Friday 15 September 2017

பெருமைப்படுவோம்..!


பெருமைப்படுங்கள்! உங்கள் நண்பர்களில் யாராவது பதவி உயர்வு பெறுவர்களானால் அவர்களைப் பெருமைப் படுத்துங்கள்; வாழ்த்துங்கள்! உடன் வேலை செய்யும் ஊழியர்கள் பதவி உயர்வு பெற்றால் அவர்களை வாழ்த்துங்கள்; பெருமைப் படுத்துங்கள். உங்களுக்குத் தெரிந்த நபர்கள் யாரானாலும் நல்ல ஒரு பதவியில் அமர்ந்தால் அவர்களுக்கு வாழ்த்துக் கூறுங்கள்; அவர்களைப் பெருமைப் படுத்துங்கள்.

ஆம்,அவர்களைப்பற்றி பெருமை தான் பட வேண்டுமே தவிர, பொறாமைப் படக் கூடாது. ஒருவரின் முன்னேற்றத்தைப் பார்த்து நாம் பொறாமைப் படுபவர்களாக இருந்தால் அந்தப் பொறாமை என்பது அவர்களைப் பாதிக்காது; பொறாமைப் படுபவர்களைத்தான் பாதிக்கும். நமது எண்ணங்கள் கீழ் நோக்கி இருந்தால் நமது எதிராளியை அது பாதிக்காது, நம்மைத்தான் பாதிக்கும்.

மேலும் வாழ்த்துகின்ற பழக்கம் நமக்கு இருந்தால், மற்றவர்களின் முன்னேற்றத்தைக் கண்டு பெருமைப்படுகின்ற பழக்கம் நமக்கு இருந்தால் அந்தப் பழக்கமே நம்மை உயர்த்தும்.

நமது குழைந்தைகள் பரிட்சையில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தால்  அவர்களை  வாழ்த்துங்கள்; பாராட்டுங்கள்; பெருமைப் படுங்கள். இன்னும் சிலர் மிகக் குறைவான புள்ளிகள் எடுத்திருக்கலாம். அதற்காக குய்யோ, முய்யோ என்று உலகமே இருண்டு போனதாக அவர்களை வையாதீர்கள். அவர்கள் எந்தப் பாடத்திலாவது குறைவான புள்ளிகள் எடுத்திருந்தாலும் அதற்காக அவர்களைப் பாராட்டுங்கள்.  நீங்கள் பாராட்டுவதன் மூலம் அடுத்த முறை அவர்களின் தேர்ச்சி இன்னும் சிறப்பாக இருக்கும். குறைவான புள்ளிகளை எடுத்திருந்தாலும் அதற்காகப் பெருமைப் படுங்கள். யாராக இருந்தாலும் அவர்களைப் பெருமைப் படுத்துவதின் மூலமே அவர்கள் இன்னும் சிறப்பாக செயல்படுவார்கள்.

நம் ஒவ்வொரின் திறன் ஒரே மாதிரி இருப்பதில்லை. நம் விருப்பு, வெறுப்பு  ஒரே மாதிரி இருப்பதில்லை.  அதனால் தான் நம் செயல்பாடுகள் மாறுபடுகின்றன. குறைகளை மிகைப் படுத்தாமல் நிறைகளை மட்டுமே பாராட்டி, உயர்த்தி  ஒருவரைப்  பெருமைப்படுத்தினால் அவரும் உயர்வார், நாமும் உயர்வோம்.

நாம் உயர வேண்டுமானால் மற்றவர்களின் உயர்வில் நாம் பெருமைப்பட வேண்டும்! அவர்களை வாழ்த்த வேண்டும்!  நாமும் வளர்வோம்! அவர்களும் வளர்வார்கள்!

No comments:

Post a Comment