Saturday 23 September 2017

ஏழு சந்தேகப்பேர்வழிகள் கைது...!


சமீபத்தில் டத்தோ கிராமாட்,  சமயப்பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்தில் 23 பேர் மாண்டனர்.  அவர்களில்  21 மாணவர்களும், 2 வார்டன்களும் அடங்குவர்.

இதன் தொடர்பில் ஏழு மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அனைவரும் 11 வயதிலிருந்து 18 வயது வரை உள்ள மாணவர்கள். குறைந்த வயதினராய் இருப்பதால் இவர்களுக்குத் தூக்குத் தண்டனை என்பது சாத்தியமில்லை என்பதாக பிரதமர்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்லினா ஓஸ்மான் கூறியிருக்கிறார்.

ஒன்றை நாம் கவனிக்கிறோம். தீ விபத்து நடந்ததிலிருந்து தீ வைத்தது யார் என்பதில் போலீசார் கவனம் செலுத்தினர். உடனடியாகவும் அதில் வெற்றியும் கண்டனர். 

ஆனால் வேறு ஒரு கோணத்தையும் நாம் பார்க்கிறோம். முதலில் இந்தப்பள்ளியை நடத்துவதற்கு அரசு அனுமதி இல்லை. காரணம் போதுமான பாதுகாப்பு இல்லை. பாதுகாப்பு இல்லாத பள்ளியை நடத்துவதற்கு பள்ளி நிர்வாகத்திற்கு யார் அனுமதி தந்தது? அனுமதி எழுத்தில் இல்லாமல் இருக்கலாம் ஆனால் நிச்சயமாக அது வாய்மொழி வழியாக இருக்க வாய்ப்புண்டு. இல்லாவிட்டால் இந்தப்பள்ளி கடந்த இரண்டு ஆண்டுகளாக எப்படி இயங்க முடியும்? போதுமான பாதுகாப்பு இல்லாமல் ஒரு பள்ளி நடத்த முடியும் என்றால் ..... அங்குக் கையூட்டும்... ஒரு காரணமாகத்தானே இருக்க வேண்டும்!

காவல்துறை வெகு சீக்கிரத்தில் நடவடிக்கை எடுத்து மாணவர்களைக் கைது செய்திருக்கிறது. பாராட்டுகிறோம். ஆனால் முக்கிய குற்றவாளிகளை இன்னும் வெளியே விட்டு வைத்திருக்கிறது என்பது நமக்கு வருத்தத்தை அளிக்கிறது. இந்த மாணவர்களை விட முதல் பெரிய குற்றவாளிகள் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் சட்டத்தை மதிக்காத அமலாக்க அதிகாரிகள் தான்.  மாணவர்களைக் கைது செய்யலாம் காரணம் அவர்களது குடும்பத்தினர் ஒன்றும் சொல்ல முடியாத நிலையில் இருக்கின்றனர்.  ஆனால் தெரிந்தும் தவறு செய்திருக்கிறார்களே அவர்களை ஏன் வெளியே விட்டு வைக்க வேண்டும்? தவறு செய்தவர்கள் யார்?  சமயக்கல்வியைக் கற்றுக் கொடுப்பவர்கள். ஒழுக்க நெறிகளைப் போதிப்பவர்கள்! இவர்களே கையூட்டை வளர்ப்பவர்கள் என்றால் இந்த வருங்கால மாணவர்கள் எப்படிப் பட்டவர்களாக இருப்பார்கள்? அப்படியென்றால் சமயமே கையூட்டை வளர்க்கிறது என்று தானே மாணவர்கள் நினைப்பார்கள்?

ஏழு சந்தேகப்பேர்வழிகள் கைது சரி. மற்றவர்களை இன்னும் வெளியே விட்டு வைத்திருப்பது சரியல்ல!

No comments:

Post a Comment