Saturday 4 February 2017

நாம் பின்பற்ற வேண்டிய மனிதர் நாகராஜ்!


ராம்ராஜ் காட்டன் என்பது தமிழகத்தில் மட்டும் அல்ல - தென்னிந்திய அளவில் - மிகவும் பிரபலமான ஒரு.நிறுவனம்.

உலகளவில்,  வேட்டி கட்டும் இந்தியர்கள்  எங்கெல்லாம் இருக்கிறார்களோ,  அங்கெல்லாம் ராம்ராஜ் வேட்டிகள் பிரபலம்.

உலகளவில் பிரசித்திப்பெற்ற ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் உரிமையாளர் நாகராஜ் அவர்கள். மிகவும் சக்தி வாய்ந்த ஒரு மனிதர். நாம் பின்பற்ற வேண்டிய ஒரு முன்னோடி.

அழிந்து கொண்டு வந்த நமது பண்பாட்டைத் தூக்கி நிறுத்தியவர் நாகராஜ்.  வேட்டிக்கட்டும் பழக்கம்குறைந்து கொண்டு வந்த காலக்கட்டத்தில் அதனை அழிய விடாமல் காத்து நின்றவர் நாகராஜ் அவர்கள்.

வேட்டி கட்டுவதே கேவலமான ஒன்றாக இருந்த காலக்கட்டத்தில் வேட்டி கட்டுவதை ஒரு பெரும் பேறாக இந்த உலகத்திற்கு எடுத்துக் காட்டியவர் நாகராஜ்.

நமது பண்பாட்டுச் சின்னமான வேட்டி அணிவதை தமிழர்கள் புறக்கணித்த போது  தனி ஒரு மனிதராக நின்றுஅந்தக் கலாச்சாரத்தை நிலை நாட்டியவர் நாகராஜ்,. வேட்டி ஏழைகளின் அணிகலன் என்பது  போய் இப்போது அனைவரும் பயன்படுத்தக் கூடிய அணிகலன் என்னும் இன்றைய நிலைமைக்குக் கொண்டு வந்தவர் அவர்.

நாகராஜ் அவர்களின் தொழில் ஈடுபாடு என்பது நம் அனைவராலும் பின்பற்றப்பட வேண்டிய ஒன்று. தொழில் செய்ய வேண்டும் என்னும் ஆர்வம் அவருக்கு இருந்தது. அவருடைய ஆரம்பமே வேட்டியில் இருந்து தான் ஆரம்பமாகிறது. பணம் சம்பாதித்து பெரிய ஆளாக வரவேண்டும் என்பதை விட நெசவாளர்களுக்கு உதவ வேண்டும் என்னும் வேட்கை தான் அவரிடம் மிகுந்திருந்தது. அவரின் தொடக்கமே அந்த நெசவாளர்கள் தான்!


ராமராஜ் நிறுவனத்தின் நிறுவனர் அவராக இருந்தாலும் மற்றவர்களைப் போல அவரும் சம்பளம் வாங்கும் ஒரு தொழிலாளியாகத்தான் அந்த நிறுவனத்தில் பணி புரிகிறார்! கோடிக்ணக்கில் பணம் புழங்கும் ஒரு நிறுவனம் தான் ராம்ராஜ் காட்டன். ஆனால் அங்கிருந்து வரும் வருமானம் என்பது மீண்டும் அந்த நிறுவனத்திலேயே முதலீடு செய்யப்படுகிறது. வேறு தொழில்களில் முதலீடு செய்யப்படுவதில்லை! அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கே பணம் செலவிடப்படுகிறது.

இப்படிச் செய்வதனால் நெசவாளர்களுக்கான வேலை வாய்ப்புக்கள் அதிகரிக்கப்படுகின்றன. உற்பத்தியும் அதிகரிக்கப்படுகிறது. எவ்வளவு தான் வருமானம் வந்தாலும் அனைத்தும் இந்த ஒரே ஒரு தொழிலுக்கு மட்டும் தான் என்பது தான் நாகராஜ் அவர்களின் அணுகுமுறை!

பணம் என்பதை விட நெசவாளர்களின் நலனே தனக்கு முக்கியம் என்கிறார் நாகராஜ்.

இந்தக் காலத்தில் இப்படி ஒரு மனிதரா என்று நாம் வியக்கத்தான் வேண்டியிருக்கிறது! நாம் வியக்கும் மனிதர் மட்டுமல்ல - நாம் பின்பற்ற வேண்டிய மனிதர் நாகராஜ்! ஒரே ஒரு குறிக்கோளை வைத்துக் கொண்டு அதற்காகவே பாடுபட்டுக் கொண்டிருப்பவர்  நாகராஜ்!

No comments:

Post a Comment