Wednesday 1 February 2017

இனி இளைஞர்கள் என்ன செய்யலாம்?


மெரினா கடற்கரையில் நடைபெற்ற அறவழி போராட்டத்தை நம்மால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.

அறவழி போராட்டத்தை மாணவர்களின் வெற்றியாக ஏற்றுக்கொள்ளாத . அரசாங்கம் கடைசி நாளன்று ரத்தக்கிளறியில் அதனை முடிவுக்குக் கொண்டு வந்தது.

போராட்டம் வெற்றி தான் என்றாலும் அது மகிழ்ச்சியாக அமையவில்லை. பல நூறு மாணவர்கள், மாணவியர்கள் மற்றும் மீனவர்கள் இன்று வரை காணவில்லை. காவல்துறையினரால் கடத்தி வைக்கப்பபட்டிருக்கின்றனர்!

அவர்களின் மீட்புக்காக பலவேறு தரப்பினரின் போராட்டங்கள் தொடர்கின்றன.ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்பதாக முதலைமைச்சர் கூறியிருக்கிறார். நீதிபதி முதலைமைச்சர் துதி பாடுபவராக இல்லாமல் இருந்தால் சரி!

மன்னிக்கவும்!  அரசாங்கம் எதனைச் செய்தாலும் அதனைச் சந்தேகக்கண் கொண்டு தான் பார்க்க வேண்டியுள்ளது!

போராட்டத்தின் போது மாணவர்கள் கொக்கோ-பெப்சி போன்ற குளிர்பானங்களுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பினர். இது முற்றிலும் மாணவர்களின் புறக்கணிப்பு என்றே சொல்லலாம்!

அவர்களும் இந்தக் குளிர்பானங்களைத் தடை செய்யுங்கள் என்று சொல்லவில்லை. புறக்கணிப்புச் செய்ய வேண்டும் என்று தான் சொன்னார்கள். இந்தக் குளிர்பானங்களை புறக்கணிப்பதன் மூலம் உள்நாட்டு விவசாயிகளின் உற்பத்திகள் அதிகரிக்கும். விவசாயிகளும் பயன் அடைவர்.

இந்தக் குளிர்பானங்கள் மட்டும் அல்ல. இன்னும் சிலவும் புறக்கணிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன. இளஞர்கள் நினைத்தால் இதுவும் வெற்றிகரமாக முடியும்.

பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது பாலாபிஷேகம் செய்வது என்பது நமது கலாச்சாரத்திற்கு ஏற்புடையதல்ல. அது நிறுத்தப்பட வேண்டும். ஏழைகளுக்கு நீங்கள் உதவலாம். வீணாக்கப்படும் பாலை ஏழைக்குழந்தைகளுக்குக் கொடுத்து உதவலாம். அல்லது ஆக்ககரமான முறையில் எப்படி உதவலாம் என்பதை யோசியுங்கள்.

இப்போது வரும் பெரும்பாலானப் படங்களில் மதுபானம் அருந்தும் காட்சிகளை அமைக்கின்றனர். இது அரசாங்கத்தின்  சாராய விற்பனை அதிகரிக்க உறுதுணையாக இருக்கின்றது என்பதை மறுக்க முடியாது. இனி வரும் படங்களில் மதுபானம் அருந்தும் காட்சிகள் இருந்தால் அந்தப் படங்களைப் புறக்கணியுங்கள். நீங்கள் புறக்கணிக்கிறீர்கள் என்பதை சினிமா உலகம் அறிந்து கொண்டாலே இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு கண்டுவிட முடியும்.

எல்லாவற்றையும்  விட்டுக்கொடுத்தால் அவனவன் நமது தலை மேல் ஏறிவிடுவான்! அது தான் இப்போது நடக்கிறது! "நான் தமிழன்டா", நான் தமிழச்சிடா" என்று சொல்லுவதையே ஏதோ தேசத் துரோகம் போல் ஒரு சிலர் நினைக்கின்றனர்.

தமிழ் இனத்தைக் கேவலப்படுத்தும் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும். மாணவர்களே1 இளைஞர்களே! அனைத்தும் உங்கள் கையில்.

மீண்டும் நமது இனம் நிமிர வேண்டும்! நாம் தமிழர் என்று தலை நிமிர்ந்து சொல்ல வேண்டும்!

வாழ்க தமிழ் இனம்!



No comments:

Post a Comment