Saturday 23 September 2017

மலாய்ப் பெயர் தானே? என்ன குழப்பம்?


இப்போது பெயர்களிலே பல குழப்பங்கள்! இதனை வைத்து இஸ்லாமிய இலாக்கா கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது!

சமீபத்தில் ஒரு மனிதர் இறந்து போனார். அவர் மலாக்கா பாபா  நோன்யா வம்சாவளியைச் சேர்ந்தவர்.  நாம் பெரும்பாலும் அவர்களைச் சீனர் என்போம். அவரின் மனைவியோ ஓர் தமிழ் இந்துப் பெண்மணி. இவர்களின் வழிபாடு என்பது  ஆதிமுதல்     பௌத்தம், இந்து சமயத்தைச் சார்ந்தவை.

இங்கு ஏற்பட்ட குழப்பம் அவர்களின் பெயர்கள். இறந்தவரின் தந்தையார், இறந்தவர்,  இப்போது அவரின் பிள்ளைகள் - இவர்கள் அனைவரின் பெயர்களும் இஸ்லாமியப் பெயர்கள். ஆனால் அவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல. அது தான் இங்கு உள்ள பிரச்சனை. அவர்கள் இந்து சமயத்தை வழிபடுகின்றனர். இப்போது அவரின் பிள்ளைகளும் இஸ்லாமியப் பெயரோடு இந்து சமயத்தை வழிபடுகின்றனர்.

ஒரு காலக்கட்டத்தில் இவர்களுடைய தாத்தா - அதாவது இறந்தவரின் தந்தையார் - சீனப்பெயரைக் கொண்டிருந்தார். அந்தக் காலக்கட்டத்தில் கம்யூனிஸ்ட் பயங்கரவாதிகள் சீனர்களைக் கொன்றொழிக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்கள். அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்ள - இந்த நோன்யா பாபாக்கள் - தங்களுடைய பெயர்களை மலாய்ப் பெயர்களாக மாற்றிக் கொண்டார்கள்.  இது தங்களைத் தற்காத்துக் கொள்ள மட்டுமே. மற்றபடி அவர்கள் இஸ்லாமியராக மதம் மாறவில்லை. இதுவே இப்போது இவர்களுக்குக் கலாச்சாரமாகவே மாறிவிட்டது. இவர்களைப் பொறுத்தவரை இது மலாய்ப் பெயர் மட்டுமே, அவ்வளவு தான்!

 இவைகளெல்லாம் அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகள் தான்.  இப்போதும் கூட பல கிறித்துவ பெயர்கள், இந்து பெயர்கள் முஸ்லிம் பெயர்களாக மாற்றம் கண்டுள்ளன. பல சமயத்தினர் வாழ்கின்ற நாட்டில் பெயர்கள் மாற்றம் காணத்தான் செய்யும்.  ஒருவரின் சமயத்தை அடையாளம் காண்பதற்கு அவரின் பின்னணியைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அதனை விட்டு குறுக்கு வழியை நாடுவது சமயத்திற்கு எதிரான செயல். அதைத்தான் இஸ்லாமியத் துறை செய்கிறது! ஒரு இந்துவை, அவர் இறந்த பிறகு, ஒரு இஸ்லாமியராக மாற்றி, அவரை இஸ்லாமிய முறைப்படி  அவரை மையத்துக் கொல்லையில் அடக்கம்  செய்வது - ஒரு பயங்கரவாத செயலுக்குச் சமம்! இறந்த பிறகு ஒரு மனிதரை சமய சாயம் பூசி அவரின் இறப்பிற்குப் பின்னரும் அவருக்கும் அவரின் குடும்பத்துக்கும் நிம்மதியை இழக்க வைப்பது மிகவும் வருந்தத்தக்க செயல்.

ஆமாம்,இறந்தவரின் பெயர் தான் என்ன? மகாட் சுலைமான். (மலாய்ப் பெயர்)  மனைவின் பெயர் பார்வதி சுப்பையா. (இந்துப் பெயர்) மகாட் சுலைமானின் குடும்பத்தினர் தாங்கள் பௌத்த - இந்து சமயத்தைக் கடைப்பிடிப்பவர்கள் என்று விளக்கம் கொடுத்து விட்ட பிறகும் கூட - அவர் இஸ்லாமியர் - என்று படிப்பற்றவர் சொல்லலாம். ஆனால் இவர்கள் சொல்லலாமா?


வருத்தமே!

No comments:

Post a Comment