ஆளுக்கு ஒரு சட்டம். இனத்தைப் பார்த்து ஒரு சட்டம். இந்த இனத்தானுக்குப் பொருந்தும் சட்டம் அந்த இனத்தானுக்குப் பொருந்தாது. பெரிய பதவியில் உள்ளவனுக்குப் பொருந்தும் சட்டம் சாதாரண மனிதனுக்கு பொருந்தாது.
எல்லாருக்கும் ஒரே சட்டம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அது தான் நடைமுறை. சட்டத்தை யார் மீறினாலும் அவர்கள் மீது சட்டம் பாய வேண்டும். நாமோ "நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே" என்று சொல்லி வளர்க்கப்பட்டவர்கள். நாம் அதைத் தான் ஆதரிக்கிறோம்.
ஆனால் என்ன நடக்கிறது? சட்டம் எப்போதும் ஒன்றுதான். அது சொல்வதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. அமலாக்கம் வரும் போதும் சட்டம் மாறவில்லை. ஆனால் அமலாக்கப்படுத்துவோர் சட்டத்தை மாற்றி விடுகிறார்கள்! அது தவறு என்று தெரிந்தும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு ஏற்றவாறு சட்டம் வளைந்து கொடுக்கிறது! இது தகாது என்று யாராலும் சொல்லவும் முடியவில்லை!
சமீபத்தில் மாநிலமொன்றின் ஆட்சிக்குழு உறுப்பினரின் கார் நடு ரோட்டில் நினறு கொண்டு மற்ற கார்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. ஏதோ சிறிது வாய்த் தகராறு! ஆட்சிக்குழு உறுப்பினர் அப்போது இல்லை. ஓட்டுநர் மட்டும் தான். அந்த ஓட்டுநருக்கு சாலை விதிகள் தெரியாமல் இருக்க முடியாது. யாரும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்கிற எண்ணம் அவருக்கு!
சட்டப்படி என்ன நடந்திருக்க வேண்டும்? அந்த ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஒட்டுநர் மீது கூட அவர்களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை! அப்படியென்றால் நம்மைப் போன்றோர் என்ன நினைப்போம்? இதுபோன்ற சிறிய பிரச்சனைகளுக்கே இவர்களால் எதுவும் முடியவில்லையே அப்படியென்றால் பெரிய பிரச்சனைகளை இவர்களால் எப்படிக் கையாள முடியும்?
ஊகூம்! ஒன்றும் சரியில்லை. இன்றைய நிலையில் என்ன குற்றங்கள் நடந்தாலும் பிரதமர் அன்வார் பெயர் தான் கெடுகிறது என்பதை அரசியல் கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும். இனியும் இதுபோன்ற எது நடந்தாலும் அவர் பெயர் தான் கெடும். வேறு வழியில்லை!
No comments:
Post a Comment