Wednesday 13 September 2017

ம.இ.கா.வினர் திருந்த வேண்டும்..!


ம.இ.கா.வினர் எதற்கெடுத்தாலும் கோபப்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். என்ன தான் ஆளுங்கட்சியாக இருந்தாலும், என்ன தான் அதிகாரம் தங்கள் பக்கம் இருந்தாலும், என்ன தான் காவல்துறை தங்களுடையது என்றாலும் - தாங்கள் எதற்கு வந்தோம், தங்கள் பணி என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

முதலில் நீங்கள் பணி செய்ய வந்தீர்கள். வீழ்ந்து கிடைக்கும் தமிழர்களுக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதே உங்களின் முதன்மையான பணி. தமிழர் சார்ந்த அனைத்துப் பிரச்சனைகளுக்கும் உங்களால் மட்டுமே தீர்வைக் கொண்டுவர முடியும் என்பது இன்றும் நடைமுறையில் உள்ளது. 

ஆனாலும் சொல்லுவதற்கே கூச்சமாக உள்ளது. சமுதாயம் என்று சொல்லி உங்கள் குடும்பத்திற்கே "முதன்மையான சேவை" என்று அனைத்தையும் மாற்றி அமைத்து விட்டீர்கள்! நாங்கள் என்ன சொல்லுகிறோம். நிமிர்த்த முடியாமல், நிமிர துடிக்கும், ஓர் இனத்தை, அவர்கள் நிமிர கொஞ்சமாகவாவது உதவுங்கள் என்று தான் சொல்லுகிறோம். நீங்கள் மாறுவீர்கள் என்பதற்கான அறிகுறி இதுவரைத் தென்படவில்லை.

பொதுவாக இந்திய சமுதாயம் உங்களைப் பற்றி ஒரு முடிவுக்கு வந்து விட்டது. ம.இ.கா.வினர் அறிவில்லாதவர்கள் என்பதாக மக்கள் ஒரு முடிவு எடுத்து விட்டார்கள். இது ஒரு பிரச்சனை அல்ல. எப்போது பொது நலம் என்று உங்களுக்கு நினைவுக்கு வருகிறதோ அப்போதே உங்களுக்கு அறிவு முதிர்ச்சி ஏற்பட்டு விடும்.

ஆனால் அதைவிட முக்கியம் நமது தமிழ்ப் பத்திரிக்கைகள். அவர்கள் தான் உங்களுக்கு ஆசான். அறிவைப் புகட்டுகிறார்கள். வழியைக் காட்டுகிறார்கள். உங்களின் தவறுகளைச் சுட்டுகிறார்கள். சமுதாயப் பிரச்சனைகளை உங்கள் கண்முன் நிறுத்துகிறார்கள். ஆமாம். நீங்கள் உங்கள் தொகுதிற்கே போகாத போது பத்திரிக்கைகள் தான் உங்களுக்கு வழிகாட்டியாக அமைகின்றன. உங்களின் நன்மைக்காக போராடும் அவர்களை எட்டி உதைக்கிறீர்களே - இது எந்த வகையில் நியாயம்? குண்டர்களை வைத்து குண்டர்த்தனம் செய்கிறீர்களே - ஏற்றுக்கொள்ள முடியுமா?

தயவு செய்து உங்கள் போக்கை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். சமுதாயப்பணியை நீங்கள் மறந்ததினால் தான் இவ்வளவு பிரச்சனைகளும். சமுதாயத்திற்கு நீங்கள் செய்ய வேண்டிய பணிகளைச்  சுட்டிக் காட்டினால் உங்களுக்குக் கோபம் வருகிறது. பொதுத் தேர்தல் வருகின்ற நேரத்தில் என்னன்னவோ அறிக்கைகள் வெளியாகின்றன. இதெல்லாம் வெற்று அறிக்கைகள் என்று அனைவருக்குமே தெரியும்.

நீங்களும் ஒன்றும் செய்ய மாட்டீர்கள். மற்றவர்களும் ஒன்றும்செய்யக் கூடாது. பத்திரிக்கைகளும் அது பற்றி வாய்த் திறக்கக் கூடாது. பொது மக்களும் எதுவும் பேசக் கூடாது.  ஆனால் தேர்தல் வரும் போது மக்கள் ஓட்டுப்  போட  வேண்டும்!   

அடாடா! என்ன எதிர்பார்ப்பு! நீங்கள் பெருமை மிக்க வாழ்க்கை வாழ வேண்டும்.  அதற்குக் குண்டர்களை வைத்து நீங்கள் மற்றவர்களைப் பயமுறுத்த வேண்டும். ஒன்றை மறந்து விடாதீர்கள். அந்தக் குண்டர்கள் நாளை உங்களுக்கும் குண்டர்களாக மாறி விடுவார்கள்!

உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள் அல்லது நீங்கள் திருத்தப் படுவீர்கள்!                                                                                                                                                                              


No comments:

Post a Comment