Monday 6 November 2017

புழுவைத் தின்னக் கொடுத்த வேலைக்காரி!

இன்று பல வீடுகளில் வேலைக்காரப் பெண்கள் தான் குழந்தைகளுக்கு அம்மாவாகவும், அப்பாவாகவும், தாத்தாவாகவும் பாட்டியாகவும் - இப்படிப் பல அவதாரங்களை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்!  இன்றைய   நிலையில் வேலைக்காரிகள் இல்லை என்றால் பாவம்! குழந்தைகளைக் கவனிக்க ஆளில்லை! அது ஒரு குற்றமாகவும் இளந்ததலைமுறைப் பெற்றோர்கள் எடுத்துக் கொள்வதில்லை. காரணம் பணம்!  பணத்தைத் தூக்கி வீசினால் பத்து பேர் வரிசையில் வந்து நிற்பார்கள்! உண்மையே!  பத்து பேர் நிற்கலாம்! ஆனால் பத்து மாதம் சுமந்து பெற்ற தாயின் அரவணைப்பு அந்தக் குழந்தைக்குக் கிடைக்குமா என்பது தான் கேள்விக் குறி. ஏதோ ஒன்றிண்டு விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் அரவணைப்பை விட பலவித ஆபத்துக்களையே இந்தக் குழந்தைகள் எதிர் நோக்குகின்றனர்.

சமீபத்தில் முகநூலில் பார்த்த ஒரு காட்சி மனதை விட்டு அகலவில்லை. ஓரிரு இரவுகள் அதே நினைவு. எப்படி இவர்களால் இப்படியெல்லாம் செய்ய முடிகிறது? குழந்தைக்கு எதனையோ சாப்பிடக் கொடுக்கிறாள் அந்த வேலைக்காரப் பெண். அந்தப்பெண் காட்டப்படவில்லை. அந்தக் குழந்தை இன்னும் பேசப்பழகவில்லை.  ஏறக்குறைய இரண்டு வயது இருக்கலாம். அதன்  முன்னால் ஒரு தட்டில் மீ போன்று கறுப்பு நிறத்தில் ஏதோ வைக்கப்பட்டிருக்கிறது. பார்ப்பதற்கு ஏதோ கறுப்பு நிற மீகூன் போல் இருக்கிறது.  அதனை எடுத்து குழந்தைக்கு ஊட்டுகிறாள். அவள் அதனைச் சாதாரணமாக கையில் எடுத்து ஊட்டுவது போல் அல்லாமல் ஒன்று ஒன்றாக எடுத்து ஊட்டுகிறாள். அவள் ஏன் அப்படிச் செய்கிறாள் என்பது எனக்குப் புரியவில்லை. ஒன்றே ஒன்று அந்தக் குழந்தையின் வாயில் போகிறது.  அது ஒரு புழுவைப் போல - நாக்குப்பூச்சி என்போமே - அப்படி நெளிந்து நெளிந்து அவன் வாயினுள்ளே போகிறது.  உண்மையில் என்னால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது எப்படி? அது எப்படி? அந்த வேலைக்காரப் பெண் சிரிக்கும் சத்தம் கேட்கிறது. அந்தக் குழந்தையிடம் எந்தச் சலனுமும் இல்லை. கீழே வைக்கப்பட்டிருக்கும் அந்தத் தட்டைப் பார்த்துக் கொண்டே இருக்கிறதே தவிர இப்படி அப்படி திரும்பவில்லை. சிரிக்கவில்லை. அந்தக் குழந்தைக்கு ஏதோ தவறு நடக்கிறது என்று தெரிகிறது. ஆனால் சொல்ல முடியவில்லை.  அழகானக் குழந்தை. வசதியானக் குழந்தையாகவும் தெரிகிறது. ஆனால் என்ன செய்வது? பெற்றோர்கள் வந்த பிறகு அவர்களிடம் சொல்லவா முடியும்? பேசத் தெரிந்த குழந்தையாக இருந்தால் அந்த வேலைக்காரப் பெண்ணும் அப்படிச் செய்திருக்க மாட்டாள்.

நான் சொல்லுவதெல்லாம் ஒன்று தான். இப்போது பெரும்பாலும் இந்தோனேசியப் பெண்களே வீடுகளில் வேலை செய்கின்றனர். இவர்கள் பின்னணி நமக்குத் தெரியாது. பெரும்பாலும் ஏழைகள்.  நல்ல குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவும்  இருக்கலாம். கொலைகாரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். அவர்கள் பின்னணி நமக்குத் தெரிந்தால்,  நம்பக்கூடியவர்களை நாம்  நம்பலாம். இல்லாவிட்டால், அந்தக் குழந்தைகளின் தலைவிதி எப்படியோ அப்படித்தான் நடக்கும். அதற்காக இந்தியாவில் இருந்து வருகின்ற பணிப்பெண்கள் அனைவரும் நல்லவர்கள் என்று நான் சொல்ல வரவில்லை. அவர்களும் அப்படித்தான்.

இவைகள் அனைத்தையும் விட  வீட்டில் வயதானவர்கள்  இருந்தால் அவர்கள் இன்னும் பொறுப்போடு கவனித்துக் கொள்ளுவார்கள்.  நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.      உங்கள் குழந்தைகளின் வருங்காலம் உங்கள் கையில்! அந்தப் பொறுப்பை வீட்டு வேலைக்காரப் பெண்ணிடம் ஒப்படைக்காதீர்கள்!

No comments:

Post a Comment