Thursday, 16 February 2017

மதிப்பும், மரியாதைக்கும் ஏங்குகிற மனம்!


சமீபத்தில் படித்த கட்டுரை ஒன்று கொஞ்சம் மனதை  நெகிழ வைத்தது.

மனிதனின் மனம் எதற்கு எதற்கெல்லாம் ஏங்குகிறது!  வெறும் பணம் மட்டும் தானா வாழ்க்கை? அதனை விட மனித மனம் ஏங்குவது எதற்குத் தெரியுமா?

மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை மனிதன்  ஏங்குவது - மதிப்பு, மரியாதை, பாராட்டு  - இவைகளுக்குத் தான். கேட்பதற்கு இது ஒரு பெரிய விஷயமாக  இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது தான் உண்மை!

அனைவருமே பாராட்டை விரும்புகிறார்கள். அனைவருமே மரியாதையை விரும்புகிறார்கள். அனைவருமே மதிக்கப்பட வேண்டும் என விரும்புகிறார்கள்.

நமது தமிழ்ச் சினிமாவின் தலைநகரான கோலிவூட் பற்றி அறியாத தமிழ் ரசிகன் இல்லை. அங்கு பல ஆயிரக்கணக்கான மிக அடிமட்டத்தில் வேலை செய்கின்ற மிகச் சாதாரண தொழிலாளர்களும்  உண்டு; நிறையவே உண்டு. அவர்களில் லைட்மேன் என்று சொல்லப்படுகின்ற கீழ்நிலைத் தொழிலாளரும் உண்டு. இங்குப் பணிபுரிகிற அனைவருமே முக்கியமானவர்கள் தான். ஒவ்வொருவரின் பணியும் சிறப்பாக அமைய வேண்டும். அப்போது தான் ஒரு திரைப்படம் சிறப்பாக, வெற்றிகரமாக அமையும்.

நாம் எப்போதுமே கதாநாயகனைப் பார்க்கிறோம். கதாநாயகியைப் பார்க்கிறோம். இயக்குனரைப் பார்க்கிறோம். ஆனால் ஒரு திரைப்படம் வெற்றி பெற அனைத்துத் தரப்பும் ஒத்துழைக்க வேண்டும்.  அப்போது தான் வெற்றி என்பது  சாத்தியம்.

இந்த லைட்மேன் என்பவர்களை யாரும் அவ்வளவாகச் சட்டை செய்வதில்லை. பொதுவாகவே கீழ் நிலை ஊழியர்களை அவ்வளவாக யாரும் மதிப்பதில்லை என்பது நாம் அறிந்தது தானே!

ஆனாலும் அங்கும் விதிவிலக்குகள் உண்டு.  சிறியவரோ, பெரியவரோ மதிக்கின்ற பழக்கம் குடும்பங்களிலிருந்து வருவது. அது ஒர் உயர்ந்த குணம்.

இந்த லைட்மேன்களையும் மதித்து ஒரு செய்திப் படம் தயாராகிறது. அவர்களுடைய நல்லது கெட்டது பற்றி இந்தச் செய்திப்படம் விவரிக்கும். ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். நடிகர்களில் இவர்களுக்கு  மரியாதைக் கொடுப்பவர்கள் அஜித், கமலஹாசன் போன்றவர்கள் தான். லைட்மேன்களுக்கு அவர்கள் மேல் நல்ல  அபிமானம் உண்டு.

ஒரு கொசுறு செய்தியாக ஒன்றைச் சொல்லித்தான் ஆக வேண்டும். அஜித் தன்னோடு பணிபுரிபவர்களின் மீது எப்போதுமே அன்பைப் பொழிபவர். முடிந்த வரையில் அவர்களுக்கு உதவும் மனப்பான்மை உடையவர். தன் வீட்டில் வேலை செய்பவர்களுக்குக் கூட வீடு கட்டிக்கொடுக்கும் அளவுக்குப் பெரும் மனம் படைத்தவர்.

இவைகள் எல்லாம் பாராட்டப்பட வேண்டிய விஷயங்கள். ஒரு மனிதனுக்கு வேண்டிய மிக முக்கிய குணங்கள்.

இப்போது நாம் ஒர் உறுதிமொழியை எடுத்துக் கொள்ளுவோம். நமக்குக் கீழே இருப்பவர்களைத் தினசரி வாழ்க்கையில் நாம் சந்தித்து கொண்டு வருகிறோம். அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுங்கள். அவர்களை மதியுங்கள். அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள் தாம் என்பதை உங்களது செயல்பாடுகளின் வழி அவர்களுக்கு உணர்த்துங்கள்.

வாழ்த்துகள்!

No comments:

Post a Comment