வேறு என்ன சொல்ல? எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, எங்கோ ஒரு வெளிநாட்டில் இப்படி ஆகும் என்று கனவு கூட கண்டிருக்கமாட்டார். ஆனால் நடந்துவிட்டது. நடந்தது நடந்தது தான்! எந்த மாற்றமும் இல்லை.
ஆனாலும் நாமும் ஒன்பது நாள்கள் காத்துத்தான் கிடந்தோம். செய்திகளைக் கேட்டுக் கொண்டு தான் இருந்தோம். அதைத்தான் நம்மால் செய்ய முடியும். அவருக்காக கடவுளை வேண்டினோம். எதுவும் நடக்கவில்லை.
ஒரு சுற்றுப்பயணியான விஜயலெட்சுமி இந்தியா, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். கப்பல் ஏறுவதற்கு முதல் நாள் மஸ்ஜித் இந்தியா நடைபாதையில் நடந்து கொண்டிருந்த போது நிலம் தீடீரென உள்வாங்கியதில் அத்தோடு அவரது பயணம் ஒரு முடிவுக்கு வந்தது.
அதன் பிறகு தீயணைப்புப்படை களம் இறக்கப்பட்டது. காவல்துறை மற்றும் ஏனைய பணியாளர்கள் - சுமார் நூறுக்கு மேல் - அத்தோடு மோப்ப நாய்கள் என பெரும்படையே களமிறங்கியும் எதுவும் ஆகவில்லை.
இனியும் பணிகளைத் தொடர்ந்தால் இருக்கின்ற கட்டடங்களுக்கும் ஆபத்து நேரிடும் என்கிற பயமும் சேர்ந்து கொள்ளவே அனைத்தும் ஒரு முடிவுக்கு வந்தன. யாரையும் குறை சொல்லுவதற்கில்லை. முடிந்தவரை தத்தம் பணிகளைச் சிறப்பாகவே செய்தனர். இறந்தவரின் சடலமாவது கிடைத்திருந்தால் அந்த குடும்பத்தோடு சேர்ந்து நமக்கும் ஒரு மனநிறைவு ஏற்பட்டிருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கில் பயணிகள் நாட்டுக்கள் வருகின்றனர். இப்படி ஒரு செய்தி என்பது இது தான் முதல் தடவை. ஏதோ நம் கண்முன்னே நடந்தது போல, நம்மில் ஒருவர் போல எல்லாம் நடந்து முடிந்துவிட்டது.
இனி இது போன்ற விபத்துகள் நடக்கவே வேண்டாம் என இறைவனை மன்றாடுவோம்.
No comments:
Post a Comment