Friday 17 February 2017

எல்லாமே அனுபவம் தான்!


வேலை இல்லா பட்டதாரிகள் நிலை அதிகரித்து வருகிறது. ஏன்? வேலை செய்கின்ற - நடுத்தர வயதைத் தாண்டியவர்கள் கூட - இன்று வேலையில்லாமல் அவதிப்படுகின்ற நிலையைப் பார்க்கின்றோம்.

இன்றைய நிலையில் நாம் சொல்ல வேண்டிய செய்திகள் சில இருக்கின்றன. புதிதாக வருகின்ற பட்டதாரிகள் சில அளவுகோள்களோடு வருகின்றனர். ஒரு பட்டதாரி என்றால் எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்பது மட்டும் அவர்களுக்குத் துல்லியமாகத் தெரிந்திருக்கிறது.

ஆனால் ஒரு முதலாளி, ஒருவர்  வெறும் பட்டம் பெற்றவர் என்பதை வைத்து எதனையும் தீர்மானிப்பதில்லை. முதலில் அனுபவம் பெற்றவரா என்பதைத் தான் முதலில் பார்ப்பார். மற்றவை மொழித் திறன், பேச்சுத்திறன் என்பனப் போன்ற விஷயங்களும் அவருக்கு முக்கியமானவை. அதுவும் தனியார்த் துறைகளில் ஆங்கிலத் திறன் என்பது மிகவும் முக்கியம். அதனால் தான் மாலாய் மாணவர்கள் அரசாங்கத் துறைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

பட்டதாரிகள், பட்டம் பெற்ற உடனேயே அனைத்தும் அவர்கள் காலடியில் வந்து விழும் என்கிற எண்ணத்தை  அவர்கள் மறந்து விட வேண்டும். அந்தக் காலமெல்லாம் மலையேறிவிட்டது. முதலில் என்ன வேலை கிடைக்கிறதோ அதனைப் பற்றிக் கொள்ளுங்கள். இந்த வேளையில் மலாய் பட்டதாரிகளை நான் பாராட்டுகிறேன்.  சிறிய நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள் என்கிற பாகுபாடெல்லாம் அவர்களிடம் இல்லை. ஏதோ ஒரு வேலை. ஏற்றுக் கொள்ளுகிறார்கள். இது போன்ற மனப்பான்மை நமது இளைஞர்களிடம் இல்லை. எந்த ஒரு வேலை செய்தாலும் அதன் மூலம் கிடைக்கின்ற அந்த அனுபவம் என்பது தான் மிக மிக முக்கியம்.

இங்கு நேரடியாக கிடைக்கின்ற அந்த அனுபவம் என்பது உங்கள் கல்லூரியில் உங்களுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை. உங்களுக்கு வெறும் புத்தக அறிவு தான் இருக்கிறது. அது போதாது என்பதால் தான் நிறுவனங்கள் உங்களுடைய  அனுபவத்தைக் கேட்கின்றன.

எனக்குத் தெரிந்த பெண் ஒருவர் கணக்காளராகப்  பட்டம் பெற்றவர். தட்டச்சுப்பொறிகள் பழுது பார்க்கும் ஒரு இந்தியர் நிறுவனத்தில் வேலைச்  செய்து கொண்டு வந்தார். ஓரிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வங்கி ஒன்றில் வேலைக்  கிடைத்தது. தனது வேலையை மாற்றிக் கொண்டார். அந்த சிறிய நிறுவனத்தில் வேலைச் செய்தபோது கணக்கு வழக்குகளை எப்படிக் கவனித்துக் கொள்ளுவது  என்பதை நேரடி அனுபவம் மூலம் தெரிந்து கொண்டார். வங்கியின் நேர்காணலின் போது அவர் ஒருவர் மட்டும் தான் கொஞ்சம் அனுபவம்  உள்ளவராக இருந்தார்! அந்த அனுபவம் அவருக்குக் கை கொடுத்தது!

இப்போது நமது நாட்டில் துரித உணவகங்கள் என்பது நிறைய வேலை வாய்ப்புக்களைக் கொடுக்கின்றன.  நீங்கள் பட்டதாரி என்பதை மறந்து விட்டு ஒரு சாதாரண வேலையில் அங்கு சேர்ந்தால் போகப்போக படிப்படியாக உங்கள் நிலையை உயர்த்திக் கொள்ளலாம். அவர்கள் தலைமையகங்களில் மிகப் பொறுப்புள்ள பதவிகள் உங்களைத்  தேடி வரும்.  இன்றைய நிலையில் பேரங்காடிகள் நிறையவே இருக்கின்றன. எல்லாமே உங்களுக்கு வாய்ப்புக்களை அளிக்கின்றன.

ஆக, முதலில் அனுபவங்களைத் தேடிக் கொள்ளுங்கள். வெறுமனே உட்கார்ந்து கொண்டு ஊர்க்கதைகளைப் பேசுவதை விட ஏதோ ஒரு நிறுவனத்தில் சேர்ந்து உங்கள் அனுபவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்!

No comments:

Post a Comment