வெளிநாட்டுப் பயணம் என்பது, அதுவும் புதிய நாடு ஒன்றுக்குப் பயணம் செய்வது, எத்தகைய ஆபத்தைக் கொண்டுவரும் என்பதை இதோ ஒரு தாய் மூலம் நமக்குத் தெரிய வருகிறது.
எவனோ ஒரு நாதாரி, நேப்பாளத்தைச் சேர்ந்தவன், அவனை நம்பி நேப்பாளத்துக்குப் போனவர், அத்தோடு அவரது வாழ்க்கையை வாழ முடியாமல், துன்ப துயரங்களோடு சிறையில் கழிந்தன. பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் நாடு வந்து சேர்ந்திருக்கிறார்.
நாம் மீண்டும் மீண்டும் சொல்லுவது இது தான். யாரையும் நம்பி ஒரு நாட்டுக்குப் போகாதீர்கள். பாக்கிஸ்தான், வங்காள தேசம், நேப்பாளம் போன்ற நாடுகள் ஆபத்தான நாடுகள் என்பதில் சந்தேகமில்லை. மனித கடத்தல் என்பது இந்த நாடுகளில் சாதாரண விஷயமே. ஏன் மலேசியா கூட இதற்கு விதிவிலக்கல்ல.
இன்னும் பல நாடுகள் உண்டு. வேலை என்று சொல்லி ஏமாற்றும் கும்பல். அங்குப் போனால் வேலையைத் தவிர மற்றவை எல்லாமே உண்டு! எல்லாம் போலி நிறுவனங்கள். கடைசியில் பணம் காலி. அடி, உதை என்று பல்வேறு இன்னல்களுக்கு ஆளானது தான் மிச்சம்.
இப்போதெல்லாம் வேலை தேடி வெளிநாடுகளுக்குப் போவது மிகவும் சாதாரண விஷயம். படித்த இளைஞர்கள் கூட பலவகைகளில் பாதிக்கப்படுகின்றனர். ஏஜெண்டுகள் மூலம் வேலை தேடுவதில் பல சிக்கல்கள் உண்டு. பெரும்பாலான நிறுவனங்கள் போலியானவை. அது பணம் பறிக்கும் கும்பல்.
நீங்களே முயற்சி எடுத்து வேலைகளைத் தேடுங்கள். கூகளில் தேடுங்கள். நிறுவனங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள். எந்தவொரு செலவும் இல்லாமல் நீங்களே முயற்சி செய்யுங்கள். வேலைக்கு ஆள் தேவை என்றால் நிச்சயம் உங்களுக்கு வேலை கிடைக்கவே செய்யும்.
யாரையோ நம்பிப் போனால் அல்லது ஏஜெண்டுகளை நம்பிப் போனால் உங்கள் நிலைமைக்கு யாரும் பொறுப்பில்லை. கஞ்சா கடத்தல்கள் இப்போதெல்லாம் தாராளமாக நடந்து கொண்டிருக்கிறது. இன்று பல நாடுகளில் கஞ்சா கடத்தல்களுக்காக ஆண்களும் சரி, பெண்களும் சரி பலர் சிறையில் தாங்கள் செய்யாத குற்றத்திற்காக வாடுகின்றனர். அதில் நிறைய மலேசிய இந்தியர்கள். இளம் வயதினர்.
இப்போது இந்த அம்மாவின் கதையைக் கேட்டு அதிர்ந்து போகிறோம். ஆனால் இன்னும் எத்தனை அம்மாக்கள் சிறையில் இருக்கின்றனரோ நாம் அறியோம். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் வியட்னாம் நாட்டு சிறையில் ஒரு மலேசியப் பெண் சிறையில் இருப்பதாகப் படித்தோம். நமக்குத் தெரியாத இன்னும் எத்தனை பேர், எத்தனை நாடுகளில் சிரமத்தில் இருக்கின்றனரோ யாருக்குத் தெரியும்? ஆனால் இதில் பலர் மலேசிய இந்தியப் பெண்கள் என்பது தான் சோகம்.
போகாத இடந்தனிலே போக வேண்டாம் என்பதே நமது அறிவுரை.
No comments:
Post a Comment