சாபம் என்பது உண்மையா பொய்யா என்கிற பட்டிமன்றத்திற்குள் நான் போக விரும்பவில்லை.
ஆனால் சமீபகாலமாக நம் இந்தியர்களிடையே பேசுபொருளாக இருப்பது இந்த சாபம். யார் மீது இந்த சாபம்? இந்த அரசாங்கத்தின் மீது தான். அரசாங்கம் என்றாலும் குறிப்பாக நம் பிரதமர் மீது நமது மக்களின் வயிற்றெரிச்சல் கொஞ்சம் அதிகம் என்பது மிகத் தெளிவாகவே தெரிகிறது. ஏமாற்றிவிட்டார் என்பது தான் காரணம்.
அப்படி என்ன தான் பிரச்சனை? ஒன்றா, இரண்டா? எல்லாமே பிரச்சனை தான். நமது மக்கள் ஒவ்வொன்றுக்கும் இந்த அரசாங்கத்தோடு போராட வேண்டியுள்ளதே? நம் இனத்தவர் தவிர வேறு இனத்தவர் யாராவது போராடுகிறார்களா? அப்படி ஒன்றும் தெரியவில்லையே!
முதலில் வேலையில்லா பிரச்சனை. இதற்கு முன்பெல்லாம் எப்படியோ ஏதோ ஒரு வேலை கிடைக்கும். குடும்பத்தைக் காப்பாற்ற முடியும். இப்போது அந்த நிலையும் மாறிவிட்டது. வேலையில்லை என்பது முக்கிய பிரச்சனை.. இப்போது பெரும்பாலோர் சிங்கப்பூரை நோக்கி படையெடுக்கின்றனர். அந்த சிறிய தீவு நம் மக்களுக்கு வேலைகளைக் கொடுக்கின்றனர். இவ்வளவு பெரிய நாடு நம்மைக் கைகழுவுகின்றது!
வேலையில்லாப் பிரச்சனை, சிறு தொழில்கள் செய்ய அனுமதி கொடுப்பதில்லை, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடிவதில்லை, தங்க வீடில்லை வாசலில்லை - இப்படியே சொல்லிக் கொண்டு போகலாம். ஆனால் தலையாயது வேலையில்லாப் பிரச்சனை.
இப்போதைய மக்களின் கேள்வி எல்லாம் - குறிப்பாக இந்தியர்கள் - எப்போதிலிருந்து பிரச்சனைகள் ஆரம்பமாயின என்பது தான். 15-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர், அன்வார் இப்ராகிம் பிரதமர் ஆன பின்னரே இந்தியர்கள் பல துயரங்களைச் சந்திக்கின்றனர் என்பது தான் பொதுவான அபிப்பிராயம். அதற்கு முன்னர் இல்லாத பிரச்சனைகள் எல்லாம் இப்போது மட்டும் ஏன், எப்படி வந்தன என்பது தான்.
அதனால் தான் இந்தியர்கள் தங்களது வயிற்றெரிச்சலையும், சாபத்தையும் அன்வார் அரசாங்கத்தின் மீது கொட்டுகின்றனர் என்று கூறப்படுகின்றது. அதற்குச் சாட்சி தான் சமீபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த பெண்மணி ஒருவரின் அகால மரணம். இது போன்று இன்னும் வரலாம் என்று கூறப்படுகின்றது.
நமக்குச் சாபம் பற்றி ஒன்றும் தெரியவில்லை. சாபம் மீது நம்பிக்கை உண்டு என்றாலும் நாட்டின் மீது எப்படி? மதுரையை எரித்தாளே கண்ணகி அது போன்றா? ஒரு வேளை இன்னும் சோதனைகள் உண்டோ?
No comments:
Post a Comment