி விட முடியாது.

மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு தமிழ் நாட்டில் மட்டும் ஏன் அதிகமான தீக்குளிப்புச் சம்பவங்கள்? ஒரு சில சம்பவங்கள் மிகவும் இக்கட்டான, கடன் தொல்லைகளால், குடும்பப் பிரச்சனைகளால் ஏற்படுகின்றன என்பது உண்மையாக இருந்தாலும் அது ஏன் தீக்குளிப்பாக இருக்க வேண்டும்?

தி.மு.க. காலத்தில் தீக்குளிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பது உண்மை தான். ஆனால் அ.தி.மு.க. காலத்தில் தான் மிக அதிகமாக நிகழ்ந்திருக்கின்றன. அது எப்படி?

தீக்குளிப்புக் கலாச்சாரத்தை வளர்த்தவர்கள் என்றால் அது அ.தி.மு.க. வினராகத்தான் இருக்க வேண்டும். இவர்கள் காலத்தில் தான் மிக அதிகமாகத்  தீக்குளிப்புச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. 

ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனைக் கிடைத்தால் உடனே அவரின் தொண்டர்கள் தீக்குளிக்கிறார்கள்! ஜெயலலிதா மருத்துவமனைக்குப் போனால் உடனே தொண்டர்கள் தீக்குளிக்கிறார்கள்! கட்சிக்காக அல்ல! ஜெயலலிதாவுக்காக!  ஜெயலலிதாவின் மேல் தொண்டர்களுக்கு அப்படி என்ன பாசம்? இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது தீக்குளித்தவரின் குடும்பத்திற்கு உடனடியாக  நிவாரணத் தொகையாக ஒரு இலட்சம், இரண்டு இலட்சம் என்று அள்ளிக் கொடுப்பது தான்! தீக்குளித்தால் பணம் கிடைக்கும் என்னும் ஒரு கலாச்சாரத்தை வளர்த்து விட்டவர்கள் அ.தி.மு.க. வினர்! வளர்த்து விட்டது மட்டும் அல்ல தீக்குளிக்க ஊக்கமளித்தவர்களும் அவர்கள் தான்! ஒரு ஏழைத் தொண்டன். வேலை வெட்டி இல்லாதவன். காலங்காலமாக கட்சிக்காக பாடுபட்டவன். தெண்டச் சோறு என்று பெயர் எடுத்தவன் என்ன நினைப்பான்? தீக்குளித்தால் தான் தனது  குடும்பத்திற்கு ஏதாவது பண உதவி கிடைக்கும் என்று தான் நினைப்பான்! அது தான் இயல்பு!  இப்படித்தான் இந்தத் தீக்குளிப்பு ஒரு தொடர்கதையாக போய்க் கொண்டிருக்கிறது.  இதன் பின்னணியில் சட்டமன்ற உறுப்பினர்களின்  பங்கும் இருக்கிறது என்றும் நம்பலாம். அவர்களுக்குத்  தனது தொகுதியில் இருந்து ஒருவன் அம்மாவுக்காக தீக்குளித்தான் என்பது பெருமைக்குரிய விஷயம்! இவர்களே ஒரு வகையான தூண்டுதலை ஏற்படுத்தி தொண்டர்களைத் தீக்குளிக்க வைக்கிறார்கள் என்பது தான் உண்மை!

இப்போது அம்மா இல்லை. இனி தீக்குளிப்புக்கள் தொடராது என நம்பலாம். சமீபத்தில் நெல்லையில்  நடந்த தீக்குளிப்பு என்பது கட்சி சார்புடையது அல்ல!  கந்து வட்டியால் மனம் உடைந்து  போன சம்பவம்.  ஆனாலும் இவர்களுக்கு உதாரணம் திராவிடக் கட்சிகள் தான்.

இந்த நேரத்தில் ஒன்றை நினைவு கூற வேண்டும். எச் ராஜா மிகவும் சாதாரணமாக இந்தச் சம்பவங்களுக்கெல்லாம்       பெரியார் ஈ.வே.ரா.  தான் காரணம் என்று சொல்லி விட்டார். ஒன்றை அவர் சொல்லத் துணியவில்லை. ஜெயலலிதா காலத்தில் தான் அதிகமான தீக்குளிப்பு சம்பவங்கள் நடந்தன! அவர் ஒரு பிராமணப் பெண் என்பதால் கண்முன்னே நடந்தவைகளை விட்டுவிட்டு பெரியார் காலத்திற்கு அவர் போய்விட்டார். யார் செய்தாலும் தவறு தவறு தான் என்பதை ராஜா  உணர வேண்டும்!

No comments:

Post a Comment