Sunday 17 September 2017

எம்.ஜி.ஆர். செல்வாக்கு சரிகிறதா...?


இப்போது தமிழகமெங்கிலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

தமிழக மக்களிடையே எம்.ஜி.ஆரின் செல்வாக்கு எப்படி உள்ளது என்பது பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் தமிழகத்தில்  - அவர் உருவாக்கிய அ.தி.மு.க. அரசியல்வாதிகளிடையே - அவர் செல்வாக்கு எப்படி உள்ளது என்று பார்த்தால் அவர்கள் செய்வதெல்லாம் கண்துடைப்பு வேலை! அவ்வளவு தான்! பாராட்டும் விதமாக ஒன்றுமில்லை. 

ஜெயலலிதா உயிரோடு இருந்த போது கூட அவரும் எம்.ஜி.ஆரை கண்டு கொள்ளவில்லை. சென்னையில் எம்.ஜி.ஆர். குடியிருந்த வீடு, கேரளாவில் அவரின் பூர்வீக வீடு - எதைப்பற்றியும் அவரே கண்டு கொள்ளவில்லை. ஜெயலலிதாவுக்கே செய்நன்றி இல்லை என்றால் அவரின் அடிவருடிகளான இன்றைய அமைச்சர்களுக்கு என்ன பெரிய நன்றியுணர்ச்சி இருக்கப் போகிறது?

இந்த நிலையில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா என்பது வெறும் கண்துடைப்பு நாடகம் தானே?

அத்தோடு நாம் நிறுத்திவிட முடியாது. எம்.ஜி.ஆர். தனது படங்களில் நல்ல பல செய்திகளைச் சொல்லியிருக்கிறார். கண்ணதாசன், பட்டுகோட்டையார், வாலி இன்னும் சில கவிஞர்களின் பாடல்களுக்குத் திரையில்  வாயசைத்து நல்ல பெயர் வாங்கியிருக்கிறார்.  தனது படங்களில் பல நல்ல கருத்துக்களையும் சொல்லியிருக்கிறார். 

ஆனால் அவரை ஓர் அரசியல்வாதியாகப் பார்க்கும் போது நமக்கு - தமிழர்களுக்கு - ஏமாற்றமே மிஞ்சும். அவரை நாம் குறைத்து மதிப்பிட வேண்டும் என்பது நோக்கமல்ல. அவர் முதலமைச்சராக பதவி வகித்த போது தமிழ் நாட்டுக்கு அவர் செய்ய வேண்டிய தனது கடமைகளை அவர் செய்யவில்லை. அவர் செய்ய வேண்டியவை அனைத்தும் நாடோடி மன்னன் வசனமாகவே போய்விட்டது!  தமிழனுக்கு அதுவே போதும் என்று நினைத்தாரோ, என்னவோ! அவர் காலத்தில் சாராயக்கடைகளை அவர் அப்படி ஒன்றும் குறைத்து விட வில்லை. தாராளமாகத் தான் ஓடிக் கொண்டிருந்தது!  அரசு பள்ளிகளுக்கு எந்த மேம்பாட்டையும் கொண்டு வந்து விட வில்லை. ஆங்கிலப்பள்ளிகள் அதிகமாகத் திறக்கப்பட்டன. நிறைய மலையாளிகள் உள்ளே நுழைந்தனர். வேறு மறைமுக வேலைகளும் நடந்திருக்கலாம். விவசாயிகளை அவர் தூக்கி நிறுத்தி விட வில்லை. அவர் காலத்தில், அவர் செய்த மிகப்பெரிய கொடுமை ஜெயலலிதா என்னும் நச்சுக்கிருமியை தமிழக அரசியலுக்குக் கொண்டு வந்தது தான்! ஆக, கருணாநிதியின் தொடர்ச்சியாகத் தான் எம்.ஜி.ஆர் விளங்கினாரே தவிர மற்றபடி தமிழகத்தை உயர்த்த வேண்டும் என்னும் எந்த உயரிய  நோக்கமும் அவர்க்கு இருந்தது  இல்லை!

கருணாநிதியும் சரி, எம்.ஜி.ஆரும் சரி, சினிமாவில் தான் தங்களது திறனைக் காட்டினார்களே தவிர, தமிழ் நாட்டு மக்கள் என்று வரும் போது, அவர்கள் சுழியம் தான்!

இன்று நாம் அவரைப் பற்றி பேசுவதெல்லாம் அவருடைய சினிமா சாதனைகள் தான். மற்றபடி அரசியல் சாதனைகள் அல்ல. அவருடைய செல்வாக்கு என்பது சரிய ஆரம்பித்திருக்கிறது! இன்னும் சரியும்! அவர் நல்லவன் என்று தான் பெயர் எடுத்தாரே தவிர வல்லவன் என்று பெயர் எடுக்கவில்லை! 

தமிழகத்தின் ஒரு முதலமைச்சர் தமிழ் நாட்டிற்குப் பயனாக அமையவில்லை என்னும் போது அவரை நினைவு கூறுவதற்கு என்ன இருக்கிறது!

No comments:

Post a Comment