கல்வியில் நாம் பின் தங்கியிருக்கிறோம் என்பது ஒன்றும் அதிசயமல்ல.
அதாவது மற்ற இனத்தவரோடு ஒப்பிடும் போது கல்வியில் நமது தரம் தாழ்ந்து தான் இருக்கிறது. மலாய் சமூகம் அரசாங்கம் கொடுக்கும் அத்தனைக் கல்வி வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்கின்றனர். சீன சமூகம் கல்வியில் உயர்ந்து நிற்கின்றனர். அவர்களை நம்பித்தான் தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
பொருளாதாரத்தில் நம்மிடையே பெரிய முன்னேற்றம் இல்லையென்றாலும் கல்வியில் நாம் பின் தங்கவேண்டிய நியாயமில்லை. வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன. அரசாங்க வாய்ப்புகள் நமக்கும் கிடைக்கும் போது அதனைப் பயன்படுத்திக் கொள்வதிலும் நாம் பின் தங்கியிருக்கிறோம் என்பது தான் நமது வருத்தம்.
பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வியில் கொஞ்சம் முனைப்புக் காட்டினால் எல்லாமே சரியாகிவிடும். அனைத்தும் பெற்றோர்களின் கையில் தான். வேறு யாரையும் குற்றம் சொல்வதில் பொருளில்லை. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வியில் அக்கறை எடுக்கவில்லை என்றால் யார் என்ன செய்ய முடியும்? அரசியல்வாதி என்ன செய்வான்? அவன் வீட்டுப் பிள்ளைகளைத்தான் அவன் பார்ப்பான். உங்கள் வீட்டுப் பிள்ளைகளை நீங்கள் தான் பார்க்க வேண்டும்.
வருங்காலங்களில் நமது சமுதாயத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்று நினைத்தால் நாம் ஒவ்வொருவரும் மாற வேண்டும். கல்வியின் மூலம் தான் அந்த மாற்றத்தைக் கொண்டு வரமுடியும். கல்வி கற்றவருக்கு அது புரிகிறது. அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் தான் வளர்கிறார்கள். பதவிகளைப் பிடிக்கிறார்கள். அவர்கள் முன்னேற்றம் தடைபட வழியில்லை. அவர்களைப் போல நம் வீட்டுப் பிள்ளைகளும் சரிசமமாக வரமுடியும்.
நம்முடைய பிரச்சனை எல்லாம் நாம் குடிகாரர்கள் என்றால் அதைவிட்டு வெளியே வருவதில்லை. பரவாயில்லை. நம் பிள்ளைகளை நன்றாகப் படிக்க ஊக்குவிப்புத் தரலாமே? எனக்குத் தெரிந்த நபர் ஒருவரை நான் சரியான அடியாள் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவர் வீட்டுப் பிள்ளைகள் எல்லாம் பட்டதாரிகள்! அவரது வேலை எதுவாக இருக்கட்டும், அவரது பிள்ளைகளுக்குச் சரியான பாதையைக் காட்டிவிட்டாரே. அதுதான் நமக்குத் தேவை. அப்பன் எப்படி இருந்தால் என்ன? பிள்ளைகள்க் கல்வியின் மூலம் உயர்த்தினால் போதும்.
நண்பர்களே! சமுதாய மாற்றம் நம் ஒவ்வொருவர் கையிலும் உள்ளது. நாமும் நமது பங்கை ஆற்ற வேண்டும். வழி தெரியாதவர்களுக்கு வழி காட்ட வேண்டும். யார் மீதும் பொறாமை வேண்டாம்.
கல்வியில் மாற்றம், சமுதாயத்தில் மாற்றம் எல்லாமே நம் கையில் தான். வேறு யார் கையிலும் இல்லை.
No comments:
Post a Comment