Sunday 19 February 2017

நமது சொத்துக்கள் நமக்கே!


ஆமாம்! மலேசிய நாட்டின் மூன்றாவது பெரிய இனம் நாம். நாம் அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளுவது நமது கையில் இல்லை. அது அரசாங்கத்தின் கொள்கை மாற்றத்தால் மாறுபடுகிறது. அவர்கள் வங்காள தேசிகள் தான் வேண்டும் என்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஒர் இஸ்லாமிய தேசத்துக்கு நாம் உதவுகிறோம் என்றால் நாம் அதனைப் பார்த்துக் கொண்டு தான் இருக்க முடியும்!

ஆனால் நான் சொல்ல வருவது அது இல்லை. நமது சொத்துக்கள் நம்மிடமே இருக்க வேண்டும்.

நம்மிடையே பணக்காரர்கள் இருக்கிறார்கள். நடுத்தர மக்கள் இருக்கிறார்கள். இவர்களில் சொந்த வீடு, சொந்த நிலம், சொந்த வியாபாரம் செய்பவர்கள் இருக்கிறார்கள்.  பெரிய வியாபாரம், சிறு வியாபாரம் செய்பவர்கள் இருக்கிறார்கள்.

எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் உங்கள் வீட்டையோ, நிலத்தையோ, வியாபாரங்களையோ விற்க வேண்டும் என்று நினைத்தால் முடிந்த வரை அதனை ஒரு இந்தியருக்கே விற்பனை செய்ய முயற்சி செய்யுங்கள். இது முக்கியம்.

நாம் எல்லாவற்றிலும் அலட்சியமாக இருக்கிறோம். நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று உண்டு. மலாய்க்காரர்கள் தங்கள் நிலங்களை மற்ற இனத்தவருக்கு விற்க முடியாது. அது அரசாங்கத்தின் கொள்கை. சீனர்களுக்கு அது போன்ற அரசாங்க கொள்கைகள் இல்லை. ஆனால் அரசாங்கத்தை விட தங்களுக்குள்ளே கடுமையானக் கொள்கைகளை வைத்திருக்கின்றனர். அவர்கள் மற்ற இனத்தவர்களுக்கு தங்களது சொத்துக்களை விற்பதில்லை. அப்படியே அவர்கள் விற்கிறார்கள் என்றால் அதில் ஏதோ வில்லங்கம் இருப்பதாக அர்த்தம்.

எனது நண்பர் ஒருவர் ஒரு கடைவீட்டை சீன நண்பர் ஒருவரிடமிருந்து வாங்குவதற்கு எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால் அவரால் முடியவில்லை. கூடுதலாகப் பணம் கொடுக்க முன் வந்தும் அவரால் வாங்க முடியவில்லை.

அது தான் சீன சமூகம். அவர்களின் சொத்துக்கள் நாட்டில் கூடுகின்றதே தவிர அவர்களுடைய சொத்துக்கள் எந்தக் காலத்திலும் குறைவதில்லை! குறையாது!

நாம் வழக்கம் போல் எல்லாவற்றிலும் அலட்சியம்! அலட்சியம்! அலட்சியம்! நம்முடைய சொத்துக்கள் நம்மிடமிருந்து பறி போகின்றன, அது பற்றியெல்லாம் நாம் கவலைப்படுவதில்லை. மற்ற இனத்தவர்களுக்குத் தான் நாம் விற்கிறோம். அதுவே நமக்குப் பெருமை தரும் விஷயமாக இருக்கிறது!

 சீனர்களுக்கு உள்ள அந்த இன உணர்வு நம்மிடமும் வரவேண்டும். நாம் எவ்வளவு தான் திறமைசாலியாக இருந்தாலும்  அந்த இன உணர்வு என்ற ஒன்று இல்லாததால் நாம் பின் தள்ளப்படுகின்றோம்.

நமது இனம் முன்னேறுகிறது என்பதை நாம் எப்படி தெரிந்து கொள்ளுவது? நாட்டில் நமது சொத்து விகிதம் குறைகிறதே தவிர, கூடவில்லையே!

தனி மனிதனாக நமது முன்னேற்றம் இருக்கிறதே தவிர ஒரு சமுதாயம் என்று பார்க்கும் போது நாம் இன்னும் மிக மிகக் கீழ் நிலையில் தான் இருக்கிறோம். நம்மால்  ஒன்றுபட முடியவில்லை, சரி. ஆனால் சமுதாய நலன் கருதியாவது நமது சொத்துக்களை நாம் நமது இனத்தாரிடமே விற்க வேண்டும் என்னும் இன உணர்வு நம்மிடம் இருப்பது மிக மிக முக்கியம்.

நான் சொல்ல வருவது இது தான்: நமது சொத்துக்கள் - அவை நிலங்களாக இருக்கலாம், வீடுகளாக இருக்கலாம், வேறு வகையான அசையா சொத்துக்களாக இருக்கலாம் -   அவைகள் நமது இனத்தாரின் கைகளுக்கே விற்கப்பட வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் நமது சொத்துக்கள் அதிகரிக்குமே தவிர, குறைய வாயப்பில்லை!

நமது சொத்துக்கள் நம்மிடமே!

No comments:

Post a Comment