பெற்றோர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். பிள்ளைகளின் கல்வியில் தடையாக இருப்பது என்பது உங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் குற்றச் செயல்களுக்கு இட்டுச்செல்லும் என்பதை மறவாதீர்கள்.
நல்ல கல்வி என்பது என்ன? இன்றைய மலேசிய சூழலில் பல்கலைக்கழகத்தில் ஏதேனும் பட்டம் பெற்று பட்டதாரியாக இருந்தால் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என் நம்பலாம்.
நாட்டில் அரசாங்கம் பெரும்பாலும் இலவச கல்வியைக் கொடுக்கும் போது நாம் ஏன் அதனை வேண்டாம் என்று தவிர்க்க வேண்டும். கல்லூரிகள் எல்லாம் தூரமாக இருக்கின்றன, அருகிலேயே இருந்தால் எங்கள் பார்வையிலேயே பிள்ளைகள் இருப்பார்கள் என்று நினைக்கும் பெற்றோர்கள் இருக்கிறார்கள். அவர்கள் உங்கள் பார்வையில் இருந்து என்ன செய்யப் போகிறீர்கள்?
இடைநிலைக்கல்வியை முடிக்கும்வரை பிள்ளைகள் உங்களோடு தானே இருக்கிறார்கள்? உங்கள் சொற்படி தானே நடந்து கொள்கிறார்கள்? நீங்கள் சரியானபடி தானே அவர்களை வளர்த்திருக்கிறீர்கள். இனி அடுத்த கட்டமாக அவர்களுக்கு என்ன தேவை? அவர்கள் வளர வேண்டும். வெளி உலகம் தெரிந்தவர்களாகவும், புரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்கள் வெளியூர்களுக்குப் போய் படிப்பது என்பது புதிய அனுபவம். புதிய மனிதர்கள். புதிய சூழல். தங்களைத் தாங்களே உயர்த்திக்கொள்ள, திருத்திக்கொள்ள, புரிந்துகொள்ள, உலகை அறிந்துகொள்ள பலவேறு அனுபவங்களைப் பெற இந்த மாற்றம் மாணவர்களுக்குத் தேவை என்பதைப் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். காரணம் அடுத்த கட்டம் அவர்கள் வாழ்க்கையை சொந்தமாகவே எதிர்நோக்கப் போகிறார்கள். அதற்கான முன்னெடுப்புத் தான் இந்த வெளியூர் மாற்றம்.
வெளியே எங்கேயும் அனுப்ப முடியாது, படித்தது போதும், இனி சம்பாதிக்கட்டும் என்று நினைப்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். உள்ளூரில் நிறைய குடிகாரர்கள் இருக்கிறார்கள். குறைவான கல்வி, குறைபாடு உள்ளவர்களிடம் தான் சேரச் சொல்லும். குற்றவாளிகளுடன் தான் கூட்டுச் சேரும். இன்று சிறைச்சாலைகளில் நாம் தானே சிறைகளை அடைத்துக் கொண்டிருக்கிறோம்! அடிபிடி சண்டை என்றால் நாம் தான் முன்னணியில் நிற்கிறோம். இவர்களின் பின்னணியைப் பாருங்கள். அவர்கள் என்ன பட்டதாரிகளா? பட்டதாரிகளா நடுரோட்டில் சண்டை போடுகிறார்கள்?
பெற்றோர்களே! உங்களின் பிள்ளைகளின் கல்வியில் தடைகளாக இருக்காதீர்கள். அவர்கள் படிக்கவில்லை என்றால், முறையான மேற்கல்வி பெறவில்லையென்றால், அவர்களின் வருங்காலத்தையும் நீங்கள் தான் சுமக்க வேண்டும். குடிகாரனை சிறை எத்தனை நாளுக்குத்தான் சுமக்கும்?
No comments:
Post a Comment