Wednesday 22 February 2017

கல்வி கற்ற சமுதாயமாக மாறுவோம்!


இன்று நமது இந்திய மாணவர்களுக்கு அரசாங்கக் கல்லுரிகளில் நிறையவே வாய்ப்புக்கள் அளிக்கப்படுகின்றன. இதனை நான் கண்கூடாகவே  பார்க்கிறேன்.

இந்த வாய்ப்புக்களைப் பலர் பயன்படுத்திக் கொள்ளவே செய்கின்றனர். ஆனால் ஒரு சிலர் தூரத்தைக் காரணம் காட்டி வாய்ப்புக்களை தவற விடுகின்றனர்.  பெண் பிள்ளைகளைக் கூட இப்போதெல்லாம் பெற்றோர்கள் தொலைவிலுள்ள  கல்லுரிகளுக்கு அனுப்பவே செய்கின்றனர்.

நமது பிள்ளைகளை நாம் நம்பத்தான் வேண்டும். அவர்கள் படிக்கத்தான் போகிறார்கள். சபா, சரவாக் போன்ற மாநிலங்களாக இருந்தாலும் அவர்களது நோக்கம் ஒன்றே: கல்வி மட்டுமே!

இப்படி வெளி மாநிலங்களுக்குப் படிக்கப் போகும் மாணவர்களுக்குக் குறிக்கோள் ஒன்று தான். பட்டதாரியாக வேண்டும்   

பெற்றோர்களே!  பிள்ளைகளைப்  படிக்க விடுங்கள். பட்டம் பெறப் போகிற மாணவர்களை, குழந்தைகளைப் போல் பார்க்காதீர்கள். அவர்கள் முதிர்ச்சி பெற்ற மாணவர்கள்.  அவர்கள் கெட்டுப் போவார்கள் என்றெல்லாம் நீங்களே ஒரு முடிவுக்கு வராதீர்கள்.  கெட்டுப்போக நினைப்பவன் நமது கூடவே இருந்தாலும் அவன் கெட்டுத்தான் போவான்! இதனையெல்லாம் ஒரு காரணமாகச் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

கல்வி என்பது இன்றைய நிலையில் எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் அறியாதவர் அல்ல. இன்று பல குடும்பங்களின் முன்னேற்றங்கள் பிள்ளைகளின் கல்வியை வைத்துத் தான் ஆரம்பிக்கப்படுகிறது.. ஆமாம்! ஒருவன் கல்வி கற்றால் அந்தக் குடும்பத்திற்கே ஒரு வழிகாட்டல் கிடைத்து விடுகிறது.

ஓர் ஐந்து பிள்ளைகள்  உள்ள ஒரு குடும்பம்.  இரண்டாவது மகன் மட்டுமே படித்தவன். படித்த பின் அவனுக்குத் தலை நகரில் வேலை கிடைத்தது. அந்த ஐந்து பேரையுமே அவனுடன் கூட்டிக் கொண்டான்.அனைவருக்கும் தலைநகரிலேயே வேலை வாங்கிக் கொடுத்தான். இப்போது அந்த ஐந்து பேரின் பிள்ளைகள் அனைவரும் மருத்துவர்களாக, வழக்கறிஞர்களாக, விமானிகளாக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வேலை செய்து கொண்டும், அங்கேயே குடியுரிமை பெற்றுக் கொண்டும் வாழ்கிறார்கள். இது தான் கல்வி கொடுக்கும் வாய்ப்புக்கள். இத்தனைக்கும் அவர்கள் தோட்டப்புறத்தில் வாழ்ந்த ஒரு ஏழைத்தாயின் பிள்ளைகள்.  இது தான் கல்வி தரும் சிறப்பு.

உங்கள் பிள்ளைகளுக்குக் கல்வியைக் கொடுங்கள்.  அலட்சியப் படுத்தாதீர்கள். நமது சமுதாயத்தின் முன்னேற்றம் கல்வியால் மட்டுமே முடியும். கல்வியைக் கொடுத்துவிட்டால் அவர்கள் அவர்களது வாழ்க்கையைக் கவனித்துக் கொள்ளுவார்கள்.

தமிழ்ச் சமூகம் எல்லாக் காலங்களிலும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த சமூகம். அதனை நாம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். படித்த சமுதாயமாக பெயரெடுக்க வேண்டும்.

கல்வி கற்ற சமுதாயமாக மாறுவோம்!


No comments:

Post a Comment